♥ நவராத்திரி + தசரா . ♥ பதிவு - 1
♥ பெண்கள் கொண்டாடும் பண்டிகையான நவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு வரும் புரட்டாசி 28, ஞாயிறு கிழமை 15-10-2023 பிரதமை திதியில் தொடங்கி ஐப்பசி 6ம் தேதி
திங்கள்கிழமை 23-10-2023 முடிகிறது. (ஐப்பசி 7ம் தேதி
செவ்வாய் கிழமை 24-10-2023 தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படும்.
♥ பெரும்பாலானவர்கள் அமாவாசை அன்றைக்கே கலசம் அல்லது கொலு அமைப்பதற்கான பணிகளை துவங்கி விடுவார்கள். கொலு படிகள் அமைத்து பூஜை தொடங்குவது குரு ஓரையில் தொடங்க வேண்டும். அம்மாவாசை திதி முடிவதற்குள் செய்வது சிறப்பானதாகும். அந்த வகையில் புரட்டாசி 27, சனி கிழமை 14-10-2023 மாலை 4 - 04 மணிமுதல் 5 - 03 மணிக்குள் படி வைக்க
ஆரம்பித்து , இரவு 9 - 04 மணிமுதல் 10 - 037 மணிக்குள் பூஜை தொடங்க வேண்டும்.
♥ நவராத்திரி விழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை துவங்குவதால் அன்று பகல் 12 முதல் 01.30 வரை எமகண்டமும், பகல் 3 முதல் 04.30 வரை குளிகையும், மாலை 04.30 முதல் 6 வரை ராகு காலமும் உள்ளது. அமாவாசை முடிந்த பிறகு . கலசம் வைத்து வழிபடுபவர்களும், கொலு வைத்து வழிபடுபவர்களும் புரட்டாசி 28, ஞாயிறு கிழமை 15-10-2023 பொழுது விடியும்முன்பு அதிகாலை 4 - 04 மணிமுதல் 5 - 03 மணிக்குள் படி வைக்க ஆரம்பித்து , பகல் 11 - 04 மணிமுதல் 12 - 04 மணிக்குள் பூஜை தொடங்க வேண்டும்.
♥ நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து அம்மனாக பாவித்து கொண்டாட
வேண்டும். தினமும் சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருள்களும், பிரசாதமும் அளித்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.
♥ நவராத்திரி பண்டிகை கொண்டாடும் ஒன்பது நாட்களும் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம்.
♥ பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மை வடிவத்தில் என்னை பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்பவர்களுக்கு சகல நன்மைகளையும், செல்வத்தையும் அளிப்பதாக அம்பாள் கூறுகிறாள். இதனால் நவராத்திரி கொலு படிகளில் மண்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கும் மரபு ஏற்பட்டது
♥ வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
♥ ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.
♥ கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
கொலு படிகள் ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
♥ கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது முதலில் மேலே உள்ள கொலுப்படியில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது. கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.
♥ கீழிருந்து மேலாக முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நான்காம்படியில் நான்கறிவு உயிர்களான நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள். ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம். மனிதர்கள், ரிஷிகள், தெய்வங்கள் ஆறாவது படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள். ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம். எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம். ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.
No comments:
Post a Comment