Monday, November 10, 2025

தீராத நோய் தீர்க்கும் சிவன் திருக்கோயில்கள்

 தீராத நோய் தீர்க்கும் திருக்கோயில்கள் 
        
  1.  திருவான்மியூர்  மருந்தீசுவரர் கோயில், மருந்து லிங்கம் , சென்னை                                                                                                                 
        
 2.    திருக் கச்சூர் மலை மேல்  மருந்தீஸ்வரர் கோயில்  மருந்து லிங்கம்.

✡️    3.  திருத் 
துறைப் பூண்டி  பிறவி மருந்தீஸ்வரர் கோயில் .   மருந்து லிங்கம்.    பிறவி நோய் உட்பட எல்லா நோயும் தீர்க்கும் பெரிய அருமருந்தாக ஈசன் விளங்குகிறார்.  

 4.   விருத்தாச்சலம் விருத்த கிரீசுவரர் கோயில்.  விருத்த கிரி லிங்கம்.     
ஆலகால விஷத்தால் முதியவள் ஆன உமை  விருத்த கிரீசரைப்  பூஜித்து முதுமை நீங்கி      இளமை பெற்றாள்.    
                                                                                                                                                                                               5.  திருநீலக்குடி நீலகண்டர் திருக் கோயில்.  நீல கண்ட லிங்கம். பரமேசுவரனைப்  பூசித்த அம்பிகை உடலில் பாய்ந்த ஆல கால விடத்தின் நீல நிறம் நீங்கப் பெற்றாள்.                                                                                                                                                                

⚜       6.  வைதீசுவரன் கோயில்.    வைதிய லிங்கம்.      எல்லா வைதியர்களுக்கும் மேலான  ஒரே பெரிய வைதியர் மருத்துவர் வைதீசுவரர். 
ருக் வேத மந்திரத்தால்  வெண்மணல் சிவ லிங்கமான  மண் தலம்.    முருகன் வழிபட்டது. 
    
💫    7.   திருக்கோகரணம் மிருதேசுவரர்  (மகா பல நாதர்) கோயில் . 

கோகர்ண லிங்கம். கர்நாடகத்தில் மங்களூருக்கு அருகே மிருதேசுவரம் தொடர் வண்டி நிலையத்திற்குப் பக்கம் உள்ளது.  

இராமனது பழி போக்கிய இராம லிங்கத்தை வழிபடுவதற்கு வட கயிலையிலிருந்து  வந்த உமையவள்  வழியில்  கொல்லும் விஷ நோயால் தாக்கப்பட்டாள்.     
              திருக் கோகரணத்தில்  அரன் நாமம் ஓதித் தீர்த்தத்தில் முழுகி எழுந்து கோகரண நாதரை வழிபட்டு ஈசனருளால் நோய் நீங்கினாள்.  

  🌳   *நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுகக் கொல்ல விட நோய் அகல் தரப்  புகல் கொடுத்து அருளு  கோகரணமே*   (சம்பந்தர்)   

 என கோகரணரை வழிபட்ட *பார்வதி  விஷ நோய் நீங்கி* நலம் அடைந்தாள்.                                                                                                                                 

🍁  8.  மதுரை சுந்தரேசர் கோயில்.  சுயம்புச்  சொக்க லிங்கம்.   
               
  🔴 *அருந்தமிழ் பழித்தனன் அடியேன்*                                                                                   

🌕   *வேண்டாது இகந்தேன் பிழைத்தேன்*     
                                                                             ✡️   *மெய் எரிவு தீரப் பணித்து அருளு தேவாதி தேவனே*   (நக்கீரர்)        
    
என அருமையான பாடலில் *அநாவசியமாகக் குற்றம் கண்டு விதண்டா வாதம் செய்த பாவத்தினால் நக்கீரருக்கு  வெப்பு நோய்*   உண்டானது.   

சுந்தரேசர் நாமம் ஓதிப் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பதிகங்கள்  பாடித் தொழுத போது  நோய் நீங்கி  நலம் அடைந்தார்.   
     
🙏  *பரா வணம் ஆவது நீறு*  
    
 🔔  *ஏல உடம்பு இடர் தீக்கும் இன்பம் தருவது நீறு*
         ஆலம் அது உண்ட மிடற்று எம் *ஆலவாயான் திருநீறே* 
     
🌸  *தென்னன் உடல் உற்ற தீப் பிணியாயின தீரச் சாற்றிய பாடல்*    

 என கூன் பாண்டியனது வெப்பு நோயையும் பிறவிக் கூனையும் ஆலவாயான்  ( சொக்க லிங்கம்,  வெள்ளியம்பல வாணர்)   திருவருளால் *பரா பரனது நிறமான வெள்ளை வண்ண விபூதி மகிமையால்*   திருஞான சம்பந்தர் தீர்த்து வைத்தார். 
      
🌷  9   திருவதிகை (பண்ணுருட்டி அருகே) திருவதிகை புரம் எரித்த வீரட்டானேஸ்வரர் கோயில்.  வீரட்டான லிங்கம்.  
      
 ⚜   *சாவாமே காத்து என்னை ஆண்டாய்*  (அப்பர்)     

   என  வீரட்டேசுவரர்  திருநாவுக்கரசரது உயிர்  கொல்லும் தீராத சூலை நோயைத் தீர்த்து அருளினார். 
       
