Wednesday, October 22, 2025

சர்க்கார் பெரியபாளைம் சுக்ரீஸ்வரர் கோவில்.

சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-
1. பொய் ஆகவே ஆகாது!
2. கோவில் மேல் கோவில் , பூமிக்கு அடியில் கோவில் கொண்ட ஆலயம்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்க கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:-

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!

மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

😎 வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, October 21, 2025

மெய்கண்டார் வரலாறு

#மெய்கண்டார் வரலாறு
சிவமயம்தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ளதான திருமுனைப்பாடி என்னும்  நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடம் என்னும் திருப்பதியிலே, வேளாளர் குலத்திலே, சிவபெருமானிடத்தும்  சிவனடியாரிடத்தும் அன்புமிக்குடையவராய், அச்சுத- களப்பாளர் என்னும் திருப்பெயருடையவராய்  ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கல்விச் செல்வத்தினாலும் பொருட்செல்வத்தினாலும் சிறந்து விளங்கியும்,  மகப்பேறு இல்லாத குறையுடையவராய் இருந்தார். அவர் ஒருநாள் திருத்துறையூருக்குப் போய் தம்  குலகுருவாகிய சகல ஆகமப் பண்டிதர் என்னும் சிறப்புப் பெயர் உடைய அருள் நந்தி சிவாசாரியாரிடம்  சென்று தமக்கு மகப்பேறு இல்லாத குறையைத் தெரிவித்தார்.

அது கேட்ட அருள் நந்தி சிவாசாரியார், தம் வழிபடு கடவுளை வழிபாடு செய்து அதன்  முடிவில் தேவாரத் திருமுறையை மலரிட்டு வணங்கி அதனிடத்தில் திருக்கயிறு சாத்தும்படி  அச்சுத-களப்பாளருக்குச் சொல்லி அருளினார். அவ்வாறே அச்சுத-களப்பாளர் தேவார திருமுறையின்  முன்னே எட்டு உறுப்புக்களும் நிலத்திலே தோயும்படி வணங்கி சிவபெருமானைத் துதித்து  திருமுறைக்கண் கயிறு சாத்தினபொழுது திருஞான சம்பந்த அடிகள் பாடியருளிய திருவெண்காட்டுப்  பதிகத்தில் இரண்டாவது பாட்டாகிய  

 "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள     நினைவாயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்    வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்     தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே"

