Saturday, January 25, 2025

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம் வேதாரண்யேஸ்வரர்

🛕வேதாரண்யேஸ்வரர் கோயில் - வேதாரண்யம்

🌹நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்த சிறப்பு வாய்ந்த தலம்🌹

இறைவர் திருப்பெயர் : திருமறைக்காடர்,வேதாரண்யேஸ்வரர்,வேதவனநாதர், என்று 
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்,
தல மரம் :வன்னிமரம், புன்னைமரம்,
தீர்த்தம் : வேததீர்த்தம்(எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு். இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.. 

இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.

கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.

இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும்.

இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி திருப்பதிகம் பாடியருளினார்.

இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில்  வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம். திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.

இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம்.

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

அமைவிடம் :
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கல்யாணம் கைகூடவைக்கும் கல்யாணபுரி கல்யாணபுரியீஸ்வரர்..

*கல்யாணம் கைகூட* *வைக்கும் கல்யாணபுரி*
மலையரசனுக்கு மகளாய் அவதரித்த பார்வதியை திருக்கல்யாணம் செய்வதற்காக 
சிவபெருமான் 
இமயமலைக்கு எழுந்தருளினார். 

இதனையறிந்த ப்ரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், வசுக்கள் முதலான தேவர்களும் இமயமலையைச் சூழ்ந்தனர். 

முசுகுந்தன் முதலான அரசர்கள், ருத்ர கணங்கள், மந்தாரமலை முதலானவர்கள் , வாசுகி முதலிய அஷ்டநாகங்கள், வசிஷ்டர் முதலான முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் வடக்கே திரண்டனர்.

அனைவரும் வந்து ஓரிடத்தில் கூட பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென் பாகம் மேலே உயர்ந்தது. 

அனைவரும் அஞ்சி சிவபெருமான் திருவடியை அபயம் என்று பற்றினர். 

சிவபெருமான் அகத்திய முனிவரைப் பார்த்து "நீ எவ்வுயிர்க்கும் தஞ்சம் அருளுபவன்.

அதுவுமின்றி அருளுவதில் எனக்கும் சமமானவன் . 

ஆதலால் பூமி சமநிலை 
அடைய நீ பொதிகை மலைக்குச் சென்று சமன் செய்வாயாக'என்று சிவனார் அருளினார்.
 
அகத்தியர் சிவபெருமானுடைய திருவடியை வணங்கி "தேவரீர் ! திருக்கல்யாணத்தை தரிசிக்க இங்கு வந்திருக்கும் மற்றவர்களைப் போல் அடியேன் புண்ணியம் செய்யவில்லை போலும்" என்று சொல்லி மனம் வருந்தி கண்கலங்கி நின்றார் . 

"அகத்தியனே !
 நமக்கு உன்னளவு உன்னத அன்பர் ஒருவரும் இல்லை . வருந்தற்க . 

நீ செல்லும் வழியில் பாண்டியநாட்டில் திருப்பழம்பதிக்கருகில் நம்முடைய திருமணக்காட்சி முதன்முறையாக காட்டியருளுவோம் " என்றார்.
 
அகத்தியர் மனமகிழ்ந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கினார்.

மனைவி லோபா முத்திரையுடன் பொதிகை நோக்கி புறப்பட்டார் .

வழியில் பல தலங்களை வணங்கி வனங்களையும் கடந்து தீர்த்தங்களில் நீராடி திருப்பழம்பதி என்னும் திருப்புனவாசலுக்கு சற்று 
முன் வருகையில் இத்தலத்து இறைவன் உமையொரு பாகனாய் காட்சி தந்து அகத்தியரிடத்து "கைலாயத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பாக நான் உனக்கு திருமணக் கோலக்காட்சி அருள இருக்கின்றோம் .

ஆகவே இங்கு மணவறை ஒன்றை அமையுங்கள்' என்றார் .
 
முனிவர் தன் தவ வலிமையால் ஒரு குளத்தை உருவாக்கி, கமண்டல நீரால் அதனைப்பெருக்கி, அதற்கு "கல்யாண தீர்த்தம்" என்று பெயர்சூட்டி, குளக்கரையில் ஸ்ரீகல்யாணநாயகி சமேத ஸ்ரீகல்யாணநாத லிங்கத்தை நிறுவி , அருகில் ஒரு கல்யாணமண்டபத்தை மணவறையாக நிறுவி அலங்கரித்து அனைத்துப் பொருட்களையும் அங்கு வரச்செய்தார்.