⭐  10.  திருவாசி (திருப் பாச்சிலாச்சிராமம், திருச்சி அருகே ) மணிகண்டர் கோயில்.  மணிகண்ட லிங்கம். 
           கொல்லி மழவன் மகளுக்கு உண்டான முயலகன் என்ற முடக்கு வாத நோயை நஞ்சினை அமுதம் ஆக்கிய மணிகண்டர் திருவருளால்  திருஞான சம்பந்தர் தீர்த்து அருளி எழுந்து நடமாட வைத்தார்.    
                                                                                                                            🔯       11.    குத்தாலம் (திருத்துருத்தி ) உத்தர வேதீஸ்வரர் (சொன்னவாறு)  அறிவார்)  கோயில் .  உத்தர வேத லிங்கம்.    கும்ப கோணம் --- மயிலாடுதுறை  பாதையில்.   
 சுந்தரருக்கு உண்டான உடல் நோய் இக்கோயில் திருக்குளத்தில் ஈசன் நாமம் ஓதி முழுகிய போது  நீங்கி   மீண்டும்  மேனியழகு பெற்றார்.                                                                                               

⚜️        12.   திருந்து தேவன் குடி கற்கடகேஸ்வரர்  கோயில் .  
கும்ப கோணம் அருகே.   *சுயம்பு லிங்கம் அருமருந்தாக உள்ளது*.     
                                                                                                           🔯   *திரு மருவும் பொய்கை*  சூழ்ந்த  தேவன் குடி  *அருமருந்து ஆவன அடிகள்  வேடங்களே*  (சம்பந்தர்)           
                                                                                                                                         என தெய்வீகத் தீர்த்தம் உடைய  நோய் தீர்க்கும்  *அரிய மருந்தாக உள்ள சிவ வடிவங்களை*   தெய்வ மழலையார் துதிக்கிறார். 
           நண்டான  பராசக்தி  சிவ பூஜை செய்து அரு மருந்தீஸ்வரர்  அருளால் மீண்டும் அம்மன் ஆன கோயில்.                                                                                                       

13          திருச்செங்கோடு எனப்படும் கொடி மாடச் செங்குன்றீரில் ஊர் மக்கள் அனைவருக்கும் உண்டான நோயை தெய்வ பாலகர்

 *அவ்வினைக்கு இவ்வினையாம்*
       
   என்ற திரு நீல கண்டப் பதிகம் பாடித்  தீர்த்து வைத்து நலம் அடையச் செய்தார்.

இவ்வாறு  நோய்  தீர்க்கும் தலங்கள்  இன்னும் பலப்பல.   

*காய்ச்சல் போக்கும்  மூன்று முகம்,   மூன்று கரம்,  மூன்று கால் கொண்ட  சிவபெருமானுக்கு   ஜுர ஹரேஸ்வரர்*  என்று அருள்  நாமம். 

வைதீஸ்வரன் கோயில்,  
 திருவாரூர் தியாக ராஜர் கோயில், 
 முக்கூடல் பவானி  சங்கமேஸ்வரர்  கோயில் மற்றும் பல கோயில்களில் ஜுர ஹரேஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. 

*ஈசனுக்கு அணிவிக்கப்பட்ட   அபிஷேகம் செய்யப்பட்ட  விபூதியே எல்லா நோயையும் தடுக்கும் கவசமாக உள்ளது. முதல் மருந்தாக*  உள்ளது. 
                                                                                                                                                                             🌷   *ஆன  நீற்றுக் கவசம்*  அடையப்  புகுமின்கள் 

என்பது திருவாசகம்.      
                                              
🏵   *கங்காளன் பூசும் கவசத் திருநீறு*    

என்பது திருமந்திரம்                                                                                                         

🔴   *அருத்தம் ஆவது அவலம் அறுப்பது நீறு*                                                                                                             
     *வருத்தம் தணிப்பது  நீறு* வானம் அளிப்பது நீறு                                                          
              பொருத்தம் ஆவது  நீறு *புண்ணியர் பூசும் வெண்ணீறு*                                                                          
              திருத் தகு  மாளிகை சூழ்ந்த   *திரு ஆலவாயான் திருநீறே*  (சம்பந்தர்) .                                                                                                                                  

🔥    *மூல நோயான  ஆணவ மலம் கர்ம மலம்  பிறவி மலம் ஆகிய  எல்லா நோயும்  தீர்த்துப் பிறவாப் பேரின்பம் அருள்பவர்*  பரமேஸ்வரன் .                                                                                                                                    

⚜️    *மூல நோய் தீர்க்கும் முதல்வன்*  

என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.         

*மருந்தீஸ்வரர் அருள்* இல்லாமல் எந்த மருந்தாலும் பலன் இல்லை.  *வைத்தீஸ்வரர் அருள்* இல்லாமல் எந்த வைத்தியத்தாலும் வைத்தியராலும் பலன் இல்லை .  

மூல நோயான நான் என்ற ஆணவம் , பிறவிப் பிணி உள்ள யாராலும் எந்த நோயையும்.தீர்க்க முடியாது. 

சிவப்பிரியா

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

27 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள்

27 நட்சத்திரங்களுக்கான சிவ வடிவங்கள் :
 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது.  

* அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன் 
* 
* பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன் * கார்த்திகை - சிவபெருமான்
* 
* ரோகிணி - பிறை சூடிய பெருமான் 
* 
* மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்
* 
 * திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

 * புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் 

* பூசம் - நஞ்சுண்ணும் சிவன்
* 
 * ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

 * மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

 * பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

 * உத்ரம் - நடராஜ பெருமான்

 * ஹஸ்தம் - தியான கோல சிவன் 

* சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
* 
 * சுவாதி - சகஸ்ரலிங்கம்

 * விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

 * அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

 * கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

 * மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

* பூராடம் - சிவ-சக்தி-கணபதி
* 
 * உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

 * திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

 * அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

 * சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

 * பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

 * உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

 * ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்  

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, November 9, 2025

தருமபுர ஆதீனத்தின் சொந்தமான 27 கோவில்கள் உள்ளன.

தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.
வரலாறு
தருமபுர ஆதீனம் பொ.யு. 16-ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. குருஞான சம்பந்தர் தன் குருநாதரான 'சிதம்பரநாத மாசிலாமணி கமலை ஞானப்பிரகாசர்' உத்திரவின்படி காவிரித் தென்கரைத் தலமான, வில்வாரண்யம் எனப்பெறும் மயிலாடுதுறை அருகே திருத்தருமபுரம் அடைந்து மடம் ஒன்றை அமைத்தார். இது தருமபுர ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்று அழைக்கப்பட்டது.

கோவில்கள்
தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தியேழு கோவில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சமயக்குரவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் (இராஜன் கட்டளை), மயிலாடுதுறை (குமரக்கட்டளை), திருவிடைமருதூர் (பிச்சக்கட்டளை) ஆகிய கட்டளைகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைந்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடம். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு மவுன மட கட்டளை என்று பெயர். தருமபுர ஆதீனத்திற்கு காசி வரை சொத்துக்கள் உள்ளன.
கோவில்கள்
சிவலோகத்தியாகர் கோயில் (ஆச்சாள்புரம்)
முல்லைவன நாதர் கோயில் (தென்திருமுல்லைவாயில்)
சட்டைநாதசுவாமி கோயில் (சீர்காழி)
வைத்தியநாதர் கோயில் (வைத்தீஸ்வரன்கோயில்)
மகாலட்சுமீசர் கோயில் (திருநின்றியூர்)
வீரட்டேஸ்வரர் கோயில் (திருக்குறுக்கை)
வீரட்டேஸ்வரர் கோயில் (கீழப்பரசலூர்)
கம்பகரேஸ்வரர் கோயில் (திருப்புவனம்)
உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் (குத்தாலம்)
உசிரவனேஸ்வரர் கோயில் (திருவிளநகர்)
வீரட்டேஸ்வரர் கோயில் (திருப்பறியலூர்)
அமிர்தகடேஸ்வரர் கோயில் (திருக்கடையூர்)
அருணஜடேஸ்வரர் கோயில் (திருப்பனந்தாள்)
ஐயாறப்பர் கோயில் (திருவையாறு)
உஜ்ஜீவநாதர் கோயில் (உய்யக்கொண்டான் மலை)
கைலாசநாதர் ஆலயம் (கிடாரம்கொண்டான்)
பிரம்மபுரீஸ்வரர் கோயில் (திருக்குவளை)
யாழ்முரிநாதர் கோயில் (தருமபுரம்)
தர்ப்பாரண்யேசுவரர் கோயில் (திருநள்ளாறு)

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, November 8, 2025

ஞாயிற்றுக்கிழமை சூரிய சக்தியும் வராஹி அருளும்



இன்று ஒரு பவித்ரமான ஞாயிற்றுக்கிழமை. சூரியனின் ஆற்றலும் மகா வராஹி அம்மனின் சக்தியும் ஒன்றாக இணையும் நாள் இது. இன்று உங்கள் உள்ளத்தில் விழித்தெழும் ஒரு புதிய தெய்வீக சக்தி உண்டு — அது அம்மனின் அருள்வாய்ந்த “நம்பிக்கை”

🌕 பக்தியின் ஒளியில் பிறக்கும் புதுப்பிறவி

நம்மில் பலர் வாழ்க்கையின் சுழலில் சிக்கி, நம்பிக்கையை இழந்த ஒரு நிலையில்தான் வராஹி அம்மனின் பாதத்தைத் தேடி வருகின்றோம். ஆனால் ஞாயிறு என்பது சூரியனின் நாள் — அதாவது உள் பிரகாசத்தின் நாள்.
அம்மன் இன்று உங்களிடம் சொல்கிறாள்:

எத்தனை இருளாக இருந்தாலும், நம்பிக்கையின் ஒளி ஒருபோதும் அணையாது.

உங்கள் வாழ்க்கையில் நிழலாக மிதக்கும் பிரச்சனைகள், கடன்கள், உடல்நலக் கோளாறுகள், மன உளைச்சல்கள் — இவை அனைத்தும் உங்களின் “அறியாமை இருள்”. வராஹி அம்மன் அந்த இருளை அகற்றி உங்களின் அத்மா ஒளியை மீண்டும் தூண்டுகிறாள். 