என்னும் செய்யுள் காணப்பட்டது. பின்னர் சகலாகமப் பண்டிதர் பேருவகையுடன் அச்சுத காப்பாளருக்கு  அச்செய்யுளின் பொருளைக் கூறி திருவெண்காட்டுத் திருப்பதியின் மேன்மையையும், அப்பதியில் உள்ள  திருக்குளத்தில் முழுகி இறைவனை வழிபடும் முறைமையையும் அறிவுறுத்தி, திருவெண்காட்டுக்குப்  போகும்படி ஆணை செய்தார். அச்சுத-களப்பாளர் குருவின் ஆணையைத் தலைமேற்கொண்டு மனைவியாருடன் திருவெண்காட்டிற்குச்  சென்று நாள்தோறும் சோமகுளம், சூரியகுளம், அக்கினிக்குளம் என்ற மூன்று குளங்களிலும் நீராடி  சிவபெருமானையும் இறைவியையும் சிலகாலம் மெய்யன்புடன் வழிபட்டு வந்தார். ஒரு நாள் இரவில், அச்சுத களப்பாளர் தூங்கும்போது இறைவன் அவர் கனவில் வந்து தோன்றி  'அன்பனே! உனக்கு இப்பிறவியிலே மக்கட்பேறு அரிதாயினும் எமக்கு மிகவும் விருப்பம்  உடையதாயும் மெய்யன்போடு தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பேறுகளையும் தருவதாயும் உள்ள  தேவார திருப்பதிகத்தையே உண்மையாக நம்பி வந்து வழிபாடு செய்கின்றாய். ஆதலின்,  அத்தேவாரங்களைப் பாடிய ஞானசம்பந்தன் போலவே அத்தேவாரத் திருப்பதிகங்களின்  மெய்ப்பொருளை விளக்கி, மெய்ந்நெறியாகிய சைவ சமயத்தையும் விளக்கி நிறுவ வல்ல  நற்புதல்வன் ஒருவனை நாம் உனக்குத் தந்தோம்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே, அச்சுத களப்பாளர் விழித்தெழுந்து பெருமகிழ்வுற்று திருவெண்காட்டு இறைவர் தமக்குத் திருவருள் புரிந்ததை நினைத்து, அவரை வணங்கித் துதித்து, நிகழ்ந்த செய்தியைத் தம்  மனைவியாருக்குத் தெரிவித்து, அவரோடு தாமும் திருக்கோவில் சென்று இறைவனையும்  இறைவியையும் மிக்க பேரன்போடு வழிபட்டு தமது இல்லத்திற்குத் திரும்பினார். இங்ஙனம், அவர்  நாள்தோறும் தம் மனைவியாரோடு திருக்கோவில் சென்று நீராடி வழிபாடு செய்து வந்தார். சிலகாலம் சென்றபின் அவர் மனைவியார் திருவயிற்றில் சிவபிரான் திருவருளினால் கரு தோன்ற பெரும்பேறு உளதாயிற்று. அஃதறிந்த அச்சுத-களப்பாளர் சிவபிரான் தமக்கு அருள்செய்த திருவருளைப் புகழ்ந்து, துதித்து பத்துத் திங்களிலும் செய்ய வேண்டிய சடங்குகளை சிவாகம நெறிப்படி செய்து வந்தார். தென்னாடு செய்த தவவலியால் சைவ சமயம் சிறந்து விளங்குமாறு நற்கோள்கள் அமைந்த நல்ல  வேளையிலே அவருக்கு நற்புதல்வர் ஒருவர் தோன்றி அருளினார். அச்சுத களப்பாளர் பெருமகிழ்வுற்று குழந்தைக்கு சிவாகம நெறிமுறைப்படி செய்ய வேண்டிய பிறப்புக்குறிப்பு எழுதுதல் முதலிய சடங்குகளைச் செய்து அப்புதல்வருக்குத்  திருவெண்காடர் என்னும் திருப்பெயர் இட்டருளினார். பின்பு, அவர் தம் மனைவியாரோடு  அருமைக் குழந்தையோடும் திருவெண்காட்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டு  விடைபெற்றுக் கொண்டு தமது உறைவிடமாகிய திருப்பெண்ணாகடத்தை அடைந்தனர். அச்செய்தி அறிந்த அவ்வூரில் உள்ளோர் அச்சுத-களப்பாளர் மனைக்கு வந்து, இறைவன்  திருவருளால் தோன்றி அருளிய குழந்தையைப் பார்த்து ஆசிர்வதித்து உவகையுடன் சென்றனர் . அத்திருப்புதல்வர் வளர்பிறைபோல வளர்ந்துவரும் நாளில் திருவெண்ணெய் நல்லூரில் இருந்த  அவர் நன்மாமனார் திருப்பெண்ணாகடம் வந்து குழந்தையைப் பார்த்து பெருமகிழ்வுற்று அவரைத்  தம் இல்லத்திற்குக் கொண்டுபோய் அன்போடு வளர்ப்பாராயினர்.

