Monday, June 24, 2024

சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் மண் தலம் ஆகும்....

வாழ்வில்  பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம்.


சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும் தினங்களான மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தினங்களில் அதிகாலைச் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரான சங்கரலிங்க சுவாமி மீது படும் வண்ணம் கட்டப்பட்ட கோயில் கட்டடக் கலையின் அற்புதங்களுள் ஒன்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.*
சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில்    மண் தலம் என்று அழைக்கிறார்கள். 

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில். 
சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது.

கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.

பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிருந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும்.

சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும்.

வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ ஜொலிக்கும் தங்க ரதத்தில் அம்பிகை கோமதி  உலா வருகிறாள். 

திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சாத்தப்படுகிறது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை கோலாகலமாக நடைபெறுகிறது.  

தினந்தோறும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை சொல்லப்படுகிறது. மற்ற திருக்கோவிலில் வடக்கு நோக்கி காட்சியருளும் துர்க்கை அம்மன் இங்கே தெற்கு திசை நோக்கி காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு ஆடி மாதம் பெளர்ணமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய நாளில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாய் நடைபெறும்.

பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். 

சங்கரன் கோவில் தலத்தில் வழிபட்டால் ஒற்றுமை குணம் உண்டாகும். நானே பெரியவன் என்ற மமதை எண்ணம் நீங்கும்.

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சங்கர நாராயணர்கோவிலில்  வேண்டிக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

திண்டுக்கல் சித்தர்மலை திருத்தலம்..

சித்தர்கள் அரூபமாக வாழும் சித்தர்மலை திருத்தலம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் எஸ்.மேட்டுப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் இயற்கை எழிலுடன் அமைந்த இந்த கிராமத்தில்தான், சித்தர் மலை இருக்கிறது. சதுரகிரியைப் போல, இந்த மலையிலும் முன்காலத்தில் சித்தர்கள் பலர் தவம் செய்து வந்ததாகவும், தற்போதும் அரூபமாக அவர்கள் இங்கு உலவுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த கிராமம் முன் காலத்தில் ‘சித்தர்கள் நத்தம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது, இங்கு கிடைத்த கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது.

2,100 அடி உயரத்தில், அடர்ந்த வனமும், அதிக பாறைகளும் கொண்ட கரடு முரடான மலையாக சித்தர் மலை காணப்படுகிறது. 
இந்த மலை மீது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘சித்தர் மகாலிங்கம்’ என்பதாகும். இந்தக்கோவிலானது, மலையின் வடக்குபுறத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவலிங்கங்களில், இந்த சித்தர்மலை சிவாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்த மலைக் கோவிலுக்கு, ஆடி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறிச் சென்று, சித்தர் மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். 
சித்தர் மகாலிங்கம் கோவிலின் எதிர் திசையில், ஒரு பாறையில் லிங்க வடிவ ஓவியம் பாறையிலேயே வரையப்பட்டு இருக்கிறது. மேலும் மூலிகைத் தன்மை கொண்ட வற்றாத சுனை ஒன்றும் இந்த மலைக் கோவில் அருகே இருக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த சுனைக்கு மேலே உள்ள கற்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆலயம், இத்திருமலையை சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வழிபடும் திருக்கோவிலாக விளங்குகின்றது. இந்தப் பழமையான திருத்தலம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், மூலவரின் ஆவுடை வலதுபுறம் அமைந்து அருள்பாலிப்பதும், சித்தர்கள் அரூபமாக வழிபடுவதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.

அமைவிடம்

திண்டுக்கல் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிலக்கோட்டை. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் எஸ்.மேட்டுப்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Sunday, June 23, 2024

கர்நாடகா தோல் நோய்களை குணப்படுத்தும் சிசிலேஸ்வரர்....

