Monday, March 11, 2024

அயோத்தியில் உள்ள சிவன் கோவில் நாகேஷ்வர்நாத் கோயில்

 உத்தரப்பிரதேசம்  அயோத்தி 
நாகேஷ்வர்நாத் கோவில் - அயோத்தியில் உள்ள சிவன் கோவில்

 
நாகேஷ்வர்நாத் கோயில் அயோத்தியில் உள்ள ராம் கி பைடியில் அமைந்துள்ள நாகேஷ்வர் நாத் அல்லது பாம்புகளின் இறைவன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவராகவும் சிவபெருமான் உள்ளார். கோயிலின் கருவறையில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று உள்ளது. சிவராத்திரி விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது, மேலும் இந்த கொண்டாட்டங்களின் போது ஷிவ் பாரத் ஊர்வலம் எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. மஹாசிவராத்திரி பண்டிகையின் போது கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
 
 
நாகேஷ்வர்நாத் கோயில் ராமரின் இளைய மகனான குஷ் என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. புராணக்கதை என்னவென்றால், குஷ் ஒரு நாக்-கன்யாவால் பிடிக்கப்பட்ட சரயுவில் குளிக்கும்போது, ​​குஷ் தனது கவசத்தை இழந்தார். அவள் சிவபக்தியாக இருந்ததால், குஷ் அவளுக்காக இந்தக் கோயிலை எழுப்பினான். சந்திரகுப்த விக்ரமாதித்யாவின் ஆட்சி வரை, நகரின் மற்ற பகுதிகள் இடிபாடுகளாக மாறியிருந்தாலும், கோயில் நல்ல நிலையில் இருந்ததாக நம்பப்படுகிறது. தற்போதுள்ள கோவில் 1750 ஆம் ஆண்டு சப்தர் ஜங்கின் அமைச்சரான நவல் ராய் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.
 

 
தென்னிந்தியாவில் பிரதோஷ விரதம் அல்லது பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படும் மகாசிவராத்திரி மற்றும் திரயோதசியின் போது நாகேஷ்வர்நாத் கோயில் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. சிவன் பாரத் அல்லது சிவபெருமானின் ஊர்வலம் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாகும். அக்டோபர் முதல் மார்ச் வரை அயோத்திக்கு செல்ல சிறந்த நேரம்.
 
கோவில் நேரம்: காலை 5:00 முதல் இரவு 8:00 வரை
ஆரத்தி நேரம்: காலை 5:00 முதல் 6:00 வரை மற்றும் இரவு 8:00 முதல் இரவு 8:30 வரை
 
நாகேஷ்வர்நாத் கோவில் அயோத்தி இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களிலிருந்தும் விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. லக்னோ சர்வதேச விமான நிலையம் அயோத்தியில் இருந்து 152 கிமீ தொலைவில் உள்ளது. அயோத்தி கோரக்பூர் விமான நிலையத்திலிருந்து 158 கிமீ தொலைவிலும், பிரயாக்ராஜ் விமான நிலையத்திலிருந்து 172 கிமீ தொலைவிலும், வாரணாசி விமான நிலையத்திலிருந்து 224 கிமீ தொலைவிலும் உள்ளது. அயோத்தி மற்றும் பைசாபாத் மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன, மேலும் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து அயோத்தியை அடைய மிகவும் எளிதானது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கிருத்திகை விரதம்*...!!

*கிருத்திகை விரதம்*...!!
*கிருத்திகை விரத நாளில்.. கவலைகள் நீங்க முருகனை மனதார வழிபடுங்கள்*..!!

முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதிலும் நாளை சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழ மையில் (மே 29ஆம் தேதி) கிருத்திகை தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

கிருத்திகை நட்சத்திர விரதம் :

கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக்கண் ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப் பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்தனர்.

முருகப்பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்க ளுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார் சிவபெருமான், கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத் தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்கு இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார் கள் என்றும் வரம் அளித்தார்.

விரதம் இருக்கும் முறை :

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெரு மானை நினைத்து விரதம் மேற் கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.

கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

மேற்கண்ட முறையில் முருகனை வைகாசி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக் கும் சென்று வழிபடுவது சிறப்பு.

மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வற்றை இந்த தினத்தில் அன்ன தானம் செய்தால் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கிருத்திகை விரதத்தை பின்பற்றுங்கள்..!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, March 10, 2024

நாகைக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பு - நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள்

நாகைக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பு -  நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள்
நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், இறுதியாக நாகை காரோணத்தில், நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான். எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

காசிக்கு இணையாகக் கருதப்படும் சிவராஜதானி ஷேத்திரம் எனக் குறிப்பிடப்படும் நாகையில், காயாரோகணசுவாமி கோயிலை சுற்றியுள்ள 12 சிவாலயங்களை மகா சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது ஆன்மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே பின்வருமாறு.

1. நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)

2. அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில் 
(நீலா கீழ வீதி தேரடி அருகில்)

3. சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)

4. ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)

5. நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி - அன்சாரி ஆஸ்பத்திரி இருக்கும் தெரு)

6. அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி - பெருமாள் கோவில் அருகே)

7. மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி NHSS பின்புறம்)

8. விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. அமிர்தகடேஸ்வரம் , கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)

10. கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)

11. காசிவிஸ்வநாதம், 
காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

12. அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)

சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம் 
ஓம் நமசிவாய

Saturday, March 9, 2024

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய மாசிஅமாவாசையும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரிஅம்மன்.

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய 
#மாசிஅமாவாசையும் #மேல்மலையனூர் #அங்காளபரமேஸ்வரிஅம்மன் திருக்கோயில் 
#மயானகொள்ளையும்:
சக்தி வழிபாடனது நம் தமிழர்களின் பழமையான வழிபாடாகும். கொற்றவை (காளி) பாலை நில கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கருதப்பட்டு வழிப்பட்டு வந்தனர்.இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாளே எங்கு பார்ப்பினும் விண் அதிர பம்பை மற்றும் உடுக்கை ஓசையும், பாடல்களும் ஒலித்து கொண்டு இருக்கும்.அஷ்ட திக்கினையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் ஆகும்.

சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசை தினம் தந்து தமிழ்நாடு முழுவதும் அங்காள பரமேஸ்வரி கோயில்களில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேல்மலையனூர் திருக்கோயிலில் கொண்டாடப்படும் இந்த மயான கொள்ளை திருவிழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#மயான_கொள்ளை:

மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.

#புராண_வரலாறு:

துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையைப் பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்குப் பார்வதியே காரணமெனக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை "கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாகக் கொண்டு வாழ்வாய்!' எனச் சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசுனுக்கு உரிமையான ஒரு நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றைக் கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.

இந்தக் கோவிலிற்குச் சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போலக் கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளை திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

#மயான_கொள்ளை விழா தோற்றம்:

அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின.அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார்.அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

#மாசி_அமாவாசை மயான கொள்ளை வரலாறு :

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது  நடைபெறுகிறது.அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதாள். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர்.அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.

#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில்:

காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. அங்கத்தில் கோர ரூபமாக இருப்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பட்டாள் அன்னை. சிவனின் கரத்திலிருந்த கபாலத்தை அடித்து நொறுக்கி ஆவேச நடனமிட்ட இடம் மேல்மலையனூர் எனப்படுகிறது.

ஆண்டுதோறும் வெகு விமர்சையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. பல்வேறு விதமான வேண்டுதல்களுடன் அங்காள பரமேஸ்வரியை அனுகிய பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இந்த மாசி மாதம் மயான கொள்ளை திருவிழாவிற்கு வருகை தருவார்கள். இந்த நேரத்தில் மேல்மலையனூர் ஸ்தம்பித்து நிற்கும் அளவிற்கு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள்.

மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு, தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல், கொழுக்கொட்டை, தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவாகியது.

சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

மாசி அமாவாசையில் அம்பிகை முழு சக்தி பலத்தோடு வீற்றிருப்பாள். அன்றைய தினம் சென்று அகில உலக நாயகியான அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வேண்டிய நலன்களைப் பெறுவோம்.

