Wednesday, November 8, 2023

உலகப்புகழ்பெற்ற மதுரை கருப்பண்ணசாமி

⚜️ கருப்பண்ணசாமி... 
உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள 
அழகர்மலை என்ற திருமாலிருஞ்சோலை
கள்ளழகரை கதவாயிருந்து அருவமாய் 
காவல் காக்கும்
பதினெட்டாம்படி_கருப்பண்ணசாமி வரலாறு:

பண்பாட்டின் தலைநகரான மதுரையின் சித்திரைப்பெருவிழா நாயகன் - கள்ளழகர் வீற்றிருக்கும் அழகர்கோயில் தமிழ்நாட்டு பெருந்தெய்வ கோயில்களில் சில தனித்த நடைமுறைகளை உடையது. 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதும்; பெரியாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் உள்ளிட்டோரால் பாடப்பெற்றதும்; இலக்கியங்களில் திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் உள்ளிட்ட பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதுமான அழகர்கோயில் மதுரை மாநகரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் மலையும், கிராமங்களும் சூழ அமைந்துள்ளது.

தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி.

மதுரைக்கு ஒரு தனி குணம் உண்டு. அது யாரையும் பேதம் சொல்லிப் பிரிக்காத குணம். இந்த மண்ணின் தெய்வங்களில் கூடப் பிரிவினை இல்லை. மதுரை மண்ணின் தெய்வங்கள் எல்லாம் ஒன்றோடொன்று உறவுகளாகப் பிணைந்தவை. இங்கே சைவ வைணவச் சண்டை கிடையாது. சிறு தெய்வ - பெருந்தெய்வ பேதம் கிடையாது. மக்கள் அனைவருக்குமான கோயில்களாகவே பெரும்பாலான கோயில்கள் திகழும். அதற்கு ஒரு நல்ல உதாரணம் அழகர்கோயிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதி. சந்நிதி என்று ஓர் ஆலயத்தின் ஒரு கூறுபோலச் சொன்னாலும் ஒரு பேராலயத்தின் சரித்திரம் போன்ற தன்மையைத் தன்னகத்தே கொண்டது பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சந்நிதி.

மங்களகரமான அந்தக் கதவுதான் பதினெட்டாம்படிக் கருப்பசாமி. பல இடங்களிலும் உருவமாய் கோயில்கொண்டிருக்கும் கருப்பசாமி இங்கு அருவுருவமாய் அருள்பாலிக்கிறார்.

கீழக்குயில்குடி, மதுரை சிம்மக்கல் காமட்சியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கிழக்குக் கோபுரத்தை அடுத்துள்ள கருப்பசாமி கோயில் ஆகிய தலங்களில் இரண்டு கைகளோடு நின்ற கோலத்தில் நெற்றியில் திருமண் இட்டு தலையில் உருமால் கட்டி, வீச்சரிவாள் ஏந்தி, தொங்கவிடப்பட்ட கையில் கதாயுதம் தாங்கி கொசுவம் வைத்துக் கட்டிய கச்சை வேட்டி, மிகப்பெரிய தொந்தி, காலில் செருப்பு என்று காட்சி தருகிறார் இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பசாமி. ஆனால் இந்தக் கோலத்தில் எல்லாம் இல்லாமல் அழகர்மலையில் கோயிலின் கதவாக நின்று அருள்புரிகிறார் இவர்.

பூட்டிய கதவு என்றால் பாதுகாவல் என்று பொருள் அல்லவா... ஆம், கருப்பசாமி அழகர்கோயிலின் பாதுகாவலர்தான். அழகர் கோயில் சொத்துகள் பெரும் களஞ்சியத்தைப் போன்றவை. 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற சொலவடை மதுரைப் பகுதிகளில் பிரசித்தம். இந்தப் பெரும் செல்வத்தைப் பாதுகாக்கப் பெரும் காவலன் தேவை அல்லவா... அவர்தான் கருப்பசாமி. தினமும் ஆலயம் மூடியதும் சாவியை அழகர்கோயில் சந்நிதியில் வைத்து வழிபடுவார்களாம். அதே போன்று சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நிதிக்குதான் அழகர் வருகிறார். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம் செய்ய நூபுர கங்கைத் தீர்த்தமே தினமும் கொண்டு வரப்படும். அப்படி கொண்டு வரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