_*தோல் நோய்களை குணப்படுத்தும் சிசிலேஸ்வரர்*_
கர்நாடகாவின் தட்சண கன்னட பகுதியில், பெல்தன்குடி தாலுக்காவில், சிசிலா என்ற கிராமத்தில், 800 ஆண்டு பழமையான கோயில் உள்ளது! இந்த கோயில் ஈசன், ஒரு சமயம் குமரகிரி மலையில் இருந்தார். இந்த பகுதியில் தவம் செய்து, வந்த ஒருசன்யாசி; தினமும் இங்குள்ள கபிலா நதியிலிருந்து, ஒரு குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மலை ஏறி, அங்கிருந்த ஈசன் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, அங்கு கிடைக்கும் பூக்களை பறித்து பூஜை செய்து திரும்புவார். ஒரு நாள், அப்படி தண்ணீர் எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, கல் தடுக்கி குடத்துடன் கீழே விழுந்தார்! காயம் ஏற்பட்டது. அப்போது சன்யாசி, ‘‘ஈசனே… என்னால் தினமும் நீர் எடுத்து பூஜிப்பது கஷ்டமாக உள்ளது. நீயே… கொஞ்சம் கருணை காட்டி இங்கேயே நிரந்தரமாய் இருந்து விடக் கூடாதா?! என வேதனையுடன் வேண்டினார்.அந்த வேண்டுதல், ஈசன் காதில் கேட்டது. ஈசன், நேரில் வந்து சன்யாசிக்கு காட்சி தந்தார். ஆசிரியும் வழங்கினார். அப்போது சன்னியாசி, ‘‘தாங்கள் இங்கேயே நிரந்தரமாய் தங்கி, எனக்கும், கிராமத்திற்கும் உதவ வேண்டும் என்றார்! ஈசனும் அப்படியே ஆகட்டும் எனக் கூறி, தன்னை, லிங்கமாக்கினார். உடனே அங்கு அந்த சிவலிங்கத்தை சன்னியாசி பிரதிர்ஷ்டை செய்து வழிபடலாயினார். காலத்தால் அங்கு கோயில் எழுந்தது.இந்த கோயில் மக்களிடம் பிரபலம் அடைய என்ன காரணம்?அருகில் ஓடும் கபிலர் ஆற்றில், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நதி புனிதமாக கருதப் படுகிறது. அங்கு மகாசிர் என்ற மீன்களை அதிக எண்ணிகையில் காணலாம். அவை புனிதமானவையாக கருதப்படுகின்றன. மீன்பிடிக்கவோ, கொல்லவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது! இந்த புனிதமானன மீனுக்கு அரிசி, பொரி, அவல் போட்டால், தோல் வியாதி உள்ளவர்களுக்கு அது குணமாகும் என நம்பிக்கையுள்ளது. இங்கு மகாசீரை தவிர்த்து, 40வகையான மீன்கள் உள்ளன. இந்த ஆற்றில் இரண்டு பாறைகள் உள்ளன. அவற்றை ஹூலுகலு (புலி) மற்றும் தனகல்லு (பசு) என அழைக்கின்றனர். அசப்பில் அந்த பாறைகளும் அப்படிப்ப இருக்கும். அதன் கதை;ஒரு பசுவை, புலியொன்று துரத்திவந்தது. இரண்டுமே நதிக்கரையை அடைந்தன. நடந்ததை லிங்கமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த சிவனுக்கு, தனக்கு எதிரே ஒரு கொலை நடப்பதை விரும்பவில்லை. உடனே அவை இரண்டையும் நதிக்குள் இறங்கி ஓட வைத்து, பாறைகளாக மாற்றிவிட்டார்! இந்த பாறைகள் இன்று வரை உள்ளன.வருடாந்தரமாக, 7 நாட்கள் திருவிழா நடக்கும் போது, இவையும் பூஜிக்கப்படுகின்றன (மே மாதம்). கபில ரிஷி தவம் செய்த இடம். இதனால் இந்த நதியே கபில்
நதியானது!

