Friday, November 21, 2025

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் மயிலாடுதுறை


உலகப் புகழ்பெற்ற 108 வைணவத் திவ்ய தேசங்களில் சோழநாட்டுத் திருப்பதியானதும்,
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இடமான 
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#தேரழுந்தூர் என்ற #திருவழுந்தூர்
 #ஆமருவியப்பன்
(#தேவாதிராஜன்,
கோசகன்) 
#செங்கமலவல்லிதாயார்
திவ்ய தேச திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

வட மொழியில்கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு.

மூலவர் : தேவாதிராஜன்

உற்சவர்: ஆமருவியப்பன்

தாயார் : செங்கமல வல்லி

தீர்த்தம் : காவிரி, தர்ஷன புஷ்கரணி

விமானம் : கருட விமானம்

புராண பெயர் : திருவழுந்தூர்

ஊர் : தேரழுந்தூர்

மாவட்டம்: மயிலாடுதுறை 

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

"செம்பொன்மதிள் சூழ்தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் கொம்பிலார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் அம்பராவும் கண்மடவார் ஐம்பலாணையும் அழுந்தூரே.

-திருமங்கையாழ்வார்.

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம். இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். 
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடணும் உள்ளனர்.

#தேரழுந்தூர்  என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி:

இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான்.  தன் தேரின் நிழல் , எதன் மீது  விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.

புராண வரலாறு:

பிரம்மா கிருஷ்ணரை வழிபட விரும்பினார் , எனவே கிருஷ்ணர் இல்லாதபோது, கோகுலத்திலிருந்து அனைத்து பசுக்களையும் கன்றுகளையும் எடுத்து தேரழுந்தூருக்குக் கொண்டு வந்தார். கிருஷ்ணர் கோகுலத்திற்குத் திரும்பியபோது, என்ன நடந்தது என்பதை உணர்ந்தார், ஆனால் தேரழுந்தூருக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் மேலும் பசுக்களையும் கன்றுகளையும் உருவாக்கி, கோகுலத்திலேயே இருந்தார். பிரம்மா தனது தவறை உணர்ந்து, தேரழுந்தூரில் தனக்கு பிரத்யக்ஷம் கொடுக்கும்படி கிருஷ்ணரிடம் கேட்டார், அதை அவர் ஆமருவியப்பனாகச் செய்தார், அதனுடன் ஒரு பசுவும் கன்றும் இருந்தது. இந்தக் கோயிலில் உள்ள கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் ஒரு பசு மற்றும் ஒரு கன்றுடன் சித்தரிக்கப்படுகிறார்.

இங்கு விஷ்ணுவின் அருகில் காணப்படும் கன்று, சொக்கத்தோட்ட விளையாட்டின் போது சிவபெருமானின் சாபத்தின் விளைவாக பூமிக்கு வந்த அவரது சகோதரி பார்வதியைக் குறிக்கிறது. எனவே இந்த இடம் சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்துடன் தொடர்புடைய கோயில்களின் பட்டியலில் முதன்மையானது ( பார்வதி திருவாவடுதுறையில் பூமிக்கு வந்தார் , மேலும் விஷ்ணு ஒரு மாடு மேய்ப்பராக தெரெழுந்தூரில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்).

இந்திரன் ஒரு காலத்தில் திவ்ய தேசங்களில் ஏதேனும் ஒன்றில் கிரீடம் மற்றும் விமானத்தை வழங்கும்படி கருடனை நம்பினான். கருடன் (மைசூருக்கு அருகில் உள்ள) திருநாராயணபுரத்திலும், இங்குள்ள விமானத்திலும் (கோயிலின் விமானம் கருட விமானம் என்று அழைக்கப்படுகிறது) கிரீடத்தை வழங்கினான். எனவே கருடன் - பெரிய திருவடியாக - இங்கு சிறப்பு அந்தஸ்தைப் பெறுகிறார், மேலும் வெளியே ஒரு தனி சன்னிதிக்கு பதிலாக, இறைவனுக்கு அடுத்த கர்ப்பக்கிரகத்தில் இடம்பெறுகிறார்.