"அங்காளியே ஆடி வரவேணுமம்மா..

ஆதிபராசக்தியே ஓடி வரவேணுமம்மா..

மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

ஏழு கரகமம்மா எடுத்தாடும் விற்கரகம்

பத்துக் கரகமம்மா பதிந்தாடும் பசுங்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளையாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா..."

சதுர்யுகங்களுக்கும் முற்பட்ட யுகமான மணியுகத்திற்கும் முன்பே தோன்றிய அங்காளியம்மனின் அருளால், நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லாத் தீமைகளும் விலகி, நாளும் நலமே சூழ பிரார்த்திப்போம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்

*மங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்*🌹
 _வேதசத்சங்கம்_

சிவபெருமானின் கட்டளைப்படி பூலோக மக்களை காத்திடும் பொருட்டு, அன்னை பார்வதி தேவி, பத்ரகாளியாய் அவதரித்து பூலோகம் முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள், அரபிக்கடல் அருகில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் இருந்து 'ஓம்சக்தி பகவதி காளி சூலினி' என்ற மந்திர ஒலி தொடர்ச்சியாக காற்றில் மிதந்து வந்தது. அந்த மந்திர ஒலி அம்பாளை கட்டி இழுத்தது. பைரவர் என்ற சித்தர் ஸ்ரீசக்கரம் அமைத்து, அதில் அமர்ந்து கொண்டு தேவியின் நாமங்களைக் கூறியபடியே பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு இருந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மண் புற்று வளர்ந்து, அவரை மூடி மறைத்து, ஸ்ரீசக்கரம் புற்றாக காட்சியளித்தது.

பைரவ சித்தரது தவத்தின் வலிமையையும், சக்தியையும் உணர்ந்த அன்னை, அந்த சித்தருக்கு நேரில் காட்சி கொடுத்தாள். அன்னையின் திருக்காட்சியை காணப்பெற்ற சித்தர் பூரிப்படைந்தார். பின்னர், 'தாயே! நான் பூஜித்த ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்' என்று வரம் கேட்டார். அன்னையும் அவ்வாறே வரமளித்து அந்த ஸ்ரீசக்கரத்தில் ஐக்கியமாகி விட்டார்.

ஸ்ரீசக்கரத்தின் மேல் மணல் புற்று வளர்ந்தது. ஒரு நாள் மணல் மேடாகிப் போன அந்த புற்றில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் இதுபற்றி பிரசன்னம் பார்த்தபோது அங்கு பத்ரகாளித் தாய், பகவதியாக வீற்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு பகவதி அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. புற்று ரூபத்திலேயே பகவதி அம்மன் அருள்புரிந்து வருகிறார். புற்றின் தலைப்பகுதியில் அம்மன் உருவம் உள்ளது.

இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகள் போன்று மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும்.

பகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும்.

மேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப் போல, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கும் இருமுடி கட்டி மாசி மாதத்தில் செல்கின்றனர். குறிப்பாக இங்கு பெண்கள்தான் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர். இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள அம்மன் புற்று வடிவம். புற்று, மணலால் ஆனது. மண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வீடு கட்டுவது, தடைபட்ட வீட்டு பணிகள் தொடர, நிலம் வாங்க, வாஸ்து கோளாறுகள் நீங்க இந்த தலத்தில் செவ்வாய் அன்று 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறிது மண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில்தான் பகவதி அம்மன் அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அன்றைய தினம் அம்மனுக்கு அளப்பரிய பூஜை ஒன்று நடத்தி, குத்தியோட்டம், பூமாலை, துலாபாரம், பிடிப்பணம் போன்றவை நடத்தப்படுகிறது. மாசித் திருவிழாவே இந்த கோவிலில் நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.

மாசித் திருவிழாவின் 10-ம் நாள் விழாவின்போது, நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி, ஒரு பனை ஓலைபெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் சூழ 'ஒடுக்கு பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் நடைபெறும் ஊர்வலத்தின்போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும். பறையொலி மட்டுமே கேட்கும்.

