Thursday, January 25, 2024

63 நாயன்மார்களில் ஒருவரானதும் ,முதல் கண்தானம் செய்தவருமான கண்ணப்ப_நாயனார் வரலாறு..

சிவபெருமானுக்கு  இறைச்சியை படைத்தவரும்,
63 நாயன்மார்களில் ஒருவரானதும் ,
முதல் கண்தானம் செய்தவருமான #கண்ணப்ப_நாயனார் குருபூஜை இன்று :
(தை_ மிருகசீரிஷம்)
    "வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
        விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
    காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
        காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
    தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
        சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
    ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
        வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே."

பக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று, கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக் கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப் பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் புராணம் பற்றி பார்ப்போம்

கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

ஒருநாள், திண்ணன் என்ற கைதேர்ந்த வில்லாளன் வேட்டையாடச் சென்றபோது, கானகத்தில் சிவனிற்கு கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். திண்ணனுக்கு சிவன் மீது இருந்த ஆழமான பக்தியால் ஏதோவொன்றை அர்ப்பணிக்க விரும்பினான். ஆனால் முறையாக அர்ப்பணிப்புகள் செய்யும் வழிமுறைகளை அறியாததால், வெள்ளந்தியாக தன்னிடம் இருந்த மாமிசத்தை லிங்கத்திற்கு அர்ப்பணித்து, சிவன் அதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் சென்றான்.

தொலைதூரத்தில் வாழ்ந்த ஒரு பிராமணனால் அந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவன் சிவபக்தனாக இருந்த போதிலும், தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்குச் செல்ல முடியாததால், மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்து சென்றான். அடுத்தநாள் பிராமணன் வந்தபோது, லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். இதை ஏதோ விலங்குதான் செய்திருக்கும் என்று எண்ணி கோயிலை சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றான். அடுத்தநாள் திண்ணன் இன்னும் அதிகமாக மாமிசத்தைக் கொண்டுவந்து படைத்துவிட்டு, பூஜையோ சடங்கோ எதுவும் தெரியாததால் அங்கே உட்கார்ந்து சிவனிடம் மனமாரப் பேசிவிட்டுச் சென்றான். தான் வேட்டையாடிய மாமிசத்தைப் படைப்பதற்காக தினமும் அக்கோயிலுக்கு வரத் துவங்கினான். ஒருநாள் லிங்கத்தை சுத்தம் செய்யத் தேவையாக இருக்கிறது என்று நினைத்த திண்ணன், தண்ணீர் இறைக்க பாத்திரங்கள் இல்லாததால் நீரோடைக்குச் சென்று வாயில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு வந்து லிங்கத்தின்மீது வாயாலே ஊற்றினார்.

பிராமணன் திரும்பியபோது, கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்கமுடியாத அருவருப்படைந்தான். இதை எந்தவொரு விலங்காலும் செய்திருக்க முடியாது, இதைச் செய்தது ஒரு மனிதனாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே கோயிலை சுத்தம் செய்து, பூஜை செய்வதற்கு முன்பு லிங்கத்தைத் தூய்மைப்படுத்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து, அர்ப்பணிப்புகள் செய்துவிட்டுக் கிளம்பினான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் திரும்பி வந்தபோதும், லிங்கம் அதே "அசுத்தமான" நிலையில் இருப்பதைக் கண்டு வெகுண்டான். ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்க சிவனிடம் வந்து, "தேவர்களுக்கு தேவனான மஹாதேவனே, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேட்டான். அப்போது சிவன் பதில் சொல்லலானான், "எதை நீ அசிங்கம் என்று சொல்கிறாயோ, அது எனக்கு இன்னொரு பக்தன் செய்த அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்."

பிராமணன் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் தண்ணீருடனும் வந்தான். எப்போதும் போல் சிவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்று கவனித்தபோது, லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டான். அதை குணமாக்க பச்சிலைகளை வைத்துப் பார்த்தான், குணமாகவில்லை, இரத்தம் இன்னும் அதிகமாகத்தான் வந்தது. இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவுசெய்தான். தன் கத்திகளில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தில் பொருத்தினான். இரத்தம் வடிவது நின்றதைக் கண்டு திண்ணன் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்தான். தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின்மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான். திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு அவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார், அப்போது அவனுக்குப் பார்வை திரும்பி சாஷ்டாங்கமாக சிவனின் காலடியில் விழுந்தான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் அல்லது நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

வேடர் குல மைந்தன்   :

பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர் (முற்காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகும்). இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகன் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தவதத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல தலைவராக்கினார். 

முன்னைத்தவத்தின் பயன் :

குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேடுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேடுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. 

நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.

#அந்தணரின் அவதி :

அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.

வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.

பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.

#குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது :

இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார்.

இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர்.

"அவன் நமக்கினியன்" - காளத்திநாதர் :

சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது.

#அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார் :

திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ.

மாணிக்கவாசகர் :

"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை "வா" என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி"

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...