இறைவன் பார்வதியோடு மணக்கோலத்தில் அங்கு எழுந்தருள முப்பத்து முக்கோடி தேவர்களும் வர, பிரம்மதேவன் திருமணச்சடங்குகளைச் செய்ய மங்களநாண் பூட்டி தேவர்கள் பூமழை பொழிய உமையின் கரம் பற்றி , , பொறி சிதறி அக்னி வலம் வந்து உமையின் பாதத்தை அம்மியில் வைத்து அருந்ததியைக் காணச் செய்தார் .
 
அரம்பையர்கள், விஷ்ணு முதலியோர் வணங்க, வைதிகர்கள் வேதம் ஓத, சித்தர்கள் பல்லாண்டு இயம்ப, திருமணக்கோலத்தை தரிசித்து அகத்திய முனிவர் ஆனந்த பரவசம் அடைந்தார் .
 
தேவலோக ஐராவதம் வர 
அதில் சிவனாரும் உமையும் எழுந்தருளி சகல வாத்தியங்கள் முழங்க தேவர்கள், கணங்கள், மனிதர்கள் சூழ்ந்து வர திருப்புனவாயில் மகாகோபுர வாயில்முன் வெள்ளையானையில் வந்திறங்கி கோயிலில் புகுந்தனர். 

அகத்தியர் இறைவனிடம் " உங்கள் திருக்கல்யாணம் நடந்த இந்த மணவறைக்கு அனைவரும் வந்து வழிபடவும் அவர்களுக்கு விரைவில் கல்யாணம் நடந்து , நல்ல வாழ்க்கை அமைந்து, வம்சம் விருத்தியாக வேண்டும்' 
என்று வேண்டினார்.
 
இறைவன் "உனக்கு முதலில் காட்சி கொடுத்த இத்தலம் கல்யாணபுரி என வழங்கப்படும். 

கல்யாண முருங்கையை தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்தில் நீ உருவாக்கிய கல்யாண தீர்த்தக்கரையில் உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்யாணபுரீஸ்வரரும் கல்யாண நாயகியையும் வணங்கி வழிபட வேண்டியவர்க்கு விரும்பியது கிடைக்கும்' என அருளினார்.
 
கல்யாணபுரி திருமணத்தடை நீக்கும் திருமணப்பரிகாரத்தலமாகும் 

இத்திருக்கோயிலின் வரலாறு 
திருப்புனவாசல் பழம்பதிநாதர் வரலாற்றில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. 

சுமார் 2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்தலம் காலவோட்டத்தில் சிதிலமுற்றுப்போக இறைவன் அருளாணைப்படி கட்டுமானங்கள் அவ்வாறே பிரிக்கப்பட்டு சிற்ப ஆகம விதிப்படி மீண்டும் எடுத்து கட்டப்பட்டு ஒருகாலபூஜை தடையின்றி நடந்து மக்களும் பலன் பெற்று வருகின்றனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் திருக்கல்யாணபுரம் திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவிலை அறந்தாங்கி ஆவுடையார்கோயில் பேருந்து தடத்தில் கரூர் என்னும் ஊரில் இறங்கி அங்கிருந்து சென்று தரிசிக்கலாம். 

ஆட்டோக்கள் கோயில் வாசல் வரை செல்ல வசதி உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

ஜம்பை ஜம்புஸ்கேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்)திருவண்ணாமலை..

ஜம்பை ஜம்புஸ்கேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) கோவில்,
ஜம்பை, திருகோயிலூர் தாலுகா,

திருவண்ணாமலை – 605 754.    