வரலாறு:

"ஒரு காலத்தில் கேரள நாட்டிலிருந்து மந்திர தந்திரம் தெரிந்த பதினெட்டு லாடர்கள் இக்கோயில் இறைவனின் "களை"யை (இறைவனின் அருள் ஒளி - spiritual essence) திருடிச்செல்ல திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள் ஒரு மந்திர மையை கண்ணில் தடவிக்கொண்டால் பிறர் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். அப்படியான மையை தடவிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து விட்டனர்.

இரவு நேரங்களில் கருவறைக்குள் புகுந்து இறைவனின் களையை அவர்களின் மந்திர வலிமையால் இறக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கும்பத்துக்குள் அடக்கி வந்தனர். இறைவன் கோவில் பட்டரின் கனவில் தோன்றி இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பட்டர் மறுநாள் ஊர் நாட்டார்களை அழைத்து தெரிவித்த பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர்.

அதன்படி பட்டர் கருவறைக்குள் பூசைகள் செய்துவிட்டு அதிகமாக ஆவி பறக்கும் சுடு சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு வெளியே வந்து கதவை பூட்டிவிட்டார். சூடு சோற்றிலிருந்து கிளம்பிய ஆவி மந்திரக்கார லாடர்களின் கண்களில் இருந்து மையை கரைத்து விட்டது. மை கரைந்ததும் பிறர் கண்ணுக்கு அவர்கள் தெரிந்தனர். அப்போது வெளியே மறைந்திருந்த நாட்டார்கள் கதவை திறந்து பதினெட்டு பேரையும் பிடித்து வெளியே கொண்டு வந்து அனைவரின் தலையையும் வெட்டி கோயில் கோபுர வாசல் அடியில் புதைத்துள்ளார்கள்.

அவர்களோடு துணையாக வந்திருந்த கருப்பசாமி எனும் தெய்வம் மட்டும், 'என்னை விட்டு விடுங்கள் நான் இந்தக் கோபுர வாசலில் இருந்து கோவிலை காவல் காக்கிறேன்' என சொன்னதன் அடிப்படையில் கருப்பசாமியை மக்கள் விட்டு விட்டனர். அதன் பின்னர் கருப்பசாமி அங்கு அந்த கதவிலேயே இருந்து காவல் காத்து வருகிறார்" - என்பதே அந்த பழமரபுக்கதை.

இந்தக்கதை எழுப்பும் கேள்விகள் :

அந்த 18 திருடர்களும் உண்மையில் எதை திருட வந்தனர்?

கோயில் ராஜகோபுர கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டது ஏன்?

ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் அந்தக்கதவு திறக்கப்படுவது ஏன்?

அந்தக்கதவு திறக்கப்படும் போது சக்கரத்தாழ்வார் மட்டும் அதன் வழியாக வந்து செல்வது ஏன்?

பெருந்தெய்வ கோயிலில் சிறுதெய்வம் காவல் காக்கும் நடைமுறை ஏற்கப்பட்டது எப்படி?

இந்தக் கதையும் அது எழுப்பும் பண்பாட்டு ரீதியிலான கேள்விகள் குறித்தும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் நடத்திய கள ஆய்வின் முடிவுகள் அடங்கிய "அழகர்கோயில்" நூல் அளிக்கும் புரிதல்கள் இவை:

18 திருடர்கள் கோவிலுக்குள் நுழைந்த நோக்கம் :

இக்கோயிலில் திருட வந்த 18 பேரும் தமிழ்நாட்டினர் அல்ல. எனவே தான் அவர்கள் "மலையாள நாட்டவர்" என வழக்கு மரபும், "அயோத்தி நாட்டவர்" என கோவில் கதைப்பாடலும் குறிப்பிட்டுள்ளன.

வந்தவர்கள் படையெடுத்து வரவில்லை. அவர்கள் சிறிய எண்ணிக்கையில் தந்திரமாக கோவிலுக்குள் நுழைந்த காரணத்தால் அவர்கள் திருட வந்ததாக கருதப்பட்டுள்ளது.

