Saturday, December 2, 2023

குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்- வேலூர்

குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்- வேலூர்


வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம்.
 ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு.
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.

இறைவி : மரகதாம்பிகை.

தல மரம் : பனை மரம்

தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும்.

பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் 'விரிஞ்சிபுரம்' என்றானது. அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது. விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார்.

சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, 'ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்' என்றார். நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.


அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது. பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான்.


சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும். பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.

அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும்.

வழித்துணை நாதர் : மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு 'வழித்துணை நாதர்' என்றும் பெயர் வந்தது.

போக்குவரத்து வசதி :

தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

தெரிந்து கொள்ளவேண்டிய சிவன் ஆலய தகவல்கள்...,

தெரிந்து கொள்ளவேண்டிய சிவன் ஆலய தகவல்கள்...,182
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19.  கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம் (ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25.  அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)   

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர் (திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம் (ஆணவம் அடங்கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார  தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம் (மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி. 

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா (தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம் (திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார் (சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலை நோய் (வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம் (வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர் (சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம் (ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி (மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான) பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை (அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம் (காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று (பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள் ( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச (பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன் (அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள் (சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

திருப்பூர் ஊத்துக்குளி 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்.



2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்
🕉திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. 

🕉ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

🕉தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

🕉பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார். 

🕉நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

🕉இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன. 

🙏🕉வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். 

🕉அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.
தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். 

🕉தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

🕉இரண்டு நந்தி : இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. 
முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.🙏🕉🌼

Friday, December 1, 2023

சனிபகவானுக்குரிய பரிகாரங்களை செய்து வளம் பெறுவோம்

 

♦️சனிபகவானுக்குரிய பரிகாரங்களை செய்து வளம் பெறுவோம்
🌷தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

🌷சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணை யில் தீபம் ஏற்றி வழிபடவும்.

🌷கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

🌷வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழ மை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

🌷சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப் பாக சாப்பிடக்கூடாது.

🌹சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

🌷ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

🌷ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

🌷தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

🌷அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

🌷கோமாதா பூஜை செய்யலாம்.

🌷ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

🌷சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

🌷அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

🌷சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

🌷உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

🌷வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

🌷பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

🌷தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

🌷சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

இறைவன் மத்திலீஸ்வரர்தாயார் பிருஹந்நாயகி செஞ்சி



ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை மத்தளேசுவரர் கோயில்
சிகாரி பல்லவேஸ்வரம் 
மேலச்சேரி
செஞ்சி. 
இறைவன்   மத்திலீஸ்வரர்
தாயார்    பிருஹந்நாயகி

ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். 

மேற்கு பார்த்த குடவரைக்கோவில்.
கண்டிப்பாக காண வேண்டிய அற்புத தலங்களுள் ஒன்று. 

இந்த குடைவரை கோவில் சிகாரி பல்லவேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. 

கருவறையில் தாய்ப் பாறையிலான இலிங்கத் திருமேனியும் கூரையில் தாமரையும் அமைந்திருப்பது விசேசமான ஒன்று.

கிராம மக்களின் ஒத்துழைப்போடு
மிக மிக மோசமான இடிபாடுகளுடன் 
இருந்த கோவிலை மிக அழகாக
பழமை மாறாது
புணரமைப்பு செய்து
கும்பாபிஷேகம் நடத்தி முடித்துள்ளனர் .

மத்திலீசுவரர் 

ஆவுடையார் ஜகதி, உருள் குமுதம், கம்பு, பாதங்களுடன் ஆன கண்டம், கம்பு, பட்டிகை என பாதபந்த தாங்குதள அமைப்புடன்  திகழ்கிறது. 

லிங்க பாணம் அதன் மீது அமைந்துள்ளது. 

கூரையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தாமரை சிதைந்துள்ளது. 