அவர் இங்ஙனம் வளர்ந்து இரண்டாண்டு நிறைவுற்றபோது முற்பிறவியிலேயே சரியை,  கிரியை, யோகம், ஞானம் முடிக்கப்பெற்ற சாமு சித்தராதலின், சிவபிரானை உள்ளவாறு உணரும்  மெய்யுணர்வு கைவரப்பெற்றவராய் விளங்கியருளினார். அப்பொழுது சிவபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கயிலையில் காவல்பூண்ட திருநந்தி தேவர் மரபில் சனற்குமாரர் மாமுனிவருடைய மெய்யறிவுப் புதல்வராகிய சத்திய ஞான தெரிசனிகளிடம் அருள்விளக்கம் பெற்ற  பரஞ்சோதி மாமுனிவர் என்பார் பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவரைக்  காணும் பொருட்டு பொதிகை நோக்கி வெளி வழியே (ஆகாய மார்க்கம்) செல்லும்பொழுது  திருவெண்ணெய் நல்லூரில் அருள் ஒளிப் பிழம்பாய் விளங்கிய மெய்கண்ட தேவரைப் பார்த்து  நிலத்திறங்கி, அவருக்கு சிவஞானத்தைக் கொடுத்தருளி, 'இதனை தமிழுலகம் உணர்ந்து உய்யும்  பொருட்டு ஏது திருட்டாந்தங்களினால் விளங்க உரைக்க' என்று திருவாய் மலர்ந்தருளி தம் குருவாகிய சத்திய ஞான தெரிசனிகள்பால் தாம் கேட்டவாறே அவருக்கு சைவ சித்தாந்த மெய்ப்பொருளை  உள்ளவாறு உணர்த்தி 'மெய்கண்டார்' என்ற திருப்பெயரையும் சூட்டி அவரைவிட்டு நீங்கி மீண்டும் வெளி வழியேறிச் சென்றார். பின்பு, மெய்கண்ட தேவர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள பொள்ளாப் பிள்ளையார்  திருக்கோவில் சென்று அங்கு திருமுன்பு நிட்டைகூடி, சிவஞானப் பொருளை தமது உள்ளத்தில்  உள்ளவாறு நினைந்துணர்ந்து இத்தமிழுலகம் உய்யுமாறு சிவஞானத்தை ஏது திருட்டாந்தங்களினால் உரைத்தருளினார். மெய்யறிவு விளங்கப் பெற்ற ஞாயிறாய் விளங்கித் தம்மை அடைந்த தகுதி வாய்ந்த  மாணவர்கள் பலருக்கும் சிவஞானத்தை விளக்கி அறிவுறுத்திக் கொண்டு இருப்பாராயினர்.

அவர், இங்ஙனம் மாணவர்கட்கு சிவஞான நூற்பொருளை அறிவுறுத்திக் கொண்டு  இருந்ததை திருத்துறையூரில் இருந்த குலகுருவாகிய அருள்நந்தி சிவாசாரியார் கேள்வியுற்று, தம்  மாணவர் பலரோடும் திருவெண்ணெய் நல்லூருக்குப் புறப்பட்டு வந்தார். அவர் அங்கு வந்து  சேர்ந்தபொழுது அங்குள்ள சைவ நன்மக்கள் பலர் அவரை எதிர்கொண்டு வணங்கி முகமன்  கூறினார்கள். ஆனால் மெய்கண்ட தேவர் மட்டும் அவர்களுடன் வரவில்லை. அவர்  திருவெண்ணெய் நல்லூருக்குள் வந்த பின்னராவது அவரை வந்து பார்க்கவும் இல்லை.  அருள் நந்தி சிவாசாரியார் தம்மிடம் மெய்கண்ட தேவர் வராததை அறிந்து தாமே அவரைப் பார்த்துவர  அவர் இருக்கை சென்றார். அவ்வாறு சென்ற பொழுது, மெய்கண்ட தேவர் தம் மாணவர்களுக்கு  ஆணவ மல உண்மையைப்பற்றிக் கூறி விளக்கிக் கொண்டிருந்தாரேயன்றி, அருள்நந்தி சிவாசாரியாரைக் கண்டு ஒன்றும் பேசவில்லை. தாம் அவர் இருப்பிடம் சென்றும் தம்மிடம் மெய்கண்ட தேவர் ஒன்றும் பேசாததைக் கண்டு  உள்ளச் செருக்கோடு அருள்நந்தி 'ஆணவமலத்திற்கு தன் உண்மை நிலை என்ன?' என்று வினவினார்,  அவ்வினாவிற்கு விடையாக, மெய்கண்டதேவர் தம்முன் நின்று கொண்டிருந்த அருள்-நந்தி  சிவாசாரியாரையே தமது ஆள்காட்டி விரலால் சுட்டிக் காண்பித்தார். காட்டவும் சிவாசாரியார்  தமது அறியாமை நீங்கி மெய்யறிவு விளங்கப் பெற்று சமய தேவர் திருவடிகளில் விழுந்து  வணங்கி தமக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்த வேண்டும் என்று குறையிரந்தார். அவ்வாறு  குறையிரந்த அருள்நந்தி சிவாசாரியாரது முதிர்ந்த அறிவு நிலையைக் கண்ட மெய்கண்டதேவர்  அவருக்கு மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்த்தி தம் மாணவர் நாற்பத்தி ஒன்பது பேர்களுள்  முதன்மையான மாணவராய் இருக்கும் பெருமையையும் நல்கினார்.