இறைவன்:
தான்தோன்றீஸ்வரர்

அறிமுகம்:
இந்த சிவன் கோவில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவில் சுவர்களில் சோழர்களின் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ராஷ்டிரகூடர் ஆட்சியின் கீழ் இருந்த இந்த இடம், முருகன், ஜ்யேஸ்தா தேவி, காலபைரவர், ராஷ்டிரகூடர் கட்டிடக்கலைக்கு சொந்தமான துர்க்கை ஆகியோரின் சிலைகள் கோயிலுக்குள் காணப்படுகின்றன. கோவில் மிகவும் பழமையானது மற்றும் சேதமடைந்துவிட்டதால், இப்போது ஜம்பை உள்ளூர் மக்களால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புராண முக்கியத்துவம் :
உள்ளூர் பாரம்பரியத்தின் படி, தற்போது ஜம்புநாதர் கோவில் இருக்கும் இடத்தில் குளம் இருந்தது, மேலும் இந்த குளத்தில் பிரதான தெய்வம் (லிங்கம்) தானே உருவானது. முனிவர் இந்த லிங்கத்தை குளத்தில் கண்டதும், அவர் மீன் வடிவத்தை எடுத்தார். லிங்கத்தை வழிபட குளத்தில் நுழைந்தார். எனவே அவர் வாழைமாமணி என்று அழைக்கப்பட்டார், மேலும் இந்த கிராமம் முனிவரின் நினைவாக வலையூர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் சாளுக்கிய சோழர் காலத்தில் ஜம்பை என்று பெயர் பெற்றது.

சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலின் கல்வெட்டுகளில் மூலவரின் பெயர் தான்தோன்றீஸ்வரர் என்று குறிப்பிடப்பட்டாலும், உள்ளூர் மக்கள் அவரை ஜம்புஸ்கேஸ்வரர் என்று அழைத்தாலும், ஆரம்பத்தில் இந்த பெயர் சம்புகேஸ்வரர் என்று உச்சரிக்கப்பட வேண்டும், அதாவது மகிழ்ச்சியை அளிக்கும் சிவன் மற்றும் சம்புகேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கிராமம் ஜம்பை என்று அழைக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் 132 கல்வெட்டுகள் உள்ளன. 60 சோழர்கள் கல்வெட்டுகள் , 12 கன்னரதேவன் கல்வெட்டுகள் , ஐந்து கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் , ஆறு பாண்டியர்கள் கல்வெட்டுக்கள் , 13 நாயக்கர் கால கல்வெட்டுகள் மற்றும் பெயர்கள் குறிப்பிடாத இதர கல்வெட்டுகள் 35 என 132 கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

இதில் மிகப் பழமையான கல்வெட்டு பராந்தகன் காலத்திய கல்வெட்டு என பாலமுருகன் தெரிவித்தார். “அந்த கல்வெட்டு கோபுரத்தின் வலது புறச் சுவரில் உள்ளது. அதில் விளக்கு தானம் குறித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது .அதேபோல் தேவதானமாக வழங்கப்பட்ட ஊர் தொடர்பான கல்வெட்டுகளும் உள்ளன. இதே போல் முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய பல்வேறு கல்வெட்டுகளை இங்கு காண முடிகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, January 24, 2025

4 யுகங்களைக் கடந்த கோயில் புஷ்பவனேஸ்வரர் புஷ்பவனக் காசி



*சவுந்திர நாயகி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பூவணம் சிவகங்கை மாவட்டம்*
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம் பெற்றது.

*ராமேஸ்வரத்திற்கு இணையாக கோயில்*

*தன் பக்தைக்காக சித்தராக வந்த சிவன்*

*திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம்*

*காசிக்கும் வீசம் அதிகம்*
காசியை விட 16 மடங்கு புண்ணியம் தரும் தலம் போற்றப்படுகிறது. 

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் 
 -திருநாவுக்கரசர்
 
*தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்*

*திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம்.*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 201 வது தேவாரத்தலம்*

இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். 

பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று.  வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். 

மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடையதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

4 யுகங்களைக் கடந்த கோயில், 
 புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.  

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம்.

புஷ்பமாக மாறிய அஸ்தி  : புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. 

ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

வழி விட்ட நந்தி: திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் உத்தரவிட்டார். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது. 

சுவாமிக்கு வலப்பக்கத்தில்  அம்மன் காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அகஸ்திய முனிவர் ,நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

சித்தராக வந்த சிவன் : திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. 

இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள். 

அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

தல மரமாக பலா மரம் உள்ளது.

இங்கு இறந்த உறவினர்களுக்கு முக்தி பெற  மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையாற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

இங்குள்ள மூலவரை வணங்கி வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்கள்

ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்கள்
காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.

காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் பாஸ்கர ராஜபுரம்

தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜ கவிராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மிக அற்புதமான தலம்.

கன்னிவாடி ராஜ காளியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. போகர் தவம் செய்த ஆலயம். இந்த அற்புத தலத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீகனக துர்க்கா ஆலயம்

ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா நதி கரையில் தேவி சுயம்பு வடிவில் அருளும் திருத்தலமாகும். இங்கு ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரம் பிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும்.

நிமிஷாம்பா கோவில்

காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.
தவிர, ஸ்ரீசக்கரம், மகாமேரு வழிபாடுகள் உள்ள ஆலயம் தமிழகத்தில் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஸ்கந்தாச்ரமம், புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி பீடம், பண்ருட்டியை அடுத்த கண்டிகை கிராமத்தில் ஸ்ரீநகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாமேரு தியான நிலையம், நெடூர் சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், திருஈங்கோய் மலை அடிவாரத்தில் ஸ்ரீலலிதா மகிளா சமாஜ் தியான நிலையம் ஆகியவை ஸ்ரீசக்கரம் மகாமேருவின் வழிபாடுகள் நடைபெறும் முக்கிய இடமாகும்.

திருமியச்சூர்

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள பசுமையான கிராமம். இங்குதான் அருள்மிகு அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பிறந்த திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுரம், பறவைகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் வாலி, சுக்ரீவன், அருணன், கருடன் என அடுத்தடுத்து இத்தலத்தில் பிறந்தவர்கள். இங்கு நவக்கிரகங்களுக்கு தனியாக சன்னதி கிடையாது. சூரியனின் புதல்வர்களான சனி பகவான் எமதர்ம ராஜா பிறந்த தலம். பன்னிரண்டு ராசிகளுக்கு உரியனவாக 12 நாகர்கள் உட்பிரகாரத்தில் (மண்டப சுற்றில்) உள்ளது.

நாகர் வழிபாடு விசேஷம். அம்பாள் சன்னிதிக்கு எதிரே துர்க்கை சன்னதி, துர்க்கையின் கரத்திலுள்ள கிளியே நம் கவலைகள், கோரிக்கைகள் எல்லாம் அம்பாள், ஸ்ரீலலிதாம்பிகையிடம் சேர்க்கின்றது. தெற்கு நோக்கிய அகன்ற மகா மண்டப சன்னதி, வெளிமண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்கே சதாசிவ லிங்க பீடம், ஸ்ரீசக்கர பீடம் என இரு பீடங்கள் உள்ளது.

இந்த பீடத்தில்தான் எவருமே வெல்லமுடியாத பண்டாசுரனை வென்று விஜயாம்பிகையாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். சிறப்பாக அம்பாளின் திருமுகத்திலிருந்து வாக்தேவிகள், வசினி தேவிகள் என்று பேசப்பட்ட எட்டு தேவிகள் தோன்றி அம்பாளின் ஆயிரம் திருநாமங்களை தேவியின் முன் பாடுகின்றனர். அகஸ்திய மகரிஷியும், அவரது தர்மபத்தினி லோபா முத்திரையும் இங்கு வந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்கின்றனர். இதை செவியுற்ற தேவி மகிழ்ச்சியுற் று நவரத்தின ஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ எனத் தொடங்கும் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடி நமக்கெல்லாம் அருளியது இந்த சன்னதியில்தான்.

ஸ்ரீசக்கர கோபுரம்

ஏற்காடு, நாகலூரில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யா மகாமேரு ஆலயம். கருவறையில் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி அம்மன் வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கர வடிவில் கோபுரம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.

காஞ்சீபுரத்தின் பெருமை

காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் காமகோஷ்டத்தில் அமர்ந்து கடைக்கண் பார்வைகளால் அருள்பாலிக்கிறாள். ஆதி சங்கரர் காமகோஷ்டத்தையும், சக்கர மகா யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்து காமகோடி பீடத்தில் தானே அமர்ந்து யோக லிங்கத்தை த்ரிகாலமும் பூஜித்து காஞ்சியின் சிறப்பைக்கூட்டினார். ஆதியிலே பண்டகாசுரனை அழித்து தேவர்களை பிலத்தே அம்மை காத்த போது, தேவி தானே இங்கு கோவில் கொண்டாள். தேவர்கள் அக்கோவிலை செம்பொற் கோவிலாக எடுத்தனர். பின் யுகங்களில் அது கருங்கல் கோவிலாயிற்று.