18 பேரும் தந்திரமாக பிடிக்கப்பட்டனர் எனும் செய்தியை வழக்கில் உள்ள கதை உணர்த்துகிறது. கோயிலுக்கு வெளியே நாட்டார் பெருங்கூட்டமாக இருந்து அவர்களை மடக்கிப் பிடித்திருக்க வேண்டும். எனவே, தப்பிக்கும் முயற்சிக்கோ சண்டையிடுவதற்கோ அவர்களுக்கு வாய்ப்பில்லாது போயிருக்க வேண்டும்.

இறைவனின் "அருட்களை"யை திருட வந்ததாக கதையில் சொல்லப்படும் செய்தியில் உண்மையில்லை. அழகர் கோயிலில் கொப்பரை கொப்பரையாக தங்கம் இருப்பதாக கேள்விப்பட்டே அவர்கள் வந்துள்ளனர்.

இக்கோயிலில் 2 1/2 அடி உயரத்தில் அபரஞ்சி எனும் அரிய தங்கத்தாலான திருமால் சிலையொன்று "ஏறுதிருவுடையாள்" என்ற பெயரோடு இன்றும் உள்ளது. இந்த சிலையை திருடும் நோக்கிலேயே திருடர்கள் வந்திருக்க வேண்டும்.

கோயில்_கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டதன் காரணம் :

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் கூட இக்கோபுரவாசல் அமைக்கப்பட்டது பற்றிய குறிப்பு இல்லை. அடைக்கப்பட்ட கோபுரவாசலில் காணப்படும் கல்வெட்டுக்களில் காலத்தால் பிந்தியது கி.பி.1608-ல் பொறிக்கப்பட்ட சதாசிவராயர் கல்வெட்டாகும். அதன்படி, 1608-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த கதவு அடைக்கப்படவில்லை. தெய்வமும், மக்களும் இந்த வழியே சென்று வந்திருக்கிறார்கள்.

கி.பி.1709-ம் ஆண்டு தரப்பட்ட வெள்ளையத்தார் வீட்டு பட்டய நகல் ஓலையில் "பதினெட்டாம்படி வாசல்" என்ற தொடர் காணப்படுவதால் அதற்கு முன்னரே அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சரியாக கி.பி.1608 முதல் கி.பி.1769 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரையின் அரசியல் தலைமை பலவீனமடைந்து இருந்த விசயரங்க சொக்கநாதன் காலத்தில் அல்லது அவனது மனைவி மீனாட்சியின் ஆட்சிகாலமான கி.பி.1695 - 1742 க்குள் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம்.

கோயிலில் திருட வந்தவர்களை பிடித்து வெட்டி, கோபுரத்தின் வாசல்படிக்கு கீழே புதைத்ததால் அந்த வாசல் தீட்டுப்பட்டது. எனவே, அவ்வழியே தெய்வம் வருவது முறையில்லை. தெய்வம் வராத வழியில் மக்கள் செல்ல அஞ்சுவர். எனவே, கோயில் தலைவாசல் அடைக்கப்பட்டது.

தெய்வமும், மக்களும் சென்று வர வாசலுக்கு சற்று வடக்கே கோவில் கோட்டை மதில் சுவரை உடைத்து வண்டி வாசல் என்ற பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கதவு திறப்பதன் நோக்கம் :

இங்குள்ள கருப்பண்ணசாமிக்கு உருவம் கிடையாது. கோபுர வாசல் கதவில் தான் அவர் உறைவதாக நம்பிக்கை. எனவே, இந்தக் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவை பூசி, பூ, மாலை ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம்.

கருப்பண்ணசாமிக்கு தனி திருவிழா ஏதுமில்லை. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இக்கதவுகளுக்கு சந்தனம் சார்த்தி வழிபடுகின்றனர்.