அருள்-நந்தி சிவாசாரியார் தாம் தம் ஆசிரியர்பால் கேட்ட மெய்ப்பொருளை விரித்து  விளக்கி முதல்நூலாகிய சிவஞான சூத்திரத்திற்கு வழிநூலாக சிவஞான சித்தியார் என்ற நூலைச்  செய்தருளினார். இன்னும் அவர் இருபாவிருபஃது என்ற நூலையும் செய்தருளினார். மெய்கண்ட தேவர்  சிலகாலம் நிட்டை கூடியிருந்து ஐப்பசித் திங்களில் சுவாதி நாளில் எங்கும் நிறைந்துள்ள பெருஞ்சுடர்  பிழம்பாகிய சிவபெருமானொடு இரண்டறக் கலந்து பேராப்பேரின்ப வாழ்வு நிலையை அடைந்தார். ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் அருளிச் செய்த சிவஞான போதம், சைவ சித்தாந்தச்  செந்நெறியின் தலைமணி ஞான நூலாக விளங்கும் சிறப்புடையது.சுருங்கிய யாப்பில்  பன்னிரெண்டே நூற்பாக்களில், சைவ சித்தாந்தத்தின் கொள்கைகள் அனைத்தையும்  நுட்பமாகவும், திட்பமாகவும் விளக்கும் மேன்மையுடையது. இத்தகு அருள் நூல் என்றும்  நின்று நிலவுதல் வேண்டுமென்ற பெருங்கருணைத் திறத்தால், திருக்கயிலாய பரம்பரைத்  தருமை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த  பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், 'சிவஞான போதம்' பன்னிரெண்டு நூற்பாக்களையும்  அனைவருக்கும் பயன்படும் வண்ணம் கல்லில் வெட்டுவித்து, மெய்கண்டார் அவதரித்தருளிய  பெண்ணாகடம் களப்பாளர் மேட்டில் திகழும் ஸ்ரீமெய்கண்டார் திருக்கோயிலில் அமைத்து உள்ளார்கள்.

சிவஞான போதத்தில் உள்ள எட்டாம் சூத்திரத்தின் விளக்கமே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். உலகில் மிகச்சிறந்த உயரிய தத்துவம் “சைவ சித்தாந்தம்”  என்பது சான்றோர்கள் கண்ட முடிவு. இவ்வளவு உயர்ந்த சைவ சித்தாந்த தத்துவத்தை மிகச் சுருங்கிய  அளவிலான நாற்பதே வரிகளில் (216 வார்த்தைகளில்) மெய்கண்ட தேவநாயனார் அருளிச் செய்துள்ளார். அதை மக்கள் சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து கொள்ளுவார்களானால், பின்னால் அவர்கள்  தத்துவ அறிவு விளக்கத்தை விரும்பும் பொழுது, இது மிகவும் உறுதுணையாக அமையும்.   
         ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஸ்ரீகிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் கோவில்.



|| ஸ்ரீகிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் ||
அதிசயங்கள் நிறைந்த பூமி நம் பாரதம். 

இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. 

அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோவிலை பற்றி பார்க்கலாம்.

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். 

இந்த இடம் மகாபாரதத்தில், கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.

அதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் எனும் கோவில். இந்த கோவிலிலும், இந்த கோவிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாக காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். 

மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும். 

மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். 

மேலும் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும். 

ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.

இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது.

கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மயிலாடுதுறை காவேரி துலா கட்டம்!

 காவேரி துலா கட்டம்! 
ஒவ்வொரு வருஷமும், ஐப்பசி மாதம் பூராவும்  கங்கை முதலான சர்வ புண்ய  தீர்த்தங்களும் காவேரி நதியில் அருணோதயத்தில் இருந்து சூரிய உதயத்திற்கு பின் 6 நாழிகை வரை(மொத்தம் 8 நாழிகை, அதாவது 3 மணி  12 நிமிஷம்)  வாஸம் செய்வதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் காவேரியில் நீராடினால் சகல பாவங்களும் தீர்ந்து விடும் என்று புராணங்கள் சொல்கின்றன. அதிலும் மாயவரத்தில் உள்ள துலா கட்டம் மிகவும் விசேஷம்.

இந்த துலா கட்ட ஸ்நானத்தைப்பற்றி 'தெய்வத்தின் குரலில்'' ஒரு கதை படித்தேன்.அதை சுருக்கமாக உங்களிடம் பகிர ஆசை.

•  ஸ்ரீ ராமபிரான் ராவணனைக்  கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கொன்றதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தோஷம் வந்தது பற்றி பலருக்குத் தெரியாது. அப்போது அவருக்கு 'வீரஹத்தி'என்ற தோஷம் ஏற்பட்டது. மஹா வீரனான ஒருவரைக் கொன்றால்  ஏற்படும் தோஷம்தான் வீரஹத்தி. நரகாசுரன் துஷ்டன் ஆனாலும் உண்மையான வீரன் ஆனதால் பகவான் இந்த தோஷத்துக்கு தம்மை ஆளாக்கிக் கொண்டார்.

இதனால் அவருடைய தேக காந்தி மங்கிப்போயிற்று. கைலாசத்துக்கு போய் ஈஸ்வரனிடம் இந்த தோஷம் விலகுவதற்கு ஒரு ப்ராயச் சித்தம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

எல்லா ப்ராயச்சித்தங் களுக்கும் மேலான சர்வ ப்ராயச்சித்தம் கிருஷ்ண ஸ்மரணம் தான் என்று தெரிந்திருந்தாலும், சிவன் அவர் மக்களின் படிப்பினைக் காகவே இப்படி லீலை செய்கிறார் என்று புரிந்துகொண்டார்.

கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு ,'இது துலா மாதம். சர்வ புண்ணிய தீர்த்தங்களும் காவேரியில் அருணோதயம் முதல் சூரிய உதயத்திற்குப் பிறகு 6 நாழிகை வரை வாசம் செய்கின்றன. காவேரியில் அந்த சமயத்தில்.ஸ்நானம் செய்தால் தோஷம் போய்விடும். அதிலும் மாயூரத்தில் (தற்போது மாயவரம்) துலா கட்டத்தில் ஸ்னானம் செய்வது விசேஷம்' என்று கூறினார். கூறியதோடு அல்லாமல் அவரும் கூடவே வந்தார்.

யமுனா தீர விஹாரி தீபாவளி அன்று நமக்கெல்லாம் கங்கா ஸ்நானம் அருளிச்செய்து, தான் இங்கு வந்து காவேரி ஸ்நானம் செய்தார். அதனால் அவரைப் பற்றி இருந்த தோஷம் போய் ஜகஜோதியாக விளங்கினார்.

