Tuesday, December 31, 2024

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு... அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை.....

♦️அருள்மிகு ♦️விருந்தீஸ்வரர் ♦️திருக்கோயில், ♦️வடமதுரை, ♦️கோயம்புத்தூர்
🎈திருவிழா மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் விசேஷ நாட்கள் ஆகும்.

🔔தல சிறப்பு

ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார்.

ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

💟பொது தகவல் மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப் பட்டது. கோயிலில் உள்ள கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறுவப்பட்டது என தெரிகிறது.

🛐பிரார்த்தனை பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம்.

🙏🏾நேர்த்திக்கடன் தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

💞தலபெருமை அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.

தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும்.

♦️தல வரலாறு

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி லிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது.

தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது.

இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் "விருந்தீஸ்வரர்'.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Monday, December 30, 2024

சோழநாட்டு திருச்செந்தூர் முருகன் கோயில்..

அருள்மிகு முருகன் திருக்கோயில்,
திருவிடைக்கழி- 609310,  தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.        
*இறைவர் திருப்பெயர்:   காமேசுவரர்  

*இறைவியார் திருப்பெயர்: காமேசுவரி (சந்நிதி இல்லை)        

*தல மரம்: இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாகும்.

*தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.   

*வழிபட்டோர்: முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர்.                 

*பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், சேந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.                          

*இது சேந்தனார் முத்தி பெற்ற தலம். 

 *இத்தலத்துக்கு மகிழவனம் என்ற பெயரும் உண்டு.   

*திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது. 

*சோழநாட்டு திருச்செந்தூர் எனவும் இந்தக் கோயில் போற்றப்படுகிறது.                  

*முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. 
 
*சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன்,  போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான்   என்பதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. தாய் பார்வதிதேவியின் ஆலோசனைப்படி
அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக முருகன் தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது.          

*தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டு மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும்  அமர்ந்தார். 

*மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். 

*இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம்  உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.   

*ஆறடி உயர அழகான வடிவத்துடன்  சுப்பிரமணியர்  நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.        

*குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக உள்ளது. 

*அம்பாள்  இங்கிருந்து தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. 

*தெய்வயானைக்கு தனி சந்நிதி உள்ளது. 
முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது.  தெய்வானையின் முகம், நாணத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம்.  

*மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாக உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.                

*குரா என்பதை திருப்பி நோக்கினால் ராகு எனவரும். 
*முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, 
ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். 

*நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும்.    

*சிவசண்டேசுவரர், குகசண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக இங்கு சண்டேசுவர மூர்த்தங்கள் இரண்டு உள்ளன.   

*ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்,      சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை,  புறப்பட்டு சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு குராமரத்தடியில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனை நடைபெறும். 

இந்த பாதயாத்திரை வழிபாட்டில் பல  மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து அங்கிருந்து பாதயாத்திரையாக  திருவிடைக்கழி வந்து முருகனை வழிபடுகின்றனர்.

*கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. 

*மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி சென்று  அங்கிருந்து 3 கி.மீ சென்றால் திருவிடைக்கழி தலத்தை அடையலாம்.                  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன் கோவில் திருப்பூர்..

சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-
1. பொய் ஆகவே ஆகாது!

2. கோவில் மேல் கோவில!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. 

ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. 

இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.

ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது. 

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். 

சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்கள் கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. 

மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:- 

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. 

கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய  கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!

மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை  ஏற்றிக்கொண்டு  அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது  மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். 

பின்னர்  15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. 

அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள்  மிளகு மூடைகளாக மாறின.

இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு   நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. 

இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது.

ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். 

பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். 

அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, 

இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும்.

இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது.

அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தது ஏன்?