பொது தகவல்:

மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

#தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.

#தலப்பெயர் விளக்கம்: 

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “தேரெழுந்தூர்’ ஆனது.

#கருட விமானம்: 

ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “”108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு” என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்க விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

#தலவரலாறு :

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

கருட விமானம் :

இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார்.

மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும்.

தல தீர்த்தம்

இக்கோவிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமா வாசை. அமாவாசை யன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது.

#கம்பர் சிலை:

கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும்.

அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தி யருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

 
தேவாதி ராஜப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது.

கோயில் அமைப்பு:

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடணும் உள்ளனர்.

இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.

அரசனின் ஆணவத்தை அடக்கிய கிருஷ்ணர்:

ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார். 

தேரழுந்தூர் (இதுதான் சரியான பெயர், சமீப காலமாக இது தெரழுந்தூர் என்று சிதைக்கப்பட்டுள்ளது), தமிழில், தேர் தரையிறக்கப்பட்ட இடம் என்று பொருள் ( தேர் = தேர், அழுந்து = தரையிறங்குதல், ஊர் = இடம்). இந்த இடம் எப்படிப் பெயர் பெற்றது என்பது பற்றி பல ஒத்த கதைகள் உள்ளன, இவை அனைத்தும் உபரிச்சரவசு (வாசு என்று பெயரிடப்பட்டது, மேலும் உபரிச்சர என்ற முன்னொட்டு அவரது பறக்கும் தேரைக் குறிக்கிறது. சமஸ்கிருதத்தில், உபரி = மேல் / மேல், மற்றும் சர = நகர்வு)...

தேரின் நிழலில் வந்த அனைத்து உயிரினங்களும் எரிந்து போகும். விஷ்ணு மற்றும் இங்குள்ள பசுக்கள் மீது அவர் பறக்கவிருந்தபோது, இறைவன் தனது பெருவிரலை தரையில் பலமாக அழுத்தி, தேரை பூமிக்கு வரச் செய்தார்.
அவரது ராணி இறைவனை வணங்க விரும்பியபோது, உபரிசரவாசு தேரை நிறுத்த மறுத்துவிட்டார். இது விஷ்ணுவை எரிச்சலடையச் செய்தது, அவர் தேரை பூமிக்குக் கொண்டு வந்தார்.
தவம் செய்யும் முனிவர்கள் மீது அந்த தேர் பறந்து செல்லும், அது அவர்களை வருத்தப்படுத்தியது, அதனால் அகஸ்தியர் முனிவர் அதை பூமிக்குக் கொண்டு வந்தார்.

தேரழுந்தூர் சோழர்களின் தலைநகராக இருந்தது, கரிகால சோழன் தனது காலத்தில் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு) மூலக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது . கட்டமைப்பு கட்டுமானத்தைப் பொறுத்தவரை, இது 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு இடைக்கால சோழ கோயில் . இந்தக் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் (11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ) காலத்திலும் , 14 ஆம் நூற்றாண்டில் பிற்கால சோழ மன்னர்களாலும் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

*திருமங்கையாழ்வார்:

தேரழுந்தூர் கோவிலுக்குப் போகிறவர்கள், கோவிலின் வெளிப் பிராகாரத்தில் 'திருமங்கை மன்னன் மண்டபத்தில் திருமங்கையாழ்வாரின் சந்நதியைக் கண்டு வியப்பார்கள். ஆமாம், கோவிலுக்குள்ளேயே ஆரோகணித்திருக்க வேண்டிய இவர், ஏன் வெளியே வந்தார்?

ஒவ்வொரு தலமாகச் சென்று பெருமாளைத் தரிசித்து மங்களாசாசனம் செய்துவந்த ஆழ்வார், இந்தக் கோவிலுக்கு வந்தபோது தயங்கினார். இது பெருமாள் கோவில்தானா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மூலவர் பெயர் தேவாதிராஜன் என்று கேள்விப்பட்ட அவர், அது தேவர்களுக்கெல்லாம் ராஜனான இந்திரனோ என்று யோசித்தார்.