இனி கோயிலுக்கு போவோமா!கபிலா நதியை குறுக்காக கடந்துதான் கோயிலுக்கு செல்ல முடியும். தரைபாலம் ஒன்றும், தொங்கும் பாலம் ஒன்றும் உள்ளது! தொங்கு பாலத்தை மழைகாலத்தில் பயன்படுத்தலாம். நாம் தொங்கு பாலம் வழியாக சென்றோம். மறுகரையில் இறங்கி, சிறிது நடந்தால் கோயில் வந்துவிடும். கேரளாபாணி, மங்களுரு ஸ்டைல் கோயில்…! முன்கோபுரம் என எதுவும் கிடையாது. ஓடுவேயப்பட்ட கோயில்! கோயிலுக்குள் நுழைந்து கர்ப்ப கிரகம் நோக்கி பயணித்தால், துவஜஸ்தம்பம் முதலில் வரவேற்கிறது. அடுத்த கர்ப்ப கிரகத்துக்கு எதிரே சுவாமியை பார்த்தபடி ஒரு நந்தி உள்ளது. அதனையும் தரிசித்து தாண்டி உள்ளே தொடர்ந்து சென்றால், கர்னாடகாவில், லிங்கத்தை, முக கவசம் சார்த்திதான் கும்பிடுவர்.இங்கும் மீசையுடன் கூடிய சிவ உருவ கவசம், லிங்கத்தின் மீது மாட்டி, பூஜைகள் முடித்து ஜம்மென்று அலங்காரத்துடன் மாலைகளுடன் இருந்த சிவனை தரிசிக்கலாம்.தோல்வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இந்த சிவனுக்கு உண்டு என கூறப்படுவதால், கோயிலுக்கு கூட்டம் வருகிறது. சனிக்கிழமை, திங்கட்கிழமைகளில் நல்ல கூட்டம் வருகிறது. தோல்வியாதி உள்ளவர்கள், கபிலா நதியில் குளித்துவிட்டு, அந்த தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.சிலர் அபிஷேகம் ஆர்டர் செய்து, நைவேதியமாக தரப்படும் அவல், பொரியை வாங்கி, கபிலா நதியில் உள்ள மீன்களுக்கு போடுகின்றனர்! அவை விரும்பி மேலே வந்து அவற்றை சாப்பிடுகின்றன. இதன் அருகிலேயே கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதனை “ஸ்ரீசிலாபாறை’’ என அழைக்கின்றனர். கோயிலுக்குள் கூடுதலாக மகாகணபதி மற்றும் துர்கா பரமேஸ்வரி அருள்கிறார்கள். கோயிலுக்கு முன் வழி, பின் வழி, என இரு வழியாக நுழையலாம். இங்கு சிவராத்திரி, நவராத்திரி, விநாயகசதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிராவன் மாத (ஆவணி) திங்கட்கிழமைகள் சிவனுக்கு உகந்தவை.கோயில்: காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

காரைக்கால் மாங்கனி திருவிழா ஏன்❓

பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா!*
களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்பைக் கொண்டவர் காரைக்கால் அம்மையார். சிவபெருமானின் திருவாயால், ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை போற்றும்விதமாக, காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.

முன்பொரு காலத்தில் சோழ மண்டலத்தின் காரைக்காலில் தனதத்தன் என்பவருக்கு புனிதவதி என்று ஒரு மகள் பிறந்தாள். செல்வ செழிப்போடு வளர்ந்த அம்மகள் சிறு வயதிலிருந்தே சிவபெருமானின் பக்தையாக வளர்ந்தாள். 

அதனால் அவள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்கள் ரூபத்தில் ஈசனை கண்டு மகிழ்ந்தாள். உரிய வயதில் புனிதவதியை நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தன் என்ற வியாபாரிக்கு மணமுடித்து வைத்தனர் பெற்றோர். எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்து இவர்களும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், வியாபார ரீதியாக வந்த ஒருவர் பரமதத்ததினிடம் இரு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். அந்த மாங்கனிகளை வீட்டில் உள்ள தனது மனைவியிடம் கொடுத்துவிடுமாறு வேலையாளிடம் சொல்லிவிட்டு இவர் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தினர். புனிதவதி சுவையாக அன்னம் சமைத்து தயார் செய்து தனது கணவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் சிவபெருமான், தனது பக்தையின் புகழை உலகம் அறியும் பொருட்டு ஒரு சிவனடியார் போன்று வேடம் பூண்டு புனிதவதியின் வீட்டுற்குச் சென்றார். சிவனடியாரை சந்தித்த சந்தோஷத்தில் அவரை கும்பிட்டு தம்மிடமிருந்த மாங்கனிகளில் ஒன்றை வைத்து அவருக்கு அமுது படைத்தார். வந்த சிவனடியார் வயிறார சாப்பிட்டு விட்டு, புனிதவதியை வாழ்த்திச் சென்றார்.