ஹனுமத் ஜெயந்தி.
அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தது ஏன்?
ராம தூதரான ஆஞ்சநேயருக்கு.பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரிமைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் எனப் பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். ராமாயணக் காவியத்தின் முக்கிய கதாப்பாத்திரமே அவர்தானே.
சில கோயில்களில் அனுமார் பஞ்சமுகத்துடனும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர்  பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே.  
உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் தன்னுடைய சகோதரனான அகிராவணனிடம் இதைப்பற்றி கூறினான். தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்திச்சென்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று  வாக்களித்தான்.
ஆனால் வீரமும் விவேகமும் நிறைந்த அனுமாரை மீறி அகிராவணனால் இராமனையும் லக்ஷ்மணனையும் கடத்த முடியவில்லை. அதனால் தந்திரத்தைக் கையாண்டார். 
விபீஷணன் உருவத்திற்கு மாறினான் அகிராவணன். இராமனையும் லக்ஷ்மணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்குத் தூக்கி சென்றான். சற்று தாமதமாக விபீஷணன் மூலம் விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி இராமனைக் கடத்தி சென்றதினாலும் கடும் கோபமடைந்தார். அகிராவணனைக் கொன்று ராமனை மீட்பேன் என வானரப்படைகளுடன் பாதாளம்  புறப்பட்டார்.
பாதாள உலகின் வாயிற்காப்பானாக மகரத்வஜன் பொறுப்பேற்றிருந்தான். அனுமானை வணங்கிய மகரத்வஜன், அனுமானை ''நான் அகிராவணனின் சேவகன். வீர அனுமானின் புத்திரன். தாங்கள் யார்?''என்றான். தனக்குத் திருமணமே ஆகவில்லையே. புத்திரன் எப்படி இருக்க முடியும்? எனக் குழம்பினார், அனுமன். ஆனால் மகரத்வஜனின் ஆணித்தரமான பதிலால் எப்படி சாத்தியம் என்பதைத் தியான திருஷ்டியில் அறிந்து கொண்டார். 
(இராவணனால் அனுமானின் வாலில் மூட்டப்பட்ட தீயானது இலங்கையையே தீக்கரையாக்கியது. அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாத அனுமார் பெரிய நீர் நிலையில் மூழ்கி உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டார். அப்பொழுது உஷ்ணத்தால் வெளிவந்த உயிரணு, 'மகர்' என்னும் பெண் மச்சத்தின் உடலுக்குள் சென்றது. மகர் கருவுற்று ஒரு புத்திரனை ஈன்றது. அவனே மகரத்வஜன்.
தன் மகன் என்பது உண்மைதான் என்று அறிந்து கொண்ட அனுமன் தான் மகரத்வஜனின் தந்தையாகிய அந்த அனுமன் என்பதைக் கூறி நடந்த விபரங்களை எடுத்துரைத்து பாதாள அரண்மனைக்கு வழிவிடுமாறு கூறினார். 
''நீங்கள் என் தந்தையானாலும் என்னால் உங்களை அனுமதிக்க முடியாது. ஒன்று என்னுடன் போர்  செய்யுங்கள் அல்லது திரும்பி செல்லுங்கள்''  என்றான்.
வேறு வழியின்றி தந்தையும் மகனும் போரிட்டினர். மிகத் தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானரப் படை பயந்தது. அனுமன் தன் பலத்தைப் பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார். அனுமன் தனியாகப் பாதாள அரண்மனையின் உள்ளே சென்றார்.
அகிராவணனைக்  கண்டதும் கோபத்தில் பலவாறு தாக்க முற்பட்டார். எவ்வளவு முயற்சித்தும் மாயைகளை உடைத்து அகிராவணனை வெற்றி  கொள்ள முடியவில்லை. அகிராவணது சக்தியை உடைக்க ஒரே வழி ஐந்து திசைகளில் உள்ள வெவ்வேறான விளக்குகளை ஒரே நேரத்தில் அணைப்பது மட்டுமே என்று அறிந்து கொண்டார். 
அச்சமயமே அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக (அனுமன், நரசிம்மம், வராகம், ஹயக்ரீவர், கருடன்) உருவெடுத்து ஐந்து திசைகளில் உள்ள விளக்குகளை ஒரே சமயத்தில்  அணைத்தார்.
அடுத்த கணமே அகிராவணனின் மாயசக்தி குறைந்தது, ஒரே  வீச்சில் அவன் உயிர் பறித்தார் ஆஞ்சநேயர். இராமனையும் லக்ஷ்மணனையும் மீட்டு விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். ராமபக்தன் என்பதையும் நிரூபணம் செய்தார். 
பஞ்சமுக ஆஞ்சநேயருக்குப் பல இடங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மந்திராலயம் சமீபத்தில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் விசேஷமாக்க கருதப்படுகிறது. காரணம் என்ன? ஸ்ரீ ராகேந்திரர் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்தார். 
அப்பொழுது  ஸ்ரீ ஹனுமானின் பஞ்ச முகம், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வராகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி , ஸ்ரீ கருட வாகனத்துடன் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு இந்தத் தலத்தில் காட்சி கொடுத்ததாக்க கூறப்படுகிறது. இதற்குப்பிறகே ஸ்ரீராகவேந்திரர் மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்தார் எனக் கூறப்படுகிறது. 
ஆஞ்சநேயர் பஞ்சமுகி என்னும் இடத்தில் ஒரு பாறையின் மேல் சுயம்பு வடிவமாக எழுந்தருளியிருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்டதால் பஞ்சமுகி என்பதே இத்தலத்திற்குப் பெயரானது. 
கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம், தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர், மேற்கு நோக்கி இருப்பது கருடர், வடக்கு நோக்கி இருப்பது வராஹர், உச்சியில் இருப்பது ஹயக்ரீவர். இம்முகங்கள் நமக்கு அறியப்படுத்து வன என்ன? ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். 
இறைவன் நாமாவளி சொல்வது, இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது, இறைவனைக் கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது, இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது. பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளைத் தான் குறிக்கிறது.
ஹனுமத் ஜெயந்தி அன்று ஸ்ரீ அனுமான் சலீஸா படிப்பது மிகவும் மேன்மையைத் தரும். பல மடங்கு பலனைத்தரும். வேண்டிய சௌபாக்கியத்தினைத் தரும்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, December 29, 2024