திருமால் தலங்கள் தவிர பிறிதொன்றில் ஆர்வம் கொள்ளாதிருந்த திருமங்கையாழ்வார், ஒரு முடிவுக்கு வந்து, அந்தத் தலத்தை விட்டுப் புறப்பட்டார். நாலடி தூரம் கூட நடந்திருக்க மாட்டார், பளிச்சென்று, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி உடலில் பலவீனம் ஏற்பட்டது. அதுவரை உற்சாகமாக, ஆரோக்கியமாக இருந்த தனக்கு திடீரென்று என்ன வந்தது? மெல்லத் திரும்பிக் கோவிலைப் பார்த்தவர் அப்படியே பரவசமானார். உள்ளிருந்து பெருமாள் அவரைப் பார்த்து, ‘‘இங்கிருப்பது உன்னைக் கவர்ந்தவனான நான்தான். மயங்காதே, உள்ளே வா,’’ என்று அழைப்பது போலிருந்தது. அதேகணம் அவருடைய சோர்வு முற்றிலும் நீங்கியது.

உடனே உள்ளே ஓடோடிச் சென்று பரந்தாமனைக் கண்களால் ஆரத் தழுவினார். பாதம் பணிந்து நெக்குருகினார். இந்தத் தலத்தை விடுத்து வேறொரு தலம் செல்ல நினைத்த தன் கால்களுக்கு அருள் விலங்கிட்டுத் தடுத்த இந்த இறைவன், தன் தந்தையாரான வசுதேவரின் கால்களில் கம்சன் பூட்டிய விலங்கை அறுத்தெறிந்த கிருஷ்ணனாக அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வந்தார்.

உடனே மடை திறந்த வெள்ளம்போல பாசுரங்கள் பொங்கிப் பெருகின. ஆமாம், மொத்தம் 45 பாசுரங்களால் இந்த தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார். அவற்றில், செங்கமலவல்லித் தாயாரையும் இணைத்துப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்படித் தான் ஆட்கொண்ட ஆழ்வாருக்கு இன்றைக்கும்கூட முக்கியத்துவம் தந்து சிறப்பிக்கிறார் பெருமாள். ஆமாம், ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் தனக்கு அமுது நிவேதிக்கப்பட்ட பிறகு, அந்த அமுதினை கோவிலின் அனைத்து மரியாதைகளுடன் ஆழ்வாருக்கும் சமர்ப்பிக்குமாறு பணிக்கிறார்.
இது மட்டுமல்ல, தேவாதிராஜன், உற்சவர் ஆமருவியப்பனாக திருவீதிப் புறப்பாடு போகிறார் என்றால், அவர், முதலில் நிற்பது திருமங்கையாழ்வார் சந்நதி முன்பாகத்தான். குடை, சாமரம், தீவட்டி, மங்கள வாத்தியங்கள் என்று எல்லா மரியாதைகளுடன், ஆழ்வாருக்கே முதலில் சடாரி ஆசி அருளி திவ்யமாய் தரிசனம் தருவார். அதற்குப் பிறகே திருவீதி உலா ஆரம்பிக்கும். சம்பிரதாயப்படி கோவிலிலிருந்து சுவாமி புறப்பாடு தொடங்கும்போதே அடியவர்கள் பிரபந்தங்கள் பாடுவார்கள். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் ஆமருவியப்பன் ஆழ்வாருக்குத் தன் முதல் தரிசனம் தந்த பிறகு, இவர் சந்நதியிலிருந்துதான் பாட ஆரம்பிப்பார்கள்.
இது மட்டுமல்ல, இங்கே திருமங்கையாழ்வாருக்கு, திருக்கார்த்திகைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். வைபவத்தின் பத்தாம் நாளன்று, ஆமருவியப்பன் தன் கருவறையிலிருந்து உற்சவராகப் புறப்பட்டு இந்த ஆழ்வார் சந்நதிக்கு வந்து தங்குவார். இங்கேயே மண்டகப்படி கண்டு, ஆழ்வாருக்கு ஆசி வழங்குகிறார்!