லிங்கம் தாய்ப் பாறையிலிருந்தே வெட்டப்பட்டுள்ளது. தாய்ப் பாறை லிங்கமும் கூரைத் தாமரையும் தமிழகத்தில் சித்தன்னவாசல் குடைவரை தவிர வேறு எங்கும் இல்லாதது, என்கின்றனர் வரலாறு ஆய்வாளர்கள்.

சித்தன்னவாசலில் தாய்ப்பாறை லிங்கம் தரைமட்டமாக்கப்பட்டு சுவடுகளே எஞ்சியுள்ளன .

பிருஹந்நாயகி

வடக்கு சுவரில் பாறையைக் குடைந்து பிருஹந்நாயகி அம்மன் புடைப்பு சிற்பமாக பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

வலது கையில் தாமரை ஏந்தி இடது கையை நெகிழ்  கரமாக (டோல  ஹஸ்தம்) தொங்கவிட்டுள்ளாள். 

கிரீட மகுடம் தரித்து கழுத்தணிகள், தோள்  மாலை, தோள் வளை, கை வளை, குரங்கு செறி, சிலம்பு, கால் வளை ஆகியன அணிந்து, கணுக்கால் வரையான ஆடை உடுத்துள்ள அழகிய உருவம் கொண்டு  அருள்பாலிக்கின்றார். 
விநாயகர் 

விநாயகர்  & முருகன்

விநாயகர் செதுக்கப்பட்டுள்ள கற் பலகை ஒன்று குடைவரை முகப்பிற்கு முன்பு தெற்கு சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.

கருவறைக்கு இருபுறமும் மேடைகள்.உள்ளன.
 தென்புற மேடையில் வள்ளி, தெய்வானை உடனான முருகர் அருள்பாலிக்கிறார். 

பெருமாளின் பாதமும் ஓர் சிறிய  யானையும் உள்ளது. 

நந்தி 

சோழர் கால நந்தியின் கழுத்தில் கயிற்று மாலை, இரு சதங்கை மாலைகள்  உள்ளன.,  கீழ் சதங்கை  மாலையிலிருந்து ஒரு வளைந்த தந்தம் தொங்குகிறது. 

நந்திக்கு முன் ஒரு லிங்கம்  செதுக்கப்பட்டிருப்பது மிகவும் தனித்தன்மை உடையது. 

இரு திருமுன்கள்

இரு திருமுன்கள் நந்தியின் பின்னால் குடைவரையை நோக்கியவாறு மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.  

அதில் விநாயகரும்
முருகனும் கிழக்கு நோக்கிய வணக்கம் அருள்பாலிக்கின்றனர்.

நீராழி மண்டபம்

குடைவரைக்கு எதிரிலுள்ள எரிக் கரையில் ஒரு நாற்கால் நீராழி மண்டபம் உள்ளது. 

எளிய தாங்குதளம். 3 சதுரம் 2 கட்டு தூண்கள். வெட்டுப் போதிகை, உத்திரம், வாஜனம், வலபி, வளைந்திறங்கும் கபோதம், கூரை வரை கல் கட்டுமானம். 

அதன்மேல் செங்கல் சுதைக் கட்டுமானம் - மாடங்களால்அமைந்த வேதிகை, வேசர (வட்ட வடிவ) கிரீவம், சிகரம்

முருகன் கோவில்

குடவரை கோவிலின் மேல் மலை உச்சியில் தனி முருகன் கோவில் இருக்கிறது.

மேற்கு நோக்கிய முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். 

கோவில் வரலாறு 

பல்லவ மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய் வதற்கு முன்பு வரை தமிழகத்தில் கட்டப்பட்ட கோவில்கள் செங்கல், மரம், உலோகம், சுண் ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டன. பல்லவ மன்னர்களின் காலத் தில் முதன் முறையாக பாறைகளை குடைந்து குடைவரை கோவில்களை அமைத்தனர்.