உணவருந்த வந்த பரமதத்தன் ஒரு மாங்கனியை சுவைத்து விட்டு, ‘இது என்ன அமுதம் போன்று இனிக்கிறதே’ அந்த இன்னொரு பழத்தையும் எடுத்து வா’ என்று கூறினார். பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானிடம், ‘நான் இப்போது என்ன செய்வேன்? இறைவா, என் கணவர் என்னிடம் இன்னொரு பழம் கேட்கிறாரே. அதை நான் சிவனடியாருக்கு அமுது படைத்து விட்டேனே. என்ன செய்வேன்?’ என்று அழுது முறையிட, உடனே புனிதவதி கையில் ஒரு மாங்கனி வந்தது. ஆனந்தத்தில் புனிதவதி அந்தக் கனியை தனது கணவருக்கு பரிமாறினாள்.

அதை சாப்பிட்ட பரமதத்தன், ‘இது என்ன தேவாமிருதம் போலிருக்கிறது. ஒரு மரத்து கனிகளின் சுவை எப்படி வேறுபடும்’ என்று கேட்டார். ‘அவை ஒரு மரத்துக் கனிகள் அல்ல. இரண்டாவது கனி எனக்கு சிவபெருமான் கொடுத்தது’ என்றாள் புனிதவதி. ‘என்ன கடவுளிடம் பேசுகிறாயா? அப்படியானால் நீ கடவுளுக்கு சமம். நீ உயர்ந்தவள். உன்னுடன் என்னால் வாழ முடியாது’ என்று வீட்டை விட்டு வெளியேறினான் கணவன் பரமதத்தன். தனது கணவருக்காக பல காலம் காத்திருந்து, சிவபெருமானைக் காண பேயுருவம் கொண்டு கயிலாயத்திற்கு கையால் நடந்து சென்றார் அந்த அம்மையார். புனிதவதியாரைக் கண்ட சிவபெருமான், ‘அம்மையே’ என்று அன்புடன் அழைத்து, ‘இனி உன் புகழ் இவ்வுலகம் எங்கும் பரவும் அம்மையே. அதற்காகத்தான் நீ இவ்வளவு துயரம் அடைந்திருக்கிறாய்’ என்று கூறி, தம் திருப்பாதத்தில் அமர்த்திக் கொண்டார். அன்று முதல் இன்று வரை இந்த மாங்கனி திருவிழா காரைக்கால் திருத்தலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனி பௌர்ணமி அன்று காலை சுமார் பத்து மணி அளவில் துவங்கும் இந்தத் திருவிழாவில், அடியார் கோலத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்து புனிதவதியாரின் திருமாளிகைக்கு  பிட்ஷைக்காக எழுந்தருளுவார் இறைவன். வேத கோஷங்களுடன் பிட்சாடனராக உலா வரும் இறைவனுக்கு மாங்கனி படைக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இறைவன் பிட்ஷைக்கு வரும்போது தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பதிலுக்கு மாங்கனி மட்டுமே சமர்ப்பிக்கப்படும்.

வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் தங்கள் வீட்டுக் கூரையின் மீதிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை கொட்டுவார்கள். இந்தக் கனிகளை உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த மாங்கனியை பெற மக்கள் அலைமோதுவார்கள். ஊர்வலம் முடிந்து அம்மையார் இல்லம் வந்து சேரும் சிவனடியாரை வரவேற்று அமுது படைக்கும்  வைபவம் நிகழும். தயிர் சாதம் மாங்கனி இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் அடங்கிய மகா நைவேத்தியம் படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து பரமதத்தர் உணவருந்த வருதலும், புனிதவதியார் மாங்கனி வரவழைக்கும் அற்புதமும், இதைக்கண்டு பயந்து பரமதத்தர் பாண்டிய நாட்டுக்கு செல்லும் வைபவமும் நிகழும். பௌர்ணமி அன்று இரவு பரமதத்தருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும். தொடர்ந்து புனிதவதி அம்மையார்  எழுந்தருள்வார். மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் புனிதவதியார் பேயுரு  ஏற்று அற்புத திருவந்தாதி மற்றும் இரட்டை மணிமாலை பாடியபடி கயிலாயத்திற்கு எழுந்தருள, அம்மையின் நாமம் காரைக்கால் அம்மையார் என்றாகிறது.                 அன்று மாலை 5 மணிக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முன்பு பஞ்ச மூர்த்திகளும் அம்மையாருக்கு கயிலை திருக்காட்சி அருளுகின்றார். பிறகு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருவார்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