 இந்த ஆச்சர்யத்தைப் பார்த்த தேவர்கள் ஈஸ்வரன், பெருமாள் இருவரையும் ஒன்றாக தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்று தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த சந்தர்ப்பத்தில்தான் நரகாசுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலிய வரங்களை கேட்டதாக காவேரி புராணத்தில் இருக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தான்தோன்றிஸ்வரர் தஞ்சை பெரிய கோவில் அமைப்பு. நெடுங்காடு

காரைக்கால் அடுத்த நெடுங்காடு ஸ்ரீ நெடுந்துயார் தீர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் திருக்கோயில் ..
தஞ்சை பெரிய கோவில் போன்ற அமைப்புடைய சிகப்பு கற்களால் ஆன ராஜகோபுரம் விமானம் ஆகியவை அமைந்துள்ளது. 

இரண்டாம் இராஜராஜர், மூன்றாம் குலோத்துங்கன் #சோழர் கால #கல்வெட்டுகள் காணப்படுகின்றன, அவற்றில் நுந்தா விளக்கு எரிக்க கொடுக்கப்பட்ட தானம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பால் சிதைந்துள்ளது.. 

இக்கோயில் தொல்பொருள் நினைவுச் சின்னமாக ( ASI ) அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இக்கோயிலில் அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது உலோக செப்பு திருமேனிகள் கிடைத்துள்ளன. 

அழகும் ரம்யமும் நிறைந்த கோயில், வாய்ப்புள்ள அண்பர்கள் அவசியம் சென்று தரிசனம் செய்யவும் ..

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Monday, October 20, 2025

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் வரலாறு

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்த முதலாழ்வார்கள் மூவரும் ஒரே இடத்தில் தங்காமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரில் தங்கி, ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இந்த அடியார்கள் மூவரையும் கொண்டு திவ்யப் பிரபந்தங்களை உலகம் உய்வதற்காகத் தோற்றுவிக்க வேண்டும் என்று திருமால் திருவுள்ளம் கொண்டார்.

ஒருநாள் பொய்கை ஆழ்வார் பெண்ணையாற்றின் கரையில் இருக்கும் திருக்கோவலூர் என்ற ஊருக்குச் சென்றார். அந்த ஊரில் உலகளந்த பெருமாளாக மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ளார். பெருமாளின் வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இவருடைய இடது கையில் உள்ளது. அவரது திருவடியின் கீழ் பிரகலாதனும், மகாபலி சக்கரவர்த்தியின் மகனான நமுசி என்ற அசுரனும் உள்ளனர்.
பொய்கை ஆழ்வார் இந்த ஊரை அடைந்தபொழுது பலத்தமழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் செல்ல முடியாத நிலையில், அவர் அருகிலிருந்த மிருகண்டு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மழைச்சாரல் அடிக்காமல் இருக்கவேண்டிக் கதவை அடைத்துவிட்டு ஆசிரமத்தின் முன்பகுதியில் படுத்து திருமாலைப் பற்றி எண்ணலானார்.

சிறிது நேரத்தில் திருமாலின் திருவிளையாடலால் அதே இடத்திற்கு பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். இருட்டில் கதவைத் தட்டி, 'உள்ளே வரலாமா?' என்று கேட்டார். 'தாங்கள் யார்?' என்று பொய்கை ஆழ்வார் கேட்டார். அதற்கு பூதத்தாழ்வார், 'சுவாமி! அடியேன் திருமாலின் அன்பர்' என்று பதில் அளித்தார். 'ஆ! தாங்கள் திருமால் அடியவரா! இதோ வருகிறேன்` என்று சொல்லி, படுத்திருந்த பொய்கையார் எழுந்து கதவைத் திறந்தார்.
உள்ளே இருந்த இடம் ஒருவர் மட்டுமே படுக்கப் போதுமானதாக இருந்தது. ஒருவர் படுக்கும் இடத்தில் இருவர் அமரலாம் என்று இருவரும் அமர்ந்துகொண்டு, திருமாலின் திருவருளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர்.