கல்வெட்டு 

இக்கோயிலின் வடக்குப் பகுதி தூண் ஒன்றில் வடமொழிச் சாசனம் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.  

சர்வநாதனான அரசர் சந்திராதித்யர்  சிம்ஹபுரத்தில் ஸ்ரீ சிகாரி  பல்லவேசுவரம் எனும் இறையகத்தை எழுப்பினார்."   சந்திராதித்யர் பல்லவ குடும்பத்தை சேர்ந்த சிற்றரரசர் ஆக இருந்திருக்கலாம்.

இக்கோயிலின் அமைப்பு முதலாம் மகேந்திர வர்மன் காலத்து அமைப்பை போன்றிருக்கிறது. இதனால் இக்கோயில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது”.

இத் தலத்தில் 
உள்ள குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை.  

இங்கே உள்ள குடைவரை கோவில்
செஞ்சி அருகே உள்ள தளவானூர், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குடைவரை அமைப்பு 

குடைவரை மேற்கு நோக்கியது. நான்கு தூண்கள் கொண்ட ஓரே ஒரு வரிசைத் தூண்களும் பின் சுவர் கருவறையும் கொண்ட எளிய குடைவரை. நடுவில் இரு முழுத் தூண்கள்.  பக்கத்தில் சுவரை ஒட்டி அரைத் தூண்கள். எல்லாத்  தூண்களும் முழுதும் சதுரமானவை. தூண்களின் மீது விரிகோண போதிகை. அதன் மீது உத்திரம். மேலே சற்றே வெளிநீட்டி இருக்கும் மெல்லிய போதிகை. அதன் மீது கபோதம். இந்த உறுப்புகள் அனைத்தும் எந்த சிற்ப செதுக்கலும் அற்றவை.

சுவருக்கும் தூண் வரிசைக்கும்  இடையே உள்ள இடம் அர்த்த மண்டபமாக இருக்கிறது. 

மிகவும் சக்தி வாய்ந்த சிவன்
வேண்டுவதையும் வேண்டாததையும்
நன்மைகள் பல அளிக்கிறார்.

ஒன்பதாவது தலைமுறையாக இந்த கோவிலில் பூஜைகள் செய்து வரும் செவலபுரை கிராமத்தை சேர்ந்த அ.சிவநாதகுருக்கள் குருக்கள் மட்டும்
மேலச்சேரியை சேர்ந்த குப்பன் என் பவரின் உதவியோடு நித்ய பூஜைகளை செய்து வருகிறார். 

கோவிலை பார்க்க தொடர்பு கொள்ள
அ.சிவநாதகுருக்கள்
பரம்பரை அறங்காவலர் & அர்ச்சகர்
9486911701
9952609193

கும்பகோணத்தில் இருந்து  km.

கும்பகோணத்தில் இருந்து விழுப்புரம்  செஞ்சி வந்து
செஞ்சி – செவலப்புரை சாலையில் 5ஆவது கி.மீ.இல் இருக்கிறது. மேலச்சேரி.

மெயின்சாலையில்
இடதுபுறம் உள்ள ஒரு மேல் நிலைத் தண்ணீர் தொட்டிக்கு அடுத்து இடப்புறம் பிரியும் ஒரு மண் சாலையில்  ஒரு ஏரியைச் சுற்றிக் கொண்டு சுமார் 1/2 கிமீ சென்றால் ஒரு சிறு பாறையின் மீது தெரியும் முருகர் கோயில். அங்கே பிரியும் காங்கிரீட் சாலையில் மலையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனால் 'சிகாரி பல்லவேசுவரம்'

.ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சதுரங்க வல்லபநாதர் கோயில்

சதுரங்க வல்லபநாதர் கோயில்

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவதலமாகத் திகழ்வது “பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்” ஆகும்.
இத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பதிகத்தில் இத்தல இறைவனைத் திருநாவுக்கரசர் “ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே” என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் இந்த பூவனூர் சதுரங்க வல்லப நாதருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுமட்டுமல்ல, ஏன் இந்த ஆலய இறைவனுக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற பெயர் வந்தது என்பது பற்றியும் காணலாம்.