*பிரார்த்தனை:

இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும்  வழி பிறக்கின்றது.

மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3  கி.மீ.  தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். 

ஓம் நமசிவாய

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கருடன் வழிபட்ட ஒன்பது சுயம்பு நரசிம்மர்கள்.

கருடன் வழிபட்ட ஒன்பது சுயம்பு நரசிம்மர்கள்...!
செவ்வாய்க்கிழமை நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

(1) அகோபில நரசிம்மர்: 
                   உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

(2) பார்க்கவ நரசிம்மர்: 
                   மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

(3) யோகானந்த நரசிம்மர்: 
                     மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

(4) சத்ரவத நரசிம்மர்: 
                  கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

(5) க்ரோத (வராக) நரசிம்மர்: 
                  பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

(6) கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: 
                 மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

(7) மாலோல நரசிம்மர்:
                 "மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.
           அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

(8) பாவன நரசிம்மர்:
                பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

(9) ஜ்வாலா நரசிம்மர்:
                 மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன. சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.
              இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.
           இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

யோக நரசிம்மரின் சிறப்பு:
               குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார். விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்
நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தஞ்சாவூர் பேராவூரணி மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம்,            மருங்கப்பள்ளம் சிவன் கோயில் 

இக்கோயில் பேராவூரணிக்குக் கிழக்கில் உள்ள சேதுபாவா சத்திரம் செல்லும் சாலையில், 5 கி.மீ. சென்றவுடன் குருவிக்கரம்பை உள்ளது, இந்த இடத்தில் வடக்கில் திரும்பி மூன்று கிமி தூரம் சென்றால், மருங்கப்பள்ளம் சிவன் கோயில். உள்ளது. 
 ஔஷதபுரி என்றும், மருந்துப்பள்ளம் என்றும் முன்னர் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மருங்கப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர்  சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது இறைவன் திருவருளால் அதிலிருந்து ஒர் பகுதி  இவ்வூரில் விழுந்தது. . விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்த திருக்குளமானது. மலையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் பரவியது.  இதனால் இவ்வூர் மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. 

இறைவன் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். 
இறைவியின் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. 

சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி குமாரர்கள்;  இவர்கள் இருவரும் பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக ஔஷாதா குரு பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். 

அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன நீள் வட்ட வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து ஔஷதீஸ்வரர்  என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். இந்த லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பதுபோன்று, நாம் வேறு எந்த கோயில்  லிங்கத் திருமேனியிலும் காண முடியாது. 

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் திருவாதிரை அன்று சூரிய பகவான் அதிகாலை நேரத்தில் மருந்தீஸ்வரரை தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வது கண்கொள்ளாக் காட்சி. அன்றே நடராஜமூர்த்தி திருவீதியுலா நடைபெறுவது சிறப்புடையது. அன்று தேவலோக மருத்துவர்களுக்கு (அஷ்வினி குமாரர்கள்) நன்றிக்கடனாக அஸ்வ பூஜை நடைபெறும்.

தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோஜி மன்னர் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்தின் கீழ் தன் அரசை நடத்தி வந்தார். ஆங்கிலேயர் அந்த   சமயம் நெப்போலியனை வென்றிருந்தனர்.  அதனால் ஆங்கிலேயர் வெற்றிக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க எண்ணி மனோரா ஒன்றை கடற்கரை ஒட்டி அமைத்தார்,  அதன் பணிகளை பார்வையிட சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுக்கையில் இருந்தார்.  அப்போது அவரது கனவில்  ஒரு குரல் “மருந்துபள்ளம் போ உன் நோய்கள் நீங்கும் உனக்கு உதவ மச்ச முனிவர் வருவார்” என கூறியது அதன்படி மன்னர் அடுத்த நாள் மருந்துப்பள்ளம் சென்றார் அங்கிருந்த தீர்த்த குளத்தில்  நீராடி மச்ச முனிவர் கொடுத்த மூலிகைகளை உண்டு இறைவனை வணங்கி குணமடைந்தார்; அதன் நன்றிக்கடனாக மிகப்பெரிய  அளவில் ஆலயத்தை  விரிவு படுத்தி திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்தார். முக்கிய அமைச்சராக பணியாற்றிய அநிருத்தப் பிரம்மராயர் என்பவரால் செப்பனிடப்பட்டது. அவரின் திருவுருவ சிலையை நந்தி அருகே தரிசிக்கலாம்.