பந்தகனை புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் உருவாக்கினர். ஜயச்தம் பத்திலிருந்து பிலாகாசத்துக்கு வாயில் எடுத்தனர். காயத்ரீ கதிர்கள் பரவிய எல்லைக்குள் அதன் 24 அக்ஷ்ரங்களுக்கும் ஸ்தூலமாக 24 தூண்கள் எடுத்து காயத்ரி மண்டபமாக்கினர். வேதங்களையே இம்மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினர். அம்பிகை ஸ்ரீ சக்ரத்தில் மூலத்ரி கோணத்தில் உறைபவள் ஆதலால் கருவறையை முக்கோணமாக அமைத் தனர். மூன்றரை வட்ட குண்டலி¬னி சர்ப்பமாக அவள் விளங்குவதால் வெளிப் பிரகாரங்களெடுத்து விஸ்தரிக்கும் போது இக்கோவிலின் மூன்றரை சுற்றுக்கள் இருக்குமாறு அமைத்தனர்.அம்மையின் விருப்பபடி அம்மைக்கு ஸ்ரீ சக்ர பதக்கம் தந்த பரமேச்வரனே பரம புண்ய பீடமான ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் செய்தார்.

கோடி காமங்களை (விருப்பங்களை) நிறை வேற்றுவதாலும், தர்ம-அர்த்த-காம-மோட்சம் என்பதில் காமத்தின் கோடியிலுள்ள மோட்சத்துக்கு இட்டுச்செல்வதாலும் இச்சக்கரம் “காம கோடி பீடம்“ என பெயர் பெற்றது. இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.

காஞ்சி காமாட்சியின் சன்னதியில் காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தைச் சுற்றி வசினி, கமேசி, மோதினி, அருணா, விமலா, ஜயினி, சர்வேஸ்வரி, கவுலினி என்ற எட்டு தேவியர்கள் உள்ளனர். இவர்களின் சக்தி அளவிட முடியாது.

காஞ்சி காமாட்சியின் ஆலயக் கருவறையில் அம்பாளுக்கு வலது பக்கம் தவக்கோலத்தில் காமாட்சி காட்சி தருகிறாள். ஈஸ்வரனை மணம்புரியும் நோக்குடன் பஞ்சாக்னியின் நடுவில் ஊசி முனையில் ஒற்றை காலில் நின்று கொண்டு கரங்களைச் சிரம் மேல் குவித்து வைத்து தவக்கோல காட்சியில் காணலாம். இந்த அம்பிகை கருவறையில் சற்று மறைவான இடத்தில் இருப்பதால் பக்தர்கள் சவுகர்யமாக தரிசிக்க வாய்ப்பில்லை. ஸ்ரீகாமாட்சி (அம்பாள்) ஞானசக்தியாகவும், ஸ்ரீதபஸ் காமாட்சியை யோக சக்தியாகவும் போற்றி வழிபடுவர்.

ஸ்ரீகாமாட்சியின் ஆலயத்தில் நவராத்திரி ஒன்பது தினங்களும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இதையட்டி கன்யா பூஜைகள் நடைபெறும். முதல் நாள் தொடங்கி ஒன்பது நாள் வரை நடைபெறும் கோயிலின் சார்பாக எண்ணெய், சீயக்காய் நீராடி புத்தாடை அணிந்து அம்பாளின் கருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் அருகில் அமரும் பாக்கியம் பெற்ற இந்த குழந்தைகளின் சிறப்பை அளவிட முடியாது.

இங்கு நடைபெறும் சுமங்கலிகள் பூஜை வெகு பிரசித்தம். எந்த ஊரிலும் ஸ்ரீசக்கரத்துடன் தனியே கோவிலில் அம்பிகை இருக்க மாட்டார். ஆனால் காஞ்சி மாநகரில் மட்டும்தான் நான்கு கோபுரங்கள் அமைந்த ஆலயத்தில் நேமப்படி ஆறுகாலை பூஜையை ஏற்றுக் கொண்டு ராஜ ராஜேஸ்வரியாக அனுக்கிரகம் புரிகிறாள்.
இவளது கடாட்சம் பெற்று பிறவி ஊமையான மூக்கன் அம்மன் தாம்பூலம் எச்சில் பயனாக கவிபாடும் திறமை பெற்றான். ஆன்மிக அன்பர்களுக்கு மூகபஞ்சதசி கிடைத்தது.