 வராஹியின் அர்த்தம் – சக்தியின் ஆழ்ந்த ரகசியம்

“வராஹி” என்பது ஆழமான பூமி சக்தியின் பிரதிபலிப்பு. வராஹி அம்மன் பூமியிலிருந்து நமது ஆற்றலை மீண்டும் எழுப்புகிறாள்.
அவள் நம்மை ‘மனக் குழப்பம்’ என்ற சதுப்பிலிருந்து எழுப்பி, நமது சிந்தனையை மீண்டும் வானத்தின் பக்கம் தூக்குகிறாள். 🌿

அவளது முகம் சிங்கத்தின் ஆற்றலைப் போல, ஆனால் மனம் தாயின் கருணையைக் கொண்டது.
அவள் வீரம், ஞானம், கருணை என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறாள்.

🌹 ஞாயிற்றுக்கிழமை – சூரிய சக்தியும் வராஹி அருளும்

இன்று சூரியன் உச்சத்தில் பிரகாசிக்கும்போது, வராஹி அம்மன் அந்த ஒளியை “ஆத்மீக வெப்பம்” ஆக்குகிறாள்.
நீங்கள் மனஅழுத்தத்தில் இருந்தால், இன்றைய நாள் ஒரு ஆற்றல் மாறுபாட்டை தரும்.
சூரியன் “பிரகாசம்” அளிக்கிறான், வராஹி “பலம்” அளிக்கிறாள்.

சூரியன் + வராஹி = ஆன்மீக தைரியம் + வெளிச்சம் 

அதனால் இன்று காலை முதல் அம்மனின் பெயரை மனதில் உச்சரியுங்கள் —

ஓம் வராஹி மாதா நமஹா”
இது உங்கள் நரம்புகள் வரை ஆற்றலை ஊட்டும். 

🕯️ அம்மனின் அருள் வடிவில் மனத்தூய்மை

அம்மனின் உண்மையான அருள், வெளிப்புறச் சம்பத்தால் அல்ல; அது உள் மனத்தின் மாற்றத்தால் தான் உண்டாகிறது.
அம்மன் நம்மை மனக்கோபத்திலிருந்து, பயத்திலிருந்து, பொறாமையிலிருந்து, நம்பிக்கையின்மையிலிருந்து மீட்கிறாள்.

இன்று உங்கள் மனம் கலங்கியிருந்தால், அம்மனிடம் இப்படிச் சொல்லுங்கள்:

அம்மா, என் மனத்தை சுத்தப்படுத்து. என் சிந்தனையில் நம்பிக்கையின் விதையை விதை.” 

அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கண்களை மூடி, உங்கள் இதயத்தில் ஒரு தங்க ஒளி எழுவதை கற்பனை செய்யுங்கள்.
அது அம்மனின் சக்தி உங்களுக்குள் பரவுகிறது. 

வாழ்க்கைச் சவால்கள் – வராஹி அம்மனின் பாடங்கள்

1. நீங்கள் விழுந்தால், அதிலிருந்து எழுதல் தான் வெற்றி.
வராஹி அம்மன் நமக்குக் கற்றுக் கொடுப்பது — தோல்வி என்பது ஒரு வழிகாட்டி, முடிவு அல்ல.

2. பயம் என்பது ஒரு மாயை.
அவளது கருணைக் கண்கள் “நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று சொல்லும் போது, அந்த மாயை கரைகிறது.

3. நம்பிக்கை என்பது நவநிதி.
எந்த ஜபமும், எந்த பூஜையும், நம்பிக்கை இல்லாமல் அர்த்தமற்றது.

4. அவளது அருளை உணரும் ஒவ்வொருவரும் “மீண்டும் பிறக்கிறார்கள்.”
வராஹி அம்மன் மன நச்சை அகற்றி நமக்குள் புதிய உயிர் ஊட்டுகிறாள். 

அம்மன் வழிபாடு – இன்றைய வழிகாட்டல்

இன்றைய நாள் ஒரு சிறிய வழிபாட்டைச் செய்யுங்கள்:

காலை எழுந்தவுடன் கையால் மண் தொடுங்கள்.
“மண்ணே, அம்மனின் வடிவே, என்னை புனிதமாக்கு” என்று சொல்லுங்கள்.

9 தீபம் ஏற்றி, “ஓம் ஸ்ரீ வராஹி மாதாயை நமஹ” என 9 முறை ஜபியுங்கள்.

அன்னதானம் செய்ய முடியாவிட்டால், பறவைகளுக்கோ, நாய்களுக்கோ உணவு வையுங்கள்.
அது அம்மனுக்கே நேரடியாக செல்கிறது. 🕊️

மாலை நேரத்தில் ஒரு சிறிய மஞ்சள் குங்கும தீபம் ஏற்றுங்கள் — அந்த ஒளி உங்கள் வீட்டை காக்கும்.

🌺 மகா வராஹி அம்மன் மற்றும் உள் சக்தி எழுச்சி

வராஹி அம்மன் நம் மூலாதார சக்ரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை எழுப்புகிறாள்.
அது எழுந்ததும், நம் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் அற்புதமானவை.
நாம் திடீரென்று நோய் நீங்கியதைப் போல, மனஅழுத்தம் குறைந்ததைப் போல உணர்வோம்.

அது தான் “அம்மனின் அங்கீகாரம்.”
அவள் நம் முயற்சிகளை ஆசீர்வதித்து, அடையாளமில்லாத அதிசயங்களால் நம்மை காக்கிறாள். 