சற்று நேரத்தில் மூன்றாவதாகப் பேயாழ்வார் அதே இடத்திற்கு வந்துசேர்ந்தார். கதவை மெதுவாகத் தட்டி, 'அடியேன் தங்க இடமுண்டா?' என்று கனிவாகக் கேட்டார். இதைக்கேட்ட பொய்கை ஆழ்வார், திருமாலின் திருவிளையாட்டை எண்ணி வியந்தார். முதலில் அடியேன் உடலை ஒடுக்கிப் படுத்திருந்தேன். பின்னர் பூதத்தார் வந்தார். நாங்கள் இருவரும் உட்கார முடிந்தது. இப்போது தாங்கள் வந்துள்ளீர்கள். மூவரும் இருள் நீங்கிப் பொழுது புலரும் வரை நின்று கொண்டிருப்போம்' என்று கூறினார். மூவரும், உலகளந்த பெருமாளின் திருவடிச் சிறப்பைப் போற்றியவாறு நின்றுகொண்டிருந்தனர்.

திடீரென்று அவர்கள் தங்களுக்கிடையே மேலும் யாரோ ஒருவர் புதிதாக வந்து விட்டதுபோல் உ உணர்ந்தனர். இடம் சிறிதும் இல்லை என்பதால் அவர்களுக்கு மூச்சுவிட முடியவில்லை. திருக்கோவலூர் பெருமானே பிராட்டியுடன் வந்து நின்றதால்தான் இவர்கள் நெருக்கப்பட்டனர். இதை அறியாத அவர்கள், 'இங்குப் புதிதாக வந்தவர் யார்? யார் இப்படி நெருக்குவது?' என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். இருளில் எதுவும் தென்படவில்லை.

அப்பொழுது பொய்கை ஆழ்வார் புறஇருள் நீங்கவேண்டும் என்று திருமாலிடம் வேண்டி முதல் திருவந்தாதியைப் பாட முற்பட்டு பின்வரும் முதல் பாசுரத்தைப் பாடினார்.

வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று.

பூதத்தாழ்வார் இறைவனைக் காணத் தடையாக இருக்கும் அகஇருள் விலகுவதற்காக, ஞானம் என்னும் அக விளக்கு ஏற்றுவதற்காக பின்வரும் இரண்டாம் திருவந்தாதி முதற் பாசுரத்தைப் பாடினார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா-நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

இவ்வாறு இந்த இரண்டு விளக்குகளாலும் அக இருளும் புற இருளும் விலகின. அவர்களுக்குத் திருமாலின் காட்சி கிடைத்தது. அப்போது மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார், அவர்கள் பெற்ற காட்சியை விவரித்துப் பின்வரும் மூன்றாம் திருவந்தாதிப் பாடலைப் பாடினார்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று. 

அப்போது திருமால் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் முதலிய ஐந்து ஆயுதங்களைக் கைகளில் கொண்டு, ஸ்ரீலட்சுமி தேவியுடன் சோதி வடிவமாகக் காட்சி அளித்து, 'எமது பக்தர்களாகிய உங்கள் மூவரையும் சேர்த்து வைக்கவே இப்படிச் செய்தோம்' என்று கூறி மறைந்தார்.

முதலாழ்வார் மூவரும் பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றனர். பின்னர் திருமழிசைக்குச் சென்று திருமழிசை ஆழ்வாரைக் கண்டு எம்பெருமானின் கல்யாண குணங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.

அவர்கள் மூவரும் யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து முடிவில் திருக்கோவலூரை அடைந்து அங்கு பரமபதம் எய்தினர்.

மற்ற ஆழ்வார்களுக்கு முன் அவதரித்து அவர்களுக்கு வழிகாட்டியாக திவ்யப் பிரபந்தங்களை முதலில் அருளியதால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று போற்றப் படுகிறார்கள். இந்த மூன்று யோகிகளும் பாலேய் தமிழர் என்று வழங்கப் பெறும் நற்றமிழர் ஆவர். இந்த முதலாழ்வார்கள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!