சீதா தேவியால் சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர் அனுமன்..

அனுமன் ஜெயந்தி. 
⚛️அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தையும் அனுமன் ஒன்றாக அமையப் பெற்றவர். சீதா தேவியால் ‘சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப் படுகிறது. அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர்.

⚛️தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தியாக அனைத்து அனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.

🔯“இராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். இவர் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதும் நம்பிக்கையாகும்.

⚛️அனுமன் பெயர் காரணம்:

🔯சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க் காரணம் உண்டு.

⚛️அனுமனுக்கு வேறு பெயர்கள்:

தமிழ்நாட்டில் அனுமன், அனுமார், ஆஞ்சநேயர் என்றும், கர்நாடகத்தில் அனுமந்தய்யா என்றும் ஆந்திரத்தில் ஆஞ்சநேயலு, சஞ்சீவய்யா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரத்தில் மாருதி, மஹாவீர் என்றும், உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் பஜ்ரங்பலி என்றும் அழைக்கப்படுகிறார்.

🔯அனுமன் ஜெயந்தி விரதம்:

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து இராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் இராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். வசதி இருந்தால் வடை மாலை சாத்தியும், வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.

🔯அன்று வீட்டில் ஆஞ்சநேயர் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். அன்று துளசிதாசரின் அனுமன் சாலிஸா, சுந்தரகாண்டம் பாராயணம் செய்தும், ஸ்ரீராம நாமம் ஜெபித்தும், அனுமன் காயத்ரி சொல்லியும் அவரது அருளைப் பெறலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

⚛️அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.

🔯அனுமன் காயத்ரி:

⚛️‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்நோ
ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

🔯அனுமனுக்கு மாலை அணிவிப்பதின் பலன்:

🔯அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ஶ்ரீ இராம பிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

🔯அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதால் நாம் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.

🔯அனுமனுக்கு வடை மாலை அணிவித்து தானம் செய்தால் கிரக தோஷம் நீங்கி செல்வ பாக்கியம் பெறலாம்.

🔯அனுமனுக்கு எலுமிச்சம்பழம் மாலை சாத்துவதால் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறலாம்.

🔯வெண்ணெய் சாத்துதல்:

🔯இராம, இராவண யுத்தத்தின் போது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு செல்லும் போது இராவணனின் சரமாரியாய் தொடுக்கப்பட்ட அம்பால் அனுமான் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் வந்துள்ளது. வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உள்ளதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்பதும் ஐதீகம்.

🔯சனி பகவான் பாதிப்பு நீங்க:

🔯எல்லோரையும் விதிப்படி கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை அனுமன் கலங்கச் செய்தார்.

🔯இராம பிரான் சீதாபிராட்டியாரை மீட்க இராவணனுடன் போரிடுவதற்காக இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது சனி பகவான் அனுமனிடம் வந்து “உன்னை நான் விதிப்படி இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். அதற்கு அனுமனும் “கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்வது தவறு, வேண்டுமென்றால் எனது தலை மேல் உட்கார்ந்து கொள்” என்றார். சனி பகவானும் தலை மேல் ஏறி அமர்ந்தார். அனுமன் கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றி தனது பணியினை தொடர்ந்தார். பாரம் தாங்க முடியாத சனிபகவான் அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். இரண்டரை மணி நேரம் கழித்து தலையிலிருந்து இறங்கிய சனிபகவான் அனுமனிடம் இனி “இராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் தொடுவதில்லை” என கூறிவிட்டு சனிபகவான் அகன்றார்.