 நம் வாழ்க்கையின் அர்த்தம் – அம்மனின் திருப்பம்

அம்மனின் அருள் என்பது நம் வாழ்க்கையின் மீள் வடிவமைப்பு.
அவள் நம் நோக்கம், பண்பு, பழக்கம் அனைத்தையும் மெதுவாக திருத்துகிறாள்.
நம்மை உயர்த்தும் ஒவ்வொரு அனுபவமும் அவளது அன்பின் வடிவமே.

எனவே இன்று அம்மனிடம் சொல்லுங்கள்:

அம்மா, என் வாழ்க்கை உன் கரங்களிலே. என் திசை உன் திருக்கண்களில் பிரதிபலிக்கட்டும்.

🌕 உள் அமைதி – வராஹி அருளின் நிழல்

உங்கள் மனம் குழப்பமாக இருந்தாலும், ஒரு சிறிய நேரம் அமைதியாக அமர்ந்து “ஓம்” என ஜபியுங்கள்.
அந்த “ஓம்” உங்கள் நரம்புகளில் ஒலிக்கட்டும்.
அந்த அலைவேகம் அம்மனின் அன்புடன் இணையும்போது, மனம் தெளிவாகும்.

அம்மனின் அருள் “சத்தமில்லா சாந்தி.”
அவள் பேசாமல் குணப்படுத்துகிறாள்.

 நம்பிக்கை மீண்டும் பிறக்கும் நாள்

இன்று அம்மன் உங்களுக்கு சொல்கிறாள்:

உன்னுடைய வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை. நான் உன்னுள் இன்னும் இருக்கிறேன்.

அந்த ஒரு வரி தான் இன்று உங்களுக்கு தேவையான சக்தி.
அவள் உங்களுக்காக கதவுகள் திறக்கிறாள் — புதிய வழிகள், புதிய வாய்ப்புகள், புதிய ஆற்றல். 

தாயின் அருளால் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது

மகா வராஹி அம்மன் ஒரு தாயாக நமக்குத் தருவது ‘அன்பு வழியாக மாற்றம்’.
அவள் சினமூட்டும் தெய்வம் அல்ல; வழிகாட்டும் தெய்வம்.

அவள் நம் தவறுகளைப் பார்த்து தீர்ப்பளிக்கவில்லை; புரிந்து கொண்டு வழி காட்டுகிறாள்.

அம்மனின் அருளைப் பெற்றவர் எப்போதும் வெற்றி பெறுவார்.
ஏனெனில் அவள் நம்மை உடல், மனம், ஆன்மா என மூன்று நிலைகளிலும் காப்பாற்றுகிறாள். 

வராஹி அம்மன் ஆசீர்வாதம்

இன்றைய நாள் ஒரு திருப்புமுனை.
அம்மனின் ஒளி உங்களை நம்பிக்கையின் பாதைக்கு அழைத்துச் செல்லட்டும்.
உங்கள் வாழ்க்கையில் உள்ள இருள் கரைந்து, ஒளி மலரட்டும்.

உங்கள் இதயம் திடமாகட்டும்.
உங்கள் உடல் ஆரோக்கியமாகட்டும்.
உங்கள் மனம் அமைதியாகட்டும்.
உங்கள் வீடு சாந்தி நிறைந்ததாகட்டும். 

வராஹி அருள் மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் வராஹ்யை நமஹா
இதனை 9 முறை ஜபியுங்கள்.
ஒவ்வொரு முறை ஜபிக்கும் போதும், உங்கள் நெஞ்சில் ஒரு தங்க ஒளி பிரகாசிக்கிறது என்று கற்பனை செய்யுங்கள்.

அது அம்மனின் அருள் உங்கள் வாழ்க்கையில் ஓடத் தொடங்கும் நொடிதான். 

மகா வராஹி அம்மன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!
நம்பிக்கையும் தைரியமும் உங்களின் வாழ்வை நிரப்பட்டும்.
உங்கள் ஒவ்வொரு நாளும் அம்மனின் ஒளியில் மின்னட்டும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் திருவூறல் தக்கோலம்

அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், திருவூறல், தக்கோலம் அஞ்சல் -631 151
அரக்கோணம் வட்டம், 
ராணிப்பேட்டை மாவட்டம்.            

*மூலவர்:
ஜலநாதீஸ்வரர் / ஜலநாதேசுவரர், உமாபதீசுவரர்.

*தாயார்:
கிரிராஜ கன்னிகாம்பாள் (மோகன வல்லியம்மை)

*தீர்த்தம்:
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், கல்லாறு.                            

*இது சம்பந்தர் தேவாரம் அருளிய "பாடல் பெற்ற தலம்".                      

 *இது தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். 
*இத்தலத்தின் புராணப்பெயர் "திருவூறல்". இது தற்போது தக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.                

*இறைவனான ஜலநாதீஸ்வரரின் திருவடியில் இருந்து நீர் ஊறி வந்ததால், இத்தலம் 'திருவூறல்' என்று அழைக்கப்பட்டது. 
தல இறைவனுக்கும் ஜலநாதீஸ்வரர் என்ற பெயர் அமைந்தது. 

*அகோர வீரபத்திரர் தக்கன் தலையைக் கொய்த தலம் இது. தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் (தக்கன் - ஓலம்) இப்பதி 'தக்கோலம்' என்று பெயர் பெற்றது. இதற்கு அரண் செய்வதுபோல தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.        

*ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன் "மே மே' என்று எழுப்பிய ஒலியே சிவனைப் போற்றும் ஸ்ரீ ருத்ரத்தின் ஓர் அங்கமாக "சமகம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சமகம் முதல் முறையாக உச்சரிக்கப்பட்ட ஊர் என்ற பெருமைக்கு உரித்தாகுகிறது தக்கோலம்.       

*மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி. மூலவர் உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தக்ஷிணாயண காலத்தில் வெண்ணிறமாகவும் காட்சியளிக்கிறார். 

*இது பார்வதிதேவி வழிபட்ட திருமேனியாகும். ஆற்று வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என்ற அச்சத்தில் பார்வதி தேவி, லிங்கத்தை கட்டி  அணைத்த தடம் சிவலிங்கத் திருமேனியில் உள்ளது.              

*சுவாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது.    
*சந்நிதிக்கு எதிரில் ஓரத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அது கல்லால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

*அம்பாள் கிரிராஜ கன்னிகாம்பாள் வடக்கு நோக்கிய தனி சந்நிதியில்  நின்ற திருக்கோலம், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

*கோஷ்டமூர்த்தங்களில்      விஷ்ணுதுர்க்கை நீங்கலாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா முதலிய மூர்த்தங்கள் "அமர்ந்த நிலையிலேயே" உள்ளது சிறப்பு.       

*இங்கு தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குற்றுக்காலிட்டு (உத்கடிகாசனம் )    அபூர்வ காட்சி தருகின்றார்.       
 பக்தர்களின் துன்பங்களை தலை சாய்த்து கேட்பது போல், தலையை ஒரு புறமாக சாய்த்தபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.  இவருக்கு "ஒளர்வ" தட்சிணாமூர்த்தி என்பது சித்தர்கள் சூட்டிய பெயர் என சொல்லப்படுகிறது. இந்த நாமத்தை ஆண்கள் தியானித்து வந்தாலே பல பிறவிகளிலும் செய்த தவறுகள், பாவங்கள் பொடிப் பொடியாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவதாக நம்பிக்கை.

*குருத்தலமான இங்கு வியாழக்கிழமைகளில்  தட்சிணாமூர்த்தியின் அருள் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.  குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.  

*விஷ்ணு துர்க்கை அழகான வேலைப்பாட்டுடன் - இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்தும் ஒன்றால் கீழேயுள்ள மகிடத்தை ஊன்றியும், (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம்.

 *அருகில் ஓடும் கல்லாற்றின் கரையில் "நந்தி வாயிலிருந்து தீர்த்தம் வரும்" மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர்" கோயில் உள்ளது. 

*இங்கு உள்ள தீர்த்தம் சத்திய கங்கை தீர்த்தம்.           

*தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா,  யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவை தீர்க்கதா தனது யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்டும் என்று கூற, அதற்கு காமதேனு, இந்திரனின் அனுமதி இல்லாமல் தான் இங்கு தங்க இயலாது என்று கூறி  மறுக்க, தீர்க்கதா அதனை கட்டிப்போட  முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு  சாபமிட்டது. 
தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர்
தனது மகன் பெற்றசாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் உபாயம் வேண்டினார். நாரதரது அறிவுரைப்படி அவர் திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார்.

இறைவனார், தீர்க்கதா நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவழைத்து, அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற, அதன்படி தீர்க்கதா வழிபாடுசெய்து சாபவிமோசனம் பெற்றார்.                

*நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில்  அமைந்துள்ளது.

 *தக்கோலம் (திருவூறல்) அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.       

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, November 6, 2025

பெரியபாளையம் பவானிஅம்மன் திருவள்ளூர்.


தமிழகத்தின்
தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள 
#திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 
புகழ்பெற்ற 
சக்தி தலமான ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
#பெரியபாளையம்
#பவானிஅம்மன் என்ற #பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அல்லது பாளயத்தம்மன் கோயில் சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில், குண்டூர் செல்லும் வழியில், பெரியபாளையம் என்ற ஊரில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் துர்கை. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.. 

மூலவர்: பவானி அம்மன்

ஊர்: பெரியபாளையம்

மாவட்டம்: திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

*அம்மனின் திருக்கோலம்:
பவானி அம்மன் தனது முன்புற வலது கையில் சக்தி ஆயுதம். பின் புறக்கரத்தில் சக்கராயுதம். இடது பின் கையில் சங்கு முன்புறக் கையில் கபாலம் ஏந்தியுள்ளது. இந்தக் கபாலத்தில் கலையரசி, அலையரசி, மலையரசி மூவரும் இருப்பதாக ஐதீகம்.

*தலபுராணம்:

யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்திரசேனனுக்கு குமாரனாகத் தோன்றிய காலநேமி என்ற அரசகுல கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும் தேவகியையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேரை தானே செலுத்தி சென்றான். அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் சக்தியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது.

இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு வாசுதேவர் கம்சனை தடுக்க கம்சன் மறுத்து தேவகியை கொன்றேத் தீருவேன் என்று நின்றபோது வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன் கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார். ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல் வாசுதேவரையும், தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான். 