தல வரலாறு
வசுதேவன் என்ற மன்னன் அத்தனை பொன் பொருள் பதவி இருந்தும் குழந்தை வரம் இல்லாமல் தவித்து வந்தான். ஒவ்வொரு சிவாலயமாக சென்று மனமுருகி வேண்டினான். தன் மனைவியுடன் திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினான். இவர்களின் வேண்டுதலை ஏற்ற நெல்லையப்பர், பார்வதியை வசுதேவனின் மகளாகப் பிறக்கும் படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருளினார்.

ஒரு முறை வசுதேவன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடி கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு தாமரையில் சங்கு வடிவில் அம்பிகை தோன்றினாள். வசுதேவ மன்னன் அந்த சங்கை எடுத்த உடன் அது குழந்தையாக மாறியது. மன்னனும் ராணியும் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறி, அக்குழந்தைக்கு ராஜேஸ்வரி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
பொன்னியின் செல்வன் : திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் சிறப்புகள் என்ன?
இறைவன் அருளியபடி, சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரி , அந்த குழந்தைக்கு வளர்ப்பு தாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தது. அன்பும் அழகும் அறிவுமிக்க குழந்தையாக வளர்ந்தாள் ராஜேஸ்வரி. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள்.

காலங்கள் ஆக, ராஜேஸ்வரிக்கு மணமுடிக்கும் நேரம் வந்தது. வசுதேவ மன்னர், யார் தன் மகளை சதுரங்க விளையாட்டில் ஜெயிக்கிறார்களோ, அவர்களுக்கே மணம் முடித்து தருவதாக அறிவித்தார். இறைவன் சித்தர் வேடத்தில் வந்து சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதாகக் கூறினார். மன்னனும் சம்மதிக்க, சதுரங்க போட்டி நடந்தது.

போட்டியில் சித்தர் வேடத்தில் வந்த சிவபெருமானே வென்றார். சதுரங்க போட்டியில் வென்ற இறைவன், உண்மையான வடிவத்துடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். மணம் மகிழ்ந்து இறைவனே ராஜேஸ்வரியை மணமுடித்தார். தம்பதி சமேதராய் இன்றும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார் பூவனூர் சதுரங்க வல்லப நாதர். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க.. அன்னை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டீஸ்வரியும் தனித்தனி சன்னதிகொண்டு இந்த ஆலயத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் வரை - வியப்பளிக்கும் 8 இந்தியக் கோவில்கள்
ஆலய சிறப்புகள்
சுகப்பிரம்ம ரிஷி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.இத்தல இறைவனுக்கு புஷ்பவன நாதர் என்ற பெயரும் உண்டு.

கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், என்ற தீர்த்தம் இந்த ஆலயத்தில் உள்ளது. கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது இந்த தீர்த்தம்.

சிறப்பு வாய்ந்த சாமுண்டீஸ்வரி சன்னதியில். விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்

விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், அகத்தியர் சுகமுனிவர் ஆகியோர் பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் இது.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சதுரங்க வல்லப நாதரைப் பிரார்த்தனை செய்து வழிபடக் குணமாகிறது என்பது நம்பிக்கை

பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் அது சரியாக, திருமணத்தடை நீங்குவதற்கு, குழந்தை பாக்கியம் ஆகியவற்றைக் குறைவின்றி அருள்கிறாள் சாமுண்டீஸ்வரி

இந்த திருத்தலத்தில்தான் அகத்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளைப் போதித்தார் என்று கூறப்படுகிறது.


சதுரங்கப்போட்டியும் சதுரங்க வல்லப நாதரும்
சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் தோன்றியது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சதுரங்க வல்லப நாதரின் ஆலயமோ, புராணக் கதைகளோ பலருக்கும் சென்று சேரவில்லை. பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்வோர் நிச்சயம் இந்த ஆலயத்திற்கு வருகை புரிவது வழக்கம்.