ஆடி திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் அழகரின் போர்க் கருவியான சக்கரத்தாழ்வார் தேரோடும் வீதியில் வலம் வந்து எட்டுத்திக்கும் படையல் இடுகிறார். ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டு இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமி கோபுர வாசல் கதவு பிரம்மோற்சவ காலமான ஆடி மாதம் பௌர்ணமி அன்று தேரோட்ட நாளில் திறக்கப்படும் போது அவ்வாசல் வழியாக சக்கரத்தாழ்வார் வந்து செல்கிறார். அழகரின் பல்லக்கு கூட இவ்வழியை பயன்படுத்துவது இல்லை. எனவே, சக்கரத்தாழ்வாருக்காக மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை அவ்வாசல் திறக்கப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் மட்டும் அவ்வழியே வந்து செல்வதன் காரணம் :

இயற்கையல்லாத முறையில் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தோடு கூடிய நம்பிக்கைகளுக்காக அவ்விடத்தில் கருப்பசாமி நிலைப்படுத்திக் பட்டிருக்கிறது. திருமாலின் போர்க்கருவியான சக்கரத்தாழ்வார் மட்டும் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தினையும், பகையினையும் வென்று அவ்வழியே செல்ல முடியும் என்பதற்காக அவர் மட்டும் அவ்வழியே செல்கிறார்.

கள்ளழகரின் காவல் தெய்வமாக கருப்பசாமி ஏற்கப்பட்டதன் தொடர்புகள்:

கிருஷ்ணன் - வாசுதேவ கிருஷ்ணன் என அழைக்கப்படுவதும் உண்டு. வாசுதேவனை - காரிக்கண்ணன் (கரிய நிறமுடையவன்) என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போர் நிறம், கொம்பு, காது, வால் உள்ளிட்ட உறுப்புகளை கொண்டு மாடுகளுக்கு பெயரிட்டு இனங்காண்பது வழக்கம். திருமால் வழிபாட்டினராகிய ஆயர்கள் கருப்பு நிறமுடைய மாட்டை காரி என பெயரிட்டு அழைத்தனர் என சிலப்பதிகாரம் சொல்கிறது.

திருமலை - "திருவடியும் கண்ணும் திருவாயும் செய்ய கரியவன்" என இளங்கோவடிகளின் பாடலும், "கண்ணன் என்னும் கருந்தெய்வம்" என ஆண்டாளின் பாசுரமும் குறிப்பிடுகின்றன.

திருமால் கரிய திருமேனியுடைய அழகனாகவே கருதப்படுகிறார். கருமை அழகு நிறைந்த நிறம் என்றே தமிழர்கள் கருதுகின்றனர்.

எனவே, கோவிலின் "அண்ணன்மார்சாமி கதை" என்கிற கதைப்பாடல் திருமால் கடல் கடைந்த போது கருப்பசாமி பிறந்ததாக கூறி, கருப்பசாமியின் பிறப்பை திருமாலோடு தொடர்புப்படுத்துகிறது.

மதுரை வட்டாரத்தில் காணப்படும் கருப்பசாமி சிலைகள் அனைத்தும் தென்கலை வைணவ திருநாமத்துடன், வைணவ சார்பு பெற்றிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.

திருமால் காத்தலாகிய தொழில் செய்யும் கடவுள் என்ற கருத்தும், கருப்பசாமி காவல் தெய்வமாக கருதப்படுவதும், காரி (வாசுதேவ கிருஷ்ணன்) வழிபாடே கருப்பசாமி வழிபாடாயிற்று என்ற கருத்தினை மேலும் வலுவாக்குகின்றன.

இந்தப் பின்னணியில் தான் திருடர்கள் உடல் புதைக்கப்பட்ட கோபுரவாசல் தீய ஆவிகளை விரட்டவும், மக்களின் அச்சத்தை நீக்கவும் ஒரு சிறுதெய்வத்தை நிலைப்படுத்த வேண்டிய நிலமை அழகர்கோயிலில் ஏற்பட்ட போது, அது பிற இடங்களில் தென்கலை வைணவத் திருநாமத்துடன் காட்சிதரும் கருப்பசாமியாக அமைந்தது.