மாங்காடு காமாட்சியம்மன் அர்த்த மேரு ஸ்ரீ சக்கரம்

மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன.

அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன “அஷ்ட கந்தம்“ அர்த்த மேரு” என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது.

மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.

பல்லவர் காலத்தில் மிகப் பெரிய சக்கரக் கோவில். கர்ப்பக்கிருகத்தில் 6″ஜ்6″ஜ்3″ அளவிலான ஸ்ரீசக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதி அற்புதங்கள் தன்னகத்தே கொண்ட ஒரே ஸ்ரீசக்கரக் கோவில். அர்த்தமேரு ஸ்ரீசக்கர தரிசனம் விசேஷம்.

நாற்பத்து ஐந்து கோணங்களுடன் திகழும் இந்த ஸ்ரீசக்கரம் அஷ்டகந்தம் என்ற எட்டுவகை மூலிகைகளால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. இங்கு திருமணமாகாதவர்கள் காமாட்சி எலுமிச்சம்பழம் கனி 3, 4, 8 என்று நிர்ணயித்து கனியை அம்மனுக்கு சமர்ப்பித்து திருமண வாய்ப்பை அடைகிறார்கள. இது திருமண பேற்றை அளிக்கும் பிரார்த்தனை தலமாக பேசப் படுகிறது. திருமணம் முடிந்த கையோடு கணவர்-மனைவி தம்பதி சமேதராய் வந்து பிரார்த்தனை நிறைவு செய்வர்.

சங்கரன் கோவில்

இங்கு அருளும், பொருளும் குறையாது அளித்திடும் ஸ்ரீகோமதி அம்மனும், ஸ்ரீசங்கர நாராயணரும் அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீகோமதி அம்மன் சன்னதியில் இருந்து (மூலஸ்தானம்) 10 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீசக்கரக் குழி கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம் வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த சக்கரக் குழியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானித்து பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறப்புடன் பிரகாசிப்பர். அனைத்து தீராப்பிணிகளும் தீரும். இங்குள்ள புற்று மண் விசேஷ பிரசாதம். கோமதி அம்மன் ஆடித் தபசு வாழ்க்கையில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். சைவ, வைணவ ஒற்றுமை நிலைநாட்டும் கோவிலாகும்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

பஞ்சபூத தலங்களில் திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயமும் ஒன்றாகும். ஆதிசங்கரர் அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த இங்கு ஸ்ரீசக்கர தாடங்கத்தைச் சாற்றினார். 1923 வருடம் காஞ்சி மகா பெரியவர் சித்திரை மாதத்தில் தாடங்கத்தை விதிப்படி ஜீர்ணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு (தோடு) அணிவித்தார்.

ஸ்ரீலலிதாம்பிகை பீடம்

கோவையில் ஆணைகட்டி மலை அடி வாரத்தில் லலிதாம்பிகை பீடம் அமைந்துள்ளது. இங்கு விக்கிரகம் மற்றும் மகாமேரு வடிவில் ஸ்ரீலலிதாம்பிகை அருளாட்சி புரிகிறார். இங்கு சமயாச்சாரம் என்னும் மார்க்கத்தின்படி தியான வழிபாடு செய்ய முக்கியத் துவம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் ஆனது. எனவே அபிஷேகம் கிடையாது. தைலக் காப்புதான். சதாசிவ பிரம்மேந்திரர் புற்றுமண் கொண்டு ஓர் எந்திரத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த ஆலயத்தின் தேவியின் அபரிதமான சக்தி கண்ணொளி வழங்குதல் என்று பேசப்படுகிறது.