இரண்டாம் சரபோஜி  மருந்துப்பள்ளம் எனப்பட்ட கிராமத்தை இக்கோயிலுக்கே  தானமாகத் தந்துள்ளார், 
கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் எதிரில் பெரிய அளவிலான ஒரு தீர்த்தக்குளமும் உள்ளது. அதன் கரையில் ஒரு பெரிய பாதிரி மரமும் உள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கருவறை முகப்பு மண்டபம் நந்தி மண்டபம் பலிபீடம் என வரிசையாக உள்ளது. கருவறையில் இருக்கும் மருந்தீசரின் வாயிலில்  பெரிய துவாரபாலகர்களுள்ளனர். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். எப்போது கவசம் சார்த்தியே வைத்துள்ளனர்.  

தெற்கு நோக்கிய அம்பிகையின் வாயிலிலும் இரு துவாரபாலகியர் உள்ளனர். மருத்துவநாயகி அம்பாள் சன்னதிக்கு  மேற்குபுறத்தில் ஒரு திறக்கப்படாத சுரங்கபாதை உள்ளது என கூறுகின்றனர்.  அம்பிகையை  வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும், ஒற்றுமை நிலைக்கும் ஆரோக்கியத்தை தருபவள் என்பது நம்பிக்கை.

முற்றிலும் கருங்கல் திருப்பணியாக கோயில் மாற்றப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சிற்றாலயங்களில் விநாயகர் முருகன் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார் பார்க்க மிகுந்த அழகுடன் இருப்பது சிறப்பு. வடகிழக்கில் பைரவர் மேற்கு நோக்கிய சனி சூரியன் சந்திரன் உள்ளனர். 

 உடல்நிலை பாதிக்கப்பட்ட  அன்பர்கள்  அபிஷேக தீர்த்தம் வாங்கி, இறைவன் பிரசாதமாக உண்ணும் பொழுது நோய்கள் உடனே நீங்கும். அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம் என்கின்றனர். 

எல்லோருக்கும் எதவது ஒரு மருத்துவ பிரச்னை இருத்தல் கூடும் அதனால் கோயிலுக்கு  வருவோர் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கும் ஏற்பாடுகளுடன் வாருங்கள். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, November 20, 2025

ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்!

ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்!
கும்பகோணம் திவ்யதேச யாத்திரையில் அடுத்த கோயில் கவித்தலம் என்னும் கபிஸ்தலம்,திருவையாறு அருகே!

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு

— நான்முகன் திருவந்தாதி (திருமழிசையாழ்வார்)

இன்று கபிஸ்தலம் (கவித்தலம்) என்ற காவரிக்கரை திவ்வியதேசப் பெருமாளான “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணனை” திருமழிசைபிரான் மங்களாசாசனம் செய்த பாசுரம். இத்தலம் பாடல் பெற்றது இந்த ஒரே ஒரு பாசுரத்தால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவ மூர்த்திக்கு ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற திருநாமம். உத்சவரின் திருநாமம் கஜேந்திர வரதன். தாயார் ரமாமணிவல்லி மற்றும் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை.

ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற யானை அழைத்தபோது, அதற்கு அபயம் அளித்த பெருமாள், கஜேந்திர வரதன்.கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்) அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் இது நடந்தாக நம்பிக்கை.

ஆஞ்சநேயர் இந்த தலத்தில் வழிபட்டதாக வரலாறு. கபி என்றால், குரங்கு என்று ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் இந்த ஊர் கபி ஸ்தலம் என்று ஆனது!