ஒடுக்கு பூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாத குழந்தைகளுக்கு கொடுத்தால் பேசாத, அவர்களுக்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை. நேர்த்திக் கடனாக ஆண் குழந்தைகளுக்கு உடலில் அலகு குத்தும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும், பெண் குழந்தைகள் மாவிளக்கு ஏந்தி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நாகதோஷம் நிவர்த்தியாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ராகு காலங்களில் இந்த தலத்திற்கு வந்து இரண்டு நெய் தீபம் ஏற்றி, 3 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு வைத்து தொடர்ந்து மூன்று வாரங்கள் வழிபட்டால் திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

பகவதி அம்மனை புற்று வடிவில் வழிபட்ட பக்தர்கள், அன்னையிடம், 'உன் மண்டையைக் (தலை) காட்டம்மா' என்று வேண்டினர். 'புற்றின் சிரசே தனது சிரசு' என்று கூறி புற்றாகவே அன்று முதல் இன்று வரை பகவதி அருள்புரிந்து வருகிறாள். 'மண்டையைக் காட்டம்மா' என்று பக்தர்கள் பகவதியிடம் இத்தலத்தில் வேண்டியதால் இத்தலம் 'மண்டைக்காடு' என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு பெயர்க்காரணமும் தெரிவிக்கப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாக கேரளா பண்பாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது ஆலயம் இருக்கும் இடம் முன்பு காடாக இருந்துள்ளது. இதனால் சுற்றியுள்ள மக்கள் இந்த பகுதியில் ஆட்டு மந்தைகளை மேய்த்து வந்துள்ளனர். அதனால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி, 'மண்டைக்காடு' என்றானதாக அறியப்படுகிறது.🌹

Thursday, March 7, 2024

300 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ மஹா சிவராத்திரி

300 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ மஹா சிவராத்திரி பற்றிய பதிவுகள் :*
விரதங்களிலேயே சிறந்தது மஹா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன.

மஹா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர், சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக் கிழமை மஹாசிவராத்திரி வந்துள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன. 

அப்போது சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். கூடவே ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மஹா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மஹா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. 

இந்த மஹா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவ தியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.

மஹா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.

சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங் களையும் நிறை வேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும். 

சிவயோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திரஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும். மஹா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவயோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது.

ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும்.

இந்த மஹா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கிவிடும்.

ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மஹா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்ய தவறாதீர்கள்.

சிவ யோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்று தரும். உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள்.

சித்த யோகம் கூடி வருவதால் விநாயகப் பெருமானையும் இந்நாளில் வணங்கிட வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

இந்த மஹா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.

மஹா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம்.

இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றனர் ஜோதிட நூல்கள்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

மகா சிவராத்திரி: நான்கு சாம பூஜைகள் என்ன...

மகா சிவராத்திரி: நான்கு சாம பூஜைகள் என்ன...? அவை எவ்வாறு செய்யப்படுகின்றன.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய  நலன்களை இது வழங்குகிறது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. 
சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு சாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விஷேசமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த சாமப் பூசைகளின் போது எவைகளை கொண்டு வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

 
மகா சிவராத்திரி நான்கு பூஜை காலங்கள்:
 
முதல் கால பூஜை -  இரவு 7:30 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 10:30 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:00 மணிக்கும், நான்காம் கால பூஜை  அதிகாலை, 4:30 மணிக்கும் செய்யப்படுகிறது. 

 
முதல் சாம பூஜை: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்"  (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும்  செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில்  விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். 
 
இரண்டாம் சாம பூஜை: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த  அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக  படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன  தானிய சம்பத்துக்கள் சேரும்.
 
மூன்றாம் சாம பூஜை: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ  இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக  படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்னவென்றால், இதை லிங்கோத்பவ  காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள  லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள்  கிடைக்கும். 
 
நான்காம் சாம பூஜை: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து  ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக  பூஜைகள் செய்யப்படுகிறது. 
 
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுவோம்
ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...