சிறைக்குள் தேவகி பெற்றெடுத்த ஒவ்வொரு சிசுவையும் வாசுதேவர் தன் சொல் காக்கும் நிலையில் கம்சன் முன் கொண்டு வந்து வைப்பார். கம்சன் அந்த சிசுக்களை துன்புறுத்தி அழித்தான். எட்டாவது கருவை கம்சன் எதிர்பார்த்திருந்த பொழுது கண்ணன் பிறந்தான். அந்தக்கண்ணனே நந்தகோபன் மனைக்குமாறி நந்தகோபால் மனையிலிருந்த மாயாதேவியை தேவகியிடம் சிசுவாக விடப்பட்டார். முன்னர் வசுமதியென்றும், தாரா என்றும் இருந்தவள், அஸ்தியின் தேவியாகத் தோன்றிய இரப்பி அரசனது மந்திரியின் குமாரியாக விளங்கி நந்தகோபனை மணந்த யசோதை மாயையைப் பெண் மகளாகப் பெற்றெடுக்க, தேவகி கண்ணனைப் பெற்றெடுத்தாள்.

பிறந்த கண்ணன் தமது பஞ்சாயுதத்துடன் வாசுதேவருக்கும், வேதகிக்கும் காட்சி தந்து, அவ்விருவரின் முற்பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறித் தன்னை துஷ்டநிக்ரகம் செய்து நிஷ்ட பரிபாலனம் செய்ய நந்தகோபர் மனைவியான யசோதையிடம் கொண்டுபோய் விட்டு , அங்குள்ள அதர்மத்தை ஒழிக்க, அகில உலகில் குமரியாக வடிவெடுத்து வந்துள்ளவரும் விஷ்ணுவின் நாபிக்கொடியில் பிரம்மன்னுடன் உதித்த ஆன்மாக்களை மயக்கும் கோவம் கொண்டவரும் திருமாலினுடைய கட்டளைப்படி இராணியின் புத்திரர் அறுவரையும், தேவகி வயிற்றில் விட்டுச் சிசுவாகப் பிறக்கச் செய்து தான் மட்டும் யசோதையின் வயிற்றில் பிறந்து, தேவகியிடம் சென்று இருந்தபொழுது, தன்னைப் பற்றிக் கொல்ல முற்பட்ட கம்சனை மார்பிலுதைத்து ஆகாசம் அடைபவள் அங்குள்ள அவளை இங்கு கொண்டு வந்து வளர்ப்பீர்களாக என்று உடன் வழிநின்று கட்டளையிட்ட கருணை கடலாம் கண்ணபிரான்.

உலகுய்யப் பிறந்த கண்ணன் உற்றமுறையில் யசோதையிடம் வளர்ந்து வருங்கால் தன்னைக் கொல்லும் நோக்குடன் பால்தர முற்பட்ட பூதகியையும் அவள் கணவன் பூதனையும் கொன்று, சகடா சூரனையும் திருவாவர்த்தனைக் கொன்று பெருந்தவ முனிவரும் சாக்கியரால் தமக்கு நாமகரணம் செய்யப் பெற்றும் , ஆயர்பாடியிலுள்ள கோபியர்களின் நவநீதம் உண்டும், அங்கு விளையாடும் குழந்தைகளைபோல் கண்ணன் மண் உண்ட காட்சியை யசோதை கண்டார்.

கண்ணனை அச்சுறுத்த நிலையில் கண்ணன் தன் தாய்க்குத் தான் மண் சாப்பிடவில்லை என்பதைக் காட்டும் முறையில் தனது வாயைத் திறந்து தன் முன் அடங்கிய அண்டங்கள் அனைத்தையும் அன்னை யசோதை அறியக்காட்டியவன் கண்ணன், அதே நேரத்தில் மாயையானவன்.

வாசுதேவரால் கண்ணன் என்ற குழந்தை இரவோடு இரவாக ஆயர்பாடிக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது பெரும் மழைக்கும் பேரிடிக்குமிடையே ஆதிசேசன் படம் எடுத்துக் குடைபிடிக்க, கங்கையாறு விலகி வழி விட கிருஷ்ணன் என்ற குழந்தை யசோதை இல்லத்தில் விடப்பட்டு அங்குள்ள மாயை என் குழந்தையைப் பரமாத்மாவின் அசரீரி சொற்படி தேவகியிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது.