கஜேந்திர மோட்சம் நடந்த இடமாக பீகார் மாநிலம் பக்ஸர் என்ற இடத்தில் சோன்பூர் என்ற ஊர் சொல்லப்படுகிறது. ஆனால் அத்தரிசனத்தை இவ்விடத்தில் (கபிஸ்தலம்) இருந்தபடி ஹனுமன் தரிசிக்க ஆசைப்பட, அவரின் ஆசைக்கு இணங்கிய பெருமாள் இவ்விடம் வந்து ஹனுமனுக்கு காட்சி கொடுத்த ஸ்தலம்

கோயில் நேரங்கள்
இந்த கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர்.

*பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர்*
கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. 

இங்கு அம்பாள் கோல் வளங்கையம்மையுடன் பதஞ்சலியீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் மதிப்பு மரியாதையும் பணிசெய்யும் இடத்தில் கிடைக்கும்.

மேலும் பதவிஉயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிராத்தனைகள் நிறைவேறியதும் சாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் செலுத்துகின்றனர். 

இங்குள்ள அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபடுகிறார்கள்.

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள இக்கோவிலுக்கு மதுகவனம் என்ற பெயர் உண்டு சிவன் இங்கு சிறிய லிங்கமாக காட்சி தருகிறார்.

*நடராஜப் பெருமானின் திருநடனக்காட்சி*

 சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலங்களுள் 32வது தேவாரப் பதியாகப் போற்றப்படுவது திருக்கானாட்டு முள்ளூர். 

மேற்கானாடு என்று அழைக்கப்பட்ட இந்த தலம் தற்போது கானாட்டாம்புலியூர் என்றழைக்கப்படுகிறது. ஆதியில் சூரியன் தனது பெயரால் இங்கு தீர்த்தம் ஏற்படுத்தி, இத்தல ஈசனை பன்னீர் இலைகளாலும், பன்னீர் புஷ்பங்களாலும் பூஜித்து, பேறு பெற்றுள்ளான். 

இந்திரனும் இங்கு ஈசனைப் பூஜித்துள்ளான்.பரந்தாமனின் பாம்பணையாய் இருந்த ஆதிசேஷன், பதஞ்சலியாய் உருக்கொண்டு, தில்லைக்கு வந்து, சிற்றம்பலவாணனை வணங்கி, வழிபட்டு, அவரது நாட்டியக் காட்சியினைக் கண்டுகளித்தபின், தலயாத்திரை புறப்பட்டார். 

பரம்பொருளான பரமேஸ்வரனிடம் கொண்ட தீராப்பற்றின் காரணமாக, கொள்ளிடக்கரை மீது பூமரங்களும், முட்காடுகளும் சூழ்ந்த இடந்தன்னில் தேவர்கள் பூஜித்த சிவலிங்கத்தைக் கண்டு பூசனைப் புரிந்தார். 

மீண்டும் இங்கு நடராஜப் பெருமானின் திருநடனக்காட்சி கண்டு ஆனந்தம் அடைந்தார்.

இவர் பூஜித்த காரணத்தால் இத்தல ஈசர் பதஞ்சலிநாதர் எனப் போற்றப்படுகின்றார்..

 ஆலயத்தின் எதிரே சூரிய புஷ்கரணி அகன்று காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஆலயம் அழகிய மூன்று நிலை சிறிய ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. 

நேராக ஸ்வாமி சந்நதி. முன்மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தின் இடப்புறம் அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியுள்ளது. 

அம்பிகை இங்கு நின்றவண்ணம், மேலிரு கரங்களில் அக்கமாலை மற்றும் தாமரையுடனும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகவும் கொண்டு அற்புத தரிசனமளிக்கிறாள். கோல்வளைக்கையம்மை என்றும் கானார்க்குழலியென்றும் அழைக்கப்படுகின்றாள்.

மகாமண்டபத்தின் இடப்பக்கம் ஆலய உற்சவ விக்ரஹங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டத்தில் முறையே தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பார்த்தவாறு கணபதி சந்நதி அமைந்துள்ளது. 