சிருங்கேரி சாரதா

துங்கபத்திரா நதிக்கரையில் நித்யஸ்வரூபியாக ஸ்ரீசாரதை உலகம் முழுவதையும் அருளாட்சி செய்து வருகிறாள். ஆதிசங்கரர் திருவடியைப் பின்பற்றி வந்த தேவி சரஸ்வதியே சாரதாம்பாளாக கோவில் கொண்டு திருவருள் புரியும் குருஸ்வரூபிணி. இவரை சக்தி, வாக்தேவி, வாணி, சரஸ்வதி, வீணாதாரிணி என்ற பல சிறப்பு பெயர்களால் அழைக்கிறார்கள். ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் கையில் ஜெபமாலை, சுவடி, ஞானமுத்திரையுடன் அலங்கார பூஷிதையாய் சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் (சாரதா) கோலம் நவராத்திரியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கொல்லூர் மூகாம்பிகை

பாரத தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூரில் கோல முனிவர் வழிபட்ட சுயம்புமூர்த்தம் லிங்கத் திருமேனியைத் தரிசித்தார். திருமேனியில் அம்பிகை அரூபமாக அருளாட்சி செய்வதைக் கண்டு மெய்சிலிர்த்து அருகில் உள்ள மேடை ஒன்றில் தவத்தில் ஈடுபட்டார். தேவியின் திவ்யதரிசனம் கண்டு மெய்சிலிர்த்து அங்கு விக்கிரகம் ஒன்றை நிறுவி அங்கு ஸ்ரீசக்கரத்தையும் நிறுவினார். கொல்லூர் மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி உண்டு. கிரகண காலத்தில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். மூகாம்பிகையை சரஸ்வதி தேவியாக பாவித்து ஆதிசங்கரர் கலாரோகணம் பாடி அருள் பெற்றார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அனுமன் வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா?

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது

" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்

" ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"

" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"

" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்

அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.

" அனுமா! அங்கேபார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .

அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.

அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "
என்று வாழ்த்தினார்.

பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, January 23, 2025

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.


அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில்,
திருவதிகை,
பண்ருட்டி போஸ்ட்,
கடலூர் மாவட்டம்.
காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்  –    வீரட்டானம், சம்கார மூர்த்தி
அம்மன்  –    பெரியநாயகி, திரிபுர சுந்தரி
தல விருட்சம்  –    சரக்கொன்றை
தீர்த்தம்  –    சூலத்தீர்த்தம், கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி
பழமை  –    1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்  –    அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்
ஊர்  –    திருவதிகை
மாவட்டம்  –    கடலூர்
மாநிலம்  –    தமிழ்நாடு
பாடியவர்கள்  –    திருநாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து, “தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது” என்று பிரம்மாவிடம் வரம் பெற்றனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன்(அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து, அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.

தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். ஈசன், ஒரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.

இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறை விமானத்தைப் பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமுமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.

முப்புரம் எரியச்செய்த பெருமான் மூவருக்கு அருள் செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான்.
அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது.

சிதறு தேங்காய்(சூறைத் தேங்காய் ) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான். மூலவருக்குப் பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது. கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது. சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது. பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும். அம்பாள் சந்நிதி சுவமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும்.

ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம்.

திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு, கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில், திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சந்நிதிக்குத் தன் தம்பியை அழைத்துச் சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார் . அந்த திருநீறை பூசிக்கொண்டு, கொஞ்சத்தை வாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி, “கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய” என்னும் திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று, “நின் நாமம் நயப்புற மன்னுக” என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

தலவிநாயகர் : சித்தி விநாயகர்.

தேவாரப்பதிகம்:

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.

திருவிழா:

பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள். திருவிழா வசந்தோற்சவம். தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல்.

சித்திரை சதயம் 10 நாட்கள். அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி.

வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள். பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகனப் புறப்பாடு தல நாயகர் திருத்தேரில் வீதியுலா.

ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள். மாணிக்கவாசக உற்சவம்.

மார்கழி 10நாட்கள். மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி.

ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா.

மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை.

கார்த்திகை 5 சோமவாரம்.

பங்குனி உத்திரம், திலகவதியார் குருபூஜை, திருக்கல்யாண உத்திரம். பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. சூலைத் தீர்த்தத்தை உட்கொண்டால், வயிற்று வலி(அல்சர்) உடனடியாக தீர்ந்து விடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள், இங்கு வழிபட்டால் நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நேர்த்திக்கடன்

நிலை மாலை சாத்துதல், சுவாமிக்கு பொட்டுக் கட்டுதல், அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல், சூரைத்தேங்காய் உடைத்தல், சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...