தனது வாக்குறுதியை காப்பாற்ற வாசுதேவர் எட்டாவது குழந்தை பிறந்ததை பற்றி கம்சர்க்கு தகவல் கொடுத்தார். அதைக்கேட்ட கம்சன் சினங்கொண்டு சுடுசொல் பேசி என்னைக் கொல்லத் தோன்றிய அற்ப சிசுவே உன்னை கண்ட துண்டமாக்கி மீள்வேன் என்று கூறி, சிறைச்சாலை நோக்கிச் சென்ற கம்சன் தேவகி கையிடத்து வைத்துள்ள குழந்தையைப் பறித்தான். பெண் சிசுவாக இருந்ததைக் கண்டு ஆண்மையற்ற ஒரு சிசு என்னைக் கொள்வதா? அதனை நான் விட்டு வைப்பதா? என்று அங்கம் முழுவதும் பொங்கும் சினத்தால் அச்சிசுவை ஆகாயத்தில் எறிந்து பாறையில் மோதவிடமுற்பட்டான் அதிகாலை சூரபத்மன் வெற்றிவேல் முருகனிடம் போரிட்டு, படைபலமிழந்து தவித்து நின்ற காலத்தில் அவனுக்கு உதவும் நோக்கோடு சிறந்த சைனியங்களை எழுப்ப மிரகசஞ்சீவி இருக்கும் இடம் கூறி மறைந்தவளும், சம்பரனின் தேவியாக விளங்கியவளும் சக்தியின் குணவடிவம், தவம், மோகம், அவித்தை அனித்தம், ஆகியவற்றால் உண்டாகின்ற பல்வேறு ஆற்றலையும் உயிரினங்களுக்கு வரும் தீமையை நீக்குகின்ற ஆற்றலை பெற்றவளுமான அந்த மாயவான் வழியிருந்து கம்சனை நோக்கி பாவத்தின் திருவுருவே உன்னைக் கொல்ல உதித்தவன் என்னை ஒத்த பேராற்றல் மிக்கவன் ! நந்தகோபன் மனையில் வளர்ந்து வருகிறான். உன்னையும் உன்னால் உருவாகும் தீமை அனைத்தையும், நீ செய்யும் தவறுகள் பலவற்றையும் அவன் அழித்தே தீருவான் என வான்வழி நின்று கூறி ஆன பல்லுயிரும் காக்க, அவ்விடம் விட்டு அகன்று இங்கு வந்து அமர்ந்தவளே அன்னை பவானி.

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும், உற்சவ மூர்த்தி அம்மனும்,  அம்மன் தலை மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.  ரேணுகாதேவிதான் இப்படி சிரசு மட்டுமே காட்சியளிக்கும் கோலத்தில் இருப்பாள். மேலும் கோவிலினுள் இருக்கும் பரசுராமன் சிற்பமே சாட்சி என்கின்றனர். ரேணுகாதேவி பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகாதேவிக் காயங்களுடன், இப்பகுதிவாழ் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் நம்ம பக்கம் ஒரு நம்பிக்கை உண்டு.  

உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்து இத்தலத்தைப் புனிதப்படுத்தினார்கள் என்கிறது தல புராணம்.

நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். (திருவண்ணாமலை மாவட்ட ஆரணி இல்ல. ஆரணின்ற ஆறு ஓடுவதால் அந்த ஊருக்கு ஆரணின்னு பேரு. எங்க ஊரில் ஓடுவது கமண்டலநாகநதி

ஓய்வெடுத்த பின்,  அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சியடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகாதேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.

வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு  ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரகம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். 

மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி அளிக்கிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக அன்னை அமர்ந்திருக்கிறாள். இந்த அன்னையின் மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகா தேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்கிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன.

இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி (ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்த தேவி) ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி, ஆகியவர்களையும் தரிசிக்க முடியும்.

இக்கோயில் பல வருசங்களுக்கு முன் வரை மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும்தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். 

வெளிப் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கென தனித்தனி சந்நிதி உண்டு.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.

*பிரார்த்தனைகள்:

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம்.
பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

மீனவக்குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி. கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வர பவானியை துணை நிற்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்த கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது அந்த பெண்களின் வேண்டுதல். இது இன்றும் நடக்கும் வழக்கம். மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இவளே காவல் என்கிறார்கள் மக்கள்.

விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது.

நேர்த்திக்கடனுக்கு என்று ஒரு ஆலயத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது பெரிய பாளையம் தான் என்று சொல்லலாம். எத்தனை விதமான நேர்த்திக்கடன்கள் தான் இங்கு! தீச்சட்டி ஏந்தல், வேப்பம் சேலை உடுத்தல், கோழி சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சம், மாவிளக்கு-அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல் என ஆலயம் எங்கும் பக்தி அலை பரவிக் கிடப்பதை காணலாம்.

அங்கப்பிரதட்சணம் காலை 5 மணி முதல் 9 மணி வரையும், வேப்பஞ்சேலை நேர்த்திக்கடன் காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், கல்யாண கரகம் காலை 5 மணி முதல் 12 மணி வரையும் இங்கு நடைபெறுகின்றது.

இங்குள்ள வேப்பமரம் பிள்ளையில்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் சிறப்பு கொண்டது. இங்கு தொட்டில்கட்டி வழிபட்டால், பிள்ளை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு இங்கு வந்து பலன் பெற்றவர்கள் இன்றும் சத்திய சாட்சியாக அம்பிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தினமும் காலை 8 மணி, நண்பகல் 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்த தீர்த்தம் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் என்பதால் இது பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அமைவிடம்:
 
பாளையம் என்றால் படை வீடு என்ற பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் உள்ளது. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, November 5, 2025

தீராத நோய் தீர்க்கும் திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர்

தீராத நோய் தீர்க்கும்
திருமயேந்திரப்பள்ளி மகேந்திரப்பள்ளி...!
சிவஸ்தலம் பெயர்
திருமயேந்திரப்பள்ளி

இறைவன் பெயர்-
திருமேனியழகர், 
அந்தமிலா அழகர்

இறைவி பெயர்-
வடிவாம்பிகை

தல வரலாறு-

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான்.

பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் 
ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும்.

சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதீகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.

அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். 

இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும்.

ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. 

இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

சிறப்புகள்

ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

அமைவிடம்

சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம்.

அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உள்ளது.

சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்
மயேந்திரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி அஞ்சல்
வழி ஆச்சாள்புரம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்


இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...