சிறுதெய்வமாக நிலைப்படுத்தப்பட்ட கருப்பசாமியை அழகர்கோயில் உயர்சாதி பிராமணர்களும் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தான் தினமும் அர்த்த சாமப்பூசையில் கள்ளழகருக்கு படைத்த உணவையும், அவருக்கு அணிவித்த மாலையையும் கருப்பசாமிக்கு கொண்டு வந்து படைக்கவும் பிராமண பணியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். நடைமுறையில் கோயிலுக்கும், கருப்பசாமி சன்னதிக்கும் உள்ள ஒரே தொடர்பு இதுதான்.

கருப்பசாமி மிகவும் கண்டிப்பான தெய்வம். இவரிடம் ஏமாற்ற முடியாது. பொய் சாட்சி சொல்லவும் முடியாது. சுற்றியிருக்கும் கிராமங்களில் தீர்க்க முடியாத வழக்குகளை கருப்பன் முன்பாக சாட்சி சொல்லச் சொல்லித் தீர்த்து வைப்பதுண்டாம். யாராவது கருப்பசாமியின் சந்நிதியின் பொய் உரைத்தால் கடும் கோபம் கொண்டு தண்டித்துவிடுவாராம் கருப்பசாமி.

எப்போதும் மூடியிருக்கும் சந்நிதிக் கதவுகள் இரண்டு முறைதான் திறக்கப்படும்.

ஒன்று: பிரம்மோற்சவத்தின் போது, சக்கரத்தாழ்வார் எழுந்தருள்வதற்காக...

மற்றொன்று: யாராவது சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்கும் போது...

மற்ற நேரங்களில் எல்லாம் சந்நிதியின் கதவுகள் மூடியே இருக்கும்.

தினமும் இரவு பெருமாளுக்கு சாத்திய மாலையும் சமர்ப்பிக்கப்பட்ட பிரசாதமும் கருப்பசாமிக்கும் சமர்ப்பிக்கப்படும். ஆடிமாத 8, 9-ம் நாள் திருவிழாக்களின் போதுமட்டும் இந்த சமர்ப்பணம் இருக்காதாம். காரணம் அந்த நாள்களில் பக்தர்கள் கருப்பசாமியின் சந்நிதியிலேயே பலியிட்டுப் படையல் போடுவார்களாம். ஆடி அமாவாசை அன்று கருப்பசாமிக்கு இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சேவிப்பார்கள்.

கருப்பசாமி இங்கு குடியேறிய கதை சுவாரஸ்யமானது. கள்ளழகரின் அழகு உலகப் பிரசித்தம். அதனால் அவரின் அழகை (சக்தியை என்றும் சொல்லலாம்) களவாடிச் செல்ல மாந்திரீகர்கள் முடிவு செய்தனர். மந்திர மை ஒன்றை இட்டுக்கொண்டு இவர்கள் ஆலயத்துள் நுழைவார்களாம். அந்த மை இவர்களை மற்றவர்கள் காணாது மாயமாக்கும். இரவு ஆலய நடை சாத்தியபிறகு அழகரின் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடத்துக்குள் நிரப்பும் முயற்சியை செய்துவந்தார்கள் மாயாவிகள். இதைப் பெருமாள், அர்ச்சகர் ஒருவரின் கனவில் சென்று சொல்லிவிட்டார். மறுநாள் அர்ச்சகர், இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார். சூடான தளிகையை ஆவிபறக்கக் கொண்டுவந்து சுவாமி சந்நிதியில் வைத்தாராம். பின்பு உடனே வெளியே வந்து கதவை வெளிப்புறமாக அடைத்துவிட்டாராம். அந்த ஆவியின் சூட்டில் மறைந்திருந்த மாயாவிகள் கண்களிலிருந்த மை கரையத் தொடங்கியதாம். மை கரைந்ததும் அவர்கள் உருவங்கள் வெளிப்பட்டன. மக்கள் அவர்களைச் சூழ்ந்து பிடித்துக்கொண்டார்கள்.