அடிமுடிசித்தர் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை அடிமுடிசித்தர்
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை, எண்ணற்ற சித்தர்கள் மற்றும் மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். இங்கு இன்றும் தன் தவ வலிமையினால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் ஊழ்வினைகளை நீக்கி நல்லதொரு வாழ்வளிக்கும் அடிஅண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ அடிமுடி சித்தர் பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது.
சித்தர்களைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்களை பற்றியும் பல ஆன்றோர் பெருமக்கள்  பல்வேறு விதமாக கூறுகின்றனர். இக்கலியுகத்தில் மனித குலத்தை கர்மவினை பிடியில் இருந்து மீட்டு அவர்களின் வாழ்வை நல்முறைபடுத்தும் சித்தர்கள் சிலரே. அவர்களில் முக்கியமானவர் அடிஅண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த அடிமுடி சித்தர்.

     சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அடர்ந்த மூலிகை வனங்கள் சூழ்ந்த இயற்கை எழில் நகராக திகழ்ந்தது. அக்காலத்தில் கிரிவலப்பாதை கற்கள் நிறைந்த கரடுமுரடான, குறுகலான பாதையாகவும், வெளிச்சமற்றும் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்ல மிகவும் கடினமாக இருந்தது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமது சீடர்களுடன் தவம் செய்து வந்தார். இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும் ஒருவர். இவர் எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு உதவுவதையே பணியாக கொண்டவர்.

     பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை செய்த காலம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார். இதனை கண்ட அருகில் உள்ள குடில்களில் இருந்த சிவனடியார்களும், சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீக பணியை செய்துவந்தனர்.   ஆனால், தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்த இடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து அளிப்பார், கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும். இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.
     திருவண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின் நோய்களை குணமாக்கினார். தான் ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தன சீடர்களை அழைத்து "நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால் பெருவிரல் இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள் எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கே என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.

     பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்து செல்லும்போது அடிஅண்ணாமலை கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர். சிலநாட்களுக்கு பின்பு சித்தரின் ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.

      இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில் ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டது. அவ்விடத்தை நோக்கி சென்றபோது அங்கே மிகப்பெரிய பாம்பு புற்று ஒன்று இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர் அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார். சில நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதுநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று அன்று சிறிது சிறிதாக கரைந்து கொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது.  

     அச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறிய கோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று தங்களின் கர்மவினைப் பயனை போக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணிலடங்காது. இன்னும் இங்குவரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.

ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும். அவர்களை பூரணமாய் வணங்கி  பழங்கள், அச்சு வெல்லம், அவள், தாம்பூலம், வாசனை உடைய மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்பு.

பொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் குருவருள் கிட்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Saturday, June 22, 2024

கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன.

இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் இருப்பதால் இந்நகரம் கோவில்நகர் என்றும் போற்றப்படுகின்றது.

அவற்றில் முதன்மையானது கும்பேஸ்வரர் ஆலயம். ஈசன் தன் கரத்தினால் சிருஷ்டித்த தலம் என்பதால் சிறப்பைப் பெற்றது.
முதல்வர், வானவர், மன்னவர் என அனைவரும் அவரை பூஜித்திருப்பதால் இத்தலம் மூர்த்தி சிறப்புடையது.

தேவர்கள், திருமால், பிரம்மா, இந்திரன், தேவ மாதர்கள் என அனைவரும் தீர்த்தமாடிய திருக்குளமாக மகாமகக் குளம் அமைந்து இருப்பதால் இத்தலம் தீர்த்த சிறப்பையும் பெற்று மேன்மை பொருந்திய தலமாக விளங்குகிறது.

பிரளயத்தின் போது அதில் மிதந்து வந்த அமுதக் கலசமான குடத்தை இறைவன் அம்பை செய்து அதன் மூக்கை உடைத்தமையால் குடமூக்கு என்னும் பெயர் இத்தலத்திற்கு உரியதாயிற்று.

சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் வைணவ ஆழ்வாரான பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடமூக்கு என்றும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தலத்தை மலை தனி வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே! என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.

குடமூக்கு என்னும் பெயர் இடைக்காலத்தில் தான் கும்பகோணம் என மாறியுள்ளது என்பது அருணகிரியாரின் பாடல் வாயிலாக உணர முடிகிறது.

குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.

கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதிகும்பேஸ்வரர் ஆவார்.

இவர் உலகத்திற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியமையால் ஆதிகும்பேஸ்வரர் என்றும் நிறைந்த சுவை கொண்ட அமுதத்தில் இருந்து உதித்தமையால் அமுதேஸர் என்றும் அழைப்படுகின்றார்.

இறைவன் வேடுவர் உருக்கொண்டு அமுத கும்பத்தை தம் அம்பினால் எய்தியமையால் கிராதமூர்த்தி என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

மகா பிரளயத்திற்குப் பின் படைப்புத் தொழிலினை பிரம்மா தொடங்குவதற்கு இறைவன் இத்தலத்தில் எழுந்தருளிய லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இதனால் இத்தலம் உயிர்ப் படைப்பின் தொடக்க இடமாததால் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தை அடைதல் அவர்களின் பிறவிக் கடமையாகும்.

எந்த ஒன்றிற்குமே மூலம் தான் சிறப்புடையது.

உயிர்களின் தோற்ற மூலமான இத்தலம் பிற தலங்களுக்கு எல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது.

அதுமட்டுமல்லாது புராணப்படி மகாபிரளயத்திற்குப் பின் நிலவுலகில் தோன்றிய முதல் தலமும் இதுவேயாகும்.

இத்தலத்து அம்பிகை மங்கள நாயகி ஆவாள். இவள் மந்திர பீடேஸ்வரி, மந்திர பீடநலத்தாள், வளர்மங்கை என்றும் போற்றப்படுகின்றாள்.

தம்மை அன்புடன் தொழுவார்க்குத் மங்களம் அருளும் தன்மையால் “மங்களநாயகி” என்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் மந்திரபீடத்தில் அன்னை விளங்குவதால் மந்திரபீடேஸ்வவி என்றும் தம் திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் அருளுவதால் “மந்திரபீட நலத்தாள்” என்றும் போற்றப்படுகின்றாள்.

தம் தேவாரப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் பெருமான், “வளர்மங்கை” என்று அன்னையைப் போற்றுகின்றார்.

திருச்செங்கோடு தலத்தில் இறைவன் தம் இடபாகத்தை அம்பிகைக்கு அருளியமைபோன்று இத்தலத்தில் இறைவன் தம் 36000 கோடி மந்திர சக்திகளையும் அன்னைக்கு வழங்கினார்.

இதனால் அன்னை இத்தலத்தில் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

அம்மனின் உடற்பாகம் பாதநகம், முதற்கொண்டு, உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சி அளிக்கின்றன.

இவற்றுள் பிற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே சக்தி வடிவினை மட்டும் கொண்டதாகும்.

இத்தலத்து அன்னை ஐம்பத்தோரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாக உள்ளடக்கியவளாய், சக்தி பீடங்கள் அனைத்திற்கும் பிரதானமானவளாய் விளங்குகிறாள்.

இத்திருக்கோவிலில் காலையில் முதலில் சூரிய பகவானுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

இத்திருக்கோவிலில் உள்ள 16 தூண் மண்டபம் மிக்க கலையழகுகளுடன் திகழ்கிறது.... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Friday, June 21, 2024

குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்...!!



சப்தகன்னிகளின்_சாபம் நீக்கிய தலம்...!!
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

🌺 கடம்பவனேஸ்வரர் கோயில் என்பது குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. 

மாவட்டம் : 

🌺 அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கரூர் மாவட்டம்.

எப்படி_செல்வது? 

🌺 அனைத்து முக்கிய நகரங்களிருந்தும் குளித்தலைக்கு பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோவிலுக்கு பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே சென்று விடலாம்.

கோயில்_சிறப்பு :

🌺 இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும். கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.

🌺 கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான்.

🌺 இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. 

🌺 அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர்.

🌺 இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.

🌺 சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி துர்க்கையாவார். அதனால் இராகு காலத்தில் துர்க்கைக்குரிய வழிபாட்டை மூலவர் சன்னிதியிலேயே செய்கின்றனர். மேலும் இச்சிவாலயத்தில் துர்க்கையம்மன் சன்னதி தனியாக இல்லை.

🌺 சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.

கோயில் திருவிழா : 

🌺 மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

வேண்டுதல் : 

🌺 பெண்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவபெருமான் துணையாக இருந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...