ஆழ்வார் அருளிய பாசுரம்

🌼🌼🌼🌼🌼🌼🌼

உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் - மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து.

பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி, 94)

அப்பிள்ளை இயற்றிய வாழித் திருநாமம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

செய்ய துலா ஓணத்தில் செகத்துதித்தான் வாழியே 
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே 
வையம் தகளி நூறும் வருந்துரைத்தான் வாழியே 
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே 
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே 
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே 
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே 
பொன் முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே !

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்ல திருக் கடன்மல்லை நாதனார் வாழியே இன்புருகு சிந்தைதிரி இட்ட பிரான் வாழியே

எழில்ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே

பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே.

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் !

திருக்கண்டேன் எனும் நூறும் செப்பினான் வாழியே 
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே 
மருக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே 
நெருக்கிடவே இடைகழியில் நின்றசெல்வன் வாழியே 
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே 
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே 
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே.

பேயாழ்வார் திருவடிகளே சரணம்!

பகவன் நாமமே பலம் நாமமே முக்திக்கு சாதனம் 

ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, October 19, 2025

அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிடய வீரபத்திரர்.

_வீரபத்திரர்_
சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர்.

தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம்.

அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி, தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது.

ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது.

கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்

பிரம்ம தேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரை வார்த்துத் தந்த போதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான்.

நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான்.

தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல் பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான்.

பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள்.

தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர்.

சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர்.

தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னி தேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்ம தேவன் தலை இழந்தான்.

வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார். திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக் கொண்டது.

தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார்.

வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன்.

தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம் தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாள்,மகா அஷ்டமி எனப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த வீரபத்திரரைக் குறித்து நோற்கப்படும் விரதம் அது.

புண்ணிய நதிகளின் காவலராக வீரபத்திரர் உள்ளார். கும்பகோணம் மகாமகக் குளத்தருகே அவரது சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமர்ந்த கோலத்தில், யோக நிஷ்டையில், சப்தமாதர்கள் திருமேனிகளுக்கு அருகில், வீரபத்திரரை தரிசிக்கலாம்.

வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் வெற்றிலை மாலை அணிவிப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கில் வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து, மாலையாக அணிவிப்பது, ஆடிப்பூர நாட்களில் நடைபெறும்.


ஆலயங்கள்

வீரபத்திரருக்கு, வடக்குத் திசை நோக்கியபடி தனிக்கோவில் அமைவதோடு, சிவாலயங்களில் உள்சுற்றில் தென்திசையில், சப்தமாதர்களுக்கு அருகில் வீரபத்திரரைக் காணலாம். அது தவிர தென் தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் எழுப்பப்பட்டுள்ள மகா மண்டபங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் மற்றும் நாட்டியமாடும் நிலையில் வீரபத்திரர் சிலைகளைக் காணலாம். வீரபத்திரரை மூலவராகக் கொண்ட தனி ஆலயங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. அரன்மைந்தன்புரம் என்ற அழகுப் பெயரை, தற்போது அனுமந்தபுரம் என்று ஆக்கிய தலம். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவிலுக்குச் தென்கிழக்கே 7கி.மீ. தொலைவில் உள்ளது. எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் விளங்குகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது.வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங் கூப்பியபடி நிற்பதைக் காணலாம்.மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியபடி,கீழ்க்கரங்களில் கத்தியும் கேடயமும் தாங்கிய கோலம்.வெண்ணெய் சாற்றுவதும்,வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் அமைத்து வெற்றிலை மாலை அணிவிப்பதும் தனிச்சிறப்பாகும்.
வீராவாடி-திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில்,20 கி.மீ.தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய கோவில். அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

ஆணவம் அழிந்து ஞானம் பிறந்த கதையே வீரபத்திரரின் அருட்கோலம்.திக்கெட்டும் வெற்றிகள் குவித்திட வீரபத்திரரைப் வணங்கி வருகின்றனர். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...