திருநாவுக்கரசர் இவ்வாலய இறைவனைப் போற்றி புகழ்ந்து நெகிழ்ந்து மனமுருகி பாடிய பாடல்களை இன்றளவும் மக்கள் பாடி, ஈசனை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சமீபத்தில் ஒரு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார் சர்வதேச சதுரங்க போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், பாடல்பெற்ற, புராண வரலாறு கொண்ட இத்தலத்தைப் பற்றி மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக அரசும் பூவனூர் சதுரங்க வல்லப நாதருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தித் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்
கீழடி ஆய்வில் சதுரங்கம்
ஜூலை 28ம் தேதி 2022ல் மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. மிகவும் தொன்மையான இந்த செஸ் விளையாட்டு பற்றி கீழடி ஆய்விலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சியில் சூளையில் சுடப்பட்ட சதுரங்க ஆட்ட காய்கள் கிடைத்துள்ளன.

இது போன்ற சுடுமண் ஆட்டக்காய்கள் திருக்காம்புலியூர், காஞ்சிபுரம், போவோம்பட்டி, திருக்கோவிலூர் போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே உள்ளது

நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் பூவனூர் சதுரங்க வல்லப நாதர் ஆலயத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – நுங்கம்பாக்கம் சென்னை.

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – நுங்கம்பாக்கம் 
Sri Agatheeswarar Temple-Nungambakkam
இறைவன் : அகத்தீஸ்வரர்
தாயார் : ஆனந்தவல்லி

தல விருச்சகம் : வன்னி மரம்

ஊர் : நுங்கம்பாக்கம்

மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு

பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி இவ்வூரில் உள்ள குளத்தில் நீராடி இத்தலத்தில் அமைந்துள்ள ஈஸ்வரனையும், தாயாரையும் வணங்கினால் சூளை நோயிலிருந்து விடுபடலாம் என்று கூறி மறைந்தார் ,அவ்வாறே மன்னன் செய்து முடிக்க அவர் நோயிலிருந்து முழுவதும் குணம் அடைந்தார் .அரசன் அகத்தில் இருந்து ஈஸ்வரனை வழிபட்டதால் அகத்து ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டார் நாளடைவில் இப்பெயர் மருவி அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . பொம்ராஜபுரம் என்ற ஊர் இப்பொழுது நுங்கம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
திருவானைக்காவல் அடுத்தபடியாக இக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுவது சிறப்பு .
சுக்ராச்சாரியாருக்கு சிவபெருமான் முதலில் காட்சி கொடுக்க விட்டு கொடுத்த அம்பாள் தனக்கு உரிய வெள்ளிக்கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் அன்று தன்னை பூஜிப்பவர்களுக்கு சுக்ரதோஷம் வரக்கூடாது என்று சுக்கிரனுடன் கேட்டுக்கொண்டார் சுக்கிரனும் அதை ஏற்றுக்கொண்டார் . சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை ,பல கோயில்களில் வெள்ளிக்கிழமையில் பூஜைகள் நடந்தாலும் இக்கோயில் அம்மனுக்கு சுக்ரவாரம் பூஜை சிறப்பு வாய்ந்தது அன்று அம்மனை பெண்கள் பல்லக்கில் தூக்கி வருவது சிறப்பாகவும் ,ஆதலால் இவ் தாயாருக்கு சுக்ரவார அம்மன் என்ற பெயர் உண்டு .
இக்கோயில் சுமார் 400 வருடங்கள் முந்தையது என்று கருதப்படுகிறது
இக்கோயின் திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் கிழக்கு வாசலில் அமையப்பெற்ற திருகுளமாகும். இது ஒரு அபூர்வ அமைப்பாகும் .
கல்வி ,உடல்நலம் , திருமணம் ஆகியவற்றைக்கு வேண்டுதலுக்கு உரிய தலம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...