பதினெட்டுபேரையும் அங்கேயே படிக்கு ஒருவர் எனப் பலிகொடுத்தனர். அவர்கள் மாந்திரீகத்துக்காகத் தங்களோடு அழைத்துவந்த தேவதைதான் கருப்பசாமி. தன்னை ஏதும் செய்துவிட வேண்டாம் என்றும் தான் அழகரின் அழகிற்கு அடிமை என்றும் சொல்லியதாம் அந்த தேவதை. 'இனிக் காலம் முழுவதும் அழகருக்குப் பாதுகாவலனாக இருப்பேன்' என்று வாக்குக் கொடுத்தாராம் கருப்பசாமி. இன்றுவரைக்கும் அந்த வாக்கை மெய்ப்பிக்கிறார் கருப்பசாமி என்கிறார்கள் பக்தர்கள்.

பதினெட்டாம்படி கருப்பசாமி வழிபாடு தொடங்கிய காலம்:

அழகர்மலையில் பதினெட்டாம்படிக் கருப்பு வழிபாடு குறித்து பழந்தமிழ் நூல்களில் காணப்படவில்லை. பெரும்பாலும் 17-ம் நூற்றாண்டில் இந்த வழிபாடு தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழர் மானுடவியல் ஆய்வாளரான தொ.பரமசிவன் தன் ஆய்வு நூலில், "கோபுரவாசலில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் பிந்தியது கி.பி. 1608 பொறிக்கப்பட்ட சதாசிவராயர் கல்வெட்டாகும். அக்காலம்வரை இவ்வாசல் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஏனெனில் மக்கள் நடமாடும் இடங்களில் அவர்கள் பார்வையில் படும்படிக் கல்வெட்டுகளைப் பொறிப்பதே வழக்கம். எனவே இந்நிகழ்ச்சி அந்தக் காலத்துக்குப் பின் நடந்ததாகவே இருக்க வேண்டும். கி.பி 1709-ல் தரப்பட்ட வெள்ளைத் தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலையில் 'பதினெட்டாம்படி வாசல்' என்ற தொடர் காணப்படுவதால் இந்த நிகழ்ச்சி இதற்கு முந்நிய காலத்தில் நடந்திருக்க வேண்டும்" என்கிறார்.

அதாவது 1608 -1709 க்குள் மாந்திரீகர்கள் அல்லது கள்வர்கள் வந்து அழகரின் சக்தி அல்லது செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்ல முயன்றனர் என்றும் ஊர் மக்கள் பிடித்து அவர்களை பலியிட்டனர் என்பதாகவும் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அழகர்மலை ஆன்மிக பூமி. அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில். சர்வ சமயங்களையும் பக்தி என்னும் நேர்கோட்டில் இணைக்கும் தலம். அதற்கு மகுடம் வைத்தாற்போல அடிவாரத்தில் தொடக்கப் புள்ளியாக நிற்பவர் பதினெட்டாம்படி கருப்பசாமி. இவரைப் பணிந்துகொண்டால் மனபயம் அகல்வதோடு சகல செல்வங்களும் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்.

சிறு தெய்வமான கருப்பசாமிக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவு வியப்பை தருவதாகும். இவ்வுறவை பற்றி சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), "அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய மரபுகள் ஒத்துப்போதலின் (compromise) மிகப்பெரிய சாதனையை நமக்கு காட்டுகின்றன. நம் முன்னோர்கள் தங்கள் தகுதி நிலைக்கு (standard) மக்களை எப்படி ஈர்ப்பது என அறிந்திருந்தனர்" என குறிப்பிட்டிருக்கிறார்.

சொத்துடைமை நிறுவனமான அழகர்கோயில், அதன் பெருந்தெய்வமான அழகரின் படைத்தளபதியாக சிறுதெய்வமான கருப்பசாமியை நிலைநிறுத்தியதன் பின்னால் உள்ள செய்திகள் சமய இயக்கங்கள் தங்களை காத்துக்கொள்ள எவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப்போகின்றன (compromise) என்பதையே உணர்த்துபவையாக உள்ளன.

குறிப்பு : 

இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' எனும் ஆய்வு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

கருப்பசாமி நம் மண்ணின் தெய்வம். மதுரை செல்லும்போது நம் மூதாதையர் வழிபட்ட இந்தக் கருப்பசாமியைக் கண்டு வணங்குவோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...