🔯அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வர பகவானின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

🔯அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:

🔯ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டும் எவரிடம் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டே... “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்” என்றார் அன்பர். “வாயு புத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள். “ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார். பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?” என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். பெரியவா ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பதில் சொல்ல ஆரம்பித்தார்...

🔯“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று அந்தக் குழந்தைக்கு சந்திரனை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள், அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். குழந்தைகளின் அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், இராமதூதனான அனுமனுக்கு பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயுபுத்திரன் ஆன அவர் வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த பந்தயத்தில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

🔯இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை என்றும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். உளுந்துப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் தயாரித்த வடைகளை மாலை ஆக்கி அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து வடைகள் செய்து அவைகளை பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் உண்டு. வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு தயாராகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்கிறார்கள். இனிப்பு விரும்பிகள் ஆன அவர்கள் உளுந்து மற்றும் சர்க்கரையால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி வளைந்த உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா. பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

⚛️அனுமன் ஜெயந்தி நன்னாளில் இராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்து அருள் புரிவார். எனவே அவரை இராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்

ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்🙏🙏🙏

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தமிழ் நாட்டில் முக்கிய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்:-

*அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்*
தமிழ் நாட்டில் ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்கள்:-
01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்
02. தஞ்சை ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் கோவில்

03. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி ஸந்நதி, கோதண்டராமர் கோவில், செங்கல்பட்டு

04.வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில்
அனந்தமங்கலம்

05. ஸ்ரீ தாஸ் ஆஞ்சநேயர் கோவில் , தர்மபுரி

06. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், நங்கை நல்லூர் (நங்கநல்லூர்) சென்னை

07. அனுமன் காட்டிய திருச்சித்திரகூடம், தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி 

08. ஸ்ரீ சஞ்சீவி ராயர் கோவில், வல்லம், தஞ்சாவூர்

09. ஸ்ரீ முக்யப்ராணா (ஆஞ்சநேய ஸ்வாமி)
கோவில், திருவல்லிக்கேணி, சென்னை

10. ஸ்ரீ வீர மங்கள அனுமார், நல்லத்தூர், திருத்தணி

11. ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர், வேலூர் மாவட்டம்

12.  ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில், ஐயன்குளம், காஞ்சீபுரம்

13. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்

14. ஸ்ரீ ஜய ஆஞ்சநேயர் கோவில், லாலாபேட்டை, கரூர்

15. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கல்லுக்குழி, திருச்சி
 
16. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கடலூர்

17.  ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்புத்தூர்

18. ஸ்ரீ ஆஞ்சநேயர், நாலுகால் மண்டபம், தஞ்சாவூர்

19. பங்க் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், தஞ்சாவூர்
20. தாஸ ஸ்ரீ ஆஞ்சநேயர், புது அக்ரஹாரம், திருவையாறு

21. ஸ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோவில், தஞ்சாவூர்

22. சஞ்சீவராயன் எனும் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை

23. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு

24. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், பஜார் தெரு, கும்பகோணம்

25. ஸ்ரீ கோபிநாத ஸ்வாமி கோவில், இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், கும்பகோணம்

26. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், வடக்குக்கரை, பொற்றாமரைக் குளம், கும்பகோணம்,

27. விஸ்வரூப ஸ்ரீ ஹனுமார் சுசீந்திரம், கன்யாகுமரி

28. சேது பந்தன் ஸ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் கோவில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்

29. ஸ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர், வேலூர் மாவட்டம்

30. ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில், ஆவூர், [திருச்சி அருகில்]
புதுக்கோட்டை மாவட்டம்

31. ஸ்ரீ அபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி

32. ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி கோவில், சிம்மக்கல், மதுரை

33. ஸ்ரீ ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச  கோவில், சிம்மக்கல், மதுரை

34. ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், எம்.கோ.என். சாலை, மாங்குளம், கிண்டி சென்னை

35. ஸ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், டி.பி.பாளையம், குடியாத்தம்,, வேலூர்

36. ஸப்தஸ்வர ஸ்ரீ ஆஞ்சநேயர், வானமுட்டி பெருமாள் கோவில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை

37.  ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில் ஃ மண்ணச்சநல்லூர், திருச்சி

38. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், ஆரணி

39. ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோவில்,  கல்லணை

40.  ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், தாதா முத்தியப்பன் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை

41. ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோவில், காக்களூர், திருவள்ளூர் {வியாசராஜா பிரதிஷ்டை செய்தது}

42.  ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில், சிங்கிரி, வேலூர் மாவட்டம்

43. ஸ்ரீ ஹனுமார் கோதண்டராமர் கோவில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா

44. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்

45. ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஹனுமான், வேலூர்

46. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை

47. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், சத்தியவிஜய நகரம், ஆரணி

48.  ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்

49. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், பெரிய நாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்

50. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பூவனூர், நீடாமங்கலம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்

51. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி கோவில், பெர்க் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை

52. ஸ்ரீ ரங்கநாதர் கோவில் ஆஞ்சநேயர், காரமடை, கோயம்புத்தூர்

53. ராணி மங்கம்மாள் கட்டிய ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், அவுனியாபுரம், மதுரை

54. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் , நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்

55. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், உசிலம்பட்டி சாலை, திருமங்கலம், மதுரை

56. ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சந்தப்பேட்டை, குடியாத்தம் வேலூர் மாவட்டம்

57. ஸ்ரீ பாவபோத ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ரங்கம் , தமிழ்நாடு

58. ஸ்ரீ முக்யப்ராண கோவில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை

59. ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், நொய்யல் நதிக்கரை, பேரூர், கோயம்புத்தூர்
 
60. ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை

61. ஸ்ரீ ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை

62.  வீர சுதர்ஸன ஆஞ்சநேயர் கோவில், ஆதனூர், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்

63. வீர பெருமாள் கோவில் ஆஞ்சநேயர், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

64. ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், பைராகி மடம், தெற்கு சித்திரை வீதி, மதுரை

65. எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், ஸ்ரீ ரங்கம்
( வியாசராஜ பிரதிஷ்டை செய்தது)

66. ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர், ஜகத்ரக்ஷக பெருமாள் கோவில், திருக்கூடலூர்

67. ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி, தல்லாகுளம் பெருமாள் கோவில், மதுரை

68. ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர், திருக்கோடிகாவல், தஞ்சாவூர் மாவட்டம்

69. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை

70.  ஸ்ரீ ஹனுமார் கோவில், நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர் (ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது)

71. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ரங்கவிலாஸ் மண்டபம், ஸ்ரீ ரங்கம்

72. ஸ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் கோவில், தர்மராஜா கோவில் வீதி, திருப்பத்தூர்
         
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். க்ஷ

Saturday, December 28, 2024

பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்கள் அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.....

பைரவருக்கும் எட்டுபடை வீடுகள்...!
பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்ப தால் இவை இந்தப் பெயர் பெற்றன.

1.திருக்கண்டியூர்
இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம் பிரமசிரகண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால், மறுபிறவியில்லை;
திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. 

இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது. 

ஞாயிறு, செவ்வாய்க்
கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு. இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய், புங்கெண்ணெய், நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.

2.திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.
ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.
இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார். இத்தலத்தில் அபிஷேகம் செய்தால், நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!!

ஸ்ரீராஜராஜசோழன் ஸ்ரீ கருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.

3.திருவதிகை:
பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.

இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர். ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார். 

திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி, தாரகாசுரன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது. வெள்ளி, புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.

தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.
உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே!

4.திருப்பறியலூர்:
மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.

இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.

இங்கு வந்து வழிபட்டால், தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!

5.திருவிற்குடி:
திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.

மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்துஅருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.

எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.
பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும் வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோ ருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;

இதைச் செய்ய இயலாத அளவுக்குபொருளாதாரத்
தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.

6.வழுவூர்:
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும், வலப்புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.
அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.
இவருக்கு அருகிலே யே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;

அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்றவேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள், தொல்லை கள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.

7.திருக்குறுக்கை:
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும். 

அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும். இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும். காமனை எரித்த இடம் இதுவே!!!

தியானம் செய்பவர்கள், இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி, வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று 8 முறை வழிபட்டு, அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்..

8.திருக்கடவூர்:
திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர், அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர். 

எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!
இதய நோயில் வருந்துவோர்கள், ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு 8 சனிக் கிழமைகளுக்குச் செய்து வந்தால், மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...