பதஞ்சலி முனிவரது கற்சிலையும் உள்ளது. இத்தலத்தின் விருட்சமாக வெள்ளருக்கஞ்செடி விளங்குகின்றது..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, November 19, 2025

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:
திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்)
ஊர்: திருக்கூடலூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர்: வையம் காத்த பெருமாள்
தாயார்: பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
உற்சவர் தாயார்: புஷ்பவல்லி தாயார்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம். வராஹம் பூமியை இங்கே உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து ஸ்ரீதேவி தாயாரோடு அங்கு காட்சி அளிக்கிறார்.

கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ

ரேற்றா னெந்தை பெருமானூர் போல்

சேற்றேர் உழவர் கோதை போதூண்

கோற்றேன் முரலுங் கூடலூரே.

அம்பரீஷ வரதர்

அம்பரீஷன் என்ற மன்னர், திருமால் மீது தீவிர பக்தி கொண்டு, தன் படைகள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். எதிரிகளிடம் தன் நாட்டை இழந்த நிலையிலும், திருமாலின் திருநாமத்தையே உச்சரித்து, அவருக்காக விரதங்கள் மேற்கொண்டு வந்தார். 

ஒருசமயம் ஏகாதசி விரத நாளில், மன்னரை சந்திக்க துர்வாச முனிவர் வந்தபோது, மன்னர் அவரை கவனிக்கவில்லை. கடும் கோபத்துக்கு ஆளான முனிவர், மன்னரை சபித்தார். வருந்திய மன்னர், தன்னைக் காக்குமாறு திருமாலிடம் வேண்டினார்.

 தன் பக்தனை காப்பதற்காக, முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். தனது தவறை உணர்ந்த முனிவர், திருமாலிடம் மன்னிப்பு கோரினார். திருமால் முனிவரை மன்னித்தருளினார். 

அம்பரீஷன் திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டார். இதன் காரணமாக, பெருமாளுக்கு ‘அம்பரீஷ வரதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பு என்பதற்கு ஏற்ப, பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் பிரயோகச் சக்கரத்தை வைத்துள்ளார்.

கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வையம் காத்த பெருமாள் (உய்யவந்தார்) கையில் செங்கோல் ஏந்தி அருள்பாலிக்கிறார். தாயார் பத்மாசினி (புஷ்பவல்லி) தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன. 

கோயில் மண்டபத் தூண்களில் ராணி மங்கம்மா, அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு பின்புறத்தில் உள்ள பலா மரத்தில் சங்கு வடிவம் தோன்றியுள்ளது. பெருமாளின் சக்கரம் துர்வாச முனிவரை துரத்திச் சென்றபோது, இங்கு பிரதானமாக சங்கு இருந்துள்ளதை உணர்த்தும்விதமாக, தல விருட்சத்தில் சங்கு வடிவம் உள்ளது.

 பெருமாளுக்கு கற்கண்டு, வெண்ணெய் படைத்து வணங்கினால் செல்வம் பெருகும், குடும்ப வாழ்க்கை சீர்படும் என்பது நம்பிக்கை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நோய்களைத் தீர்க்கும் முழையூர் பரசுநாதர் கோவில்.

நோய்களைத் தீர்க்கும் முழையூர் பரசுநாதர் கோவில்...!
மூலவர்: பரசுநாதர் 
அம்பாள்: ஞானம்பிகை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் முழையூரில் இருக்கும் கோவில் தான் அருள்மிகு பரசுநாத சுவாமி திருக்கோவிலாகும். 

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பாடல்களில் இது வைப்புத் தலம். 
இக்கோயில் பழையறை தென் தளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 

பெண் நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியார் பிறந்த ஊர் இது.

அந்த காலத்தில் 'முழவு' என்ற வாத்தியத்தில் வேத ஒலியை துல்லியமாக வாசிப்பார்கள்.

 சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த முழவு வாத்தியத்தை வாசிப்பதாக நம்பப்படுகிறது. இது ஒருவகையான மேள வாத்தியமாகும்.

இந்த பரசுநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் அக்ஷயதிருதியை அன்று இந்த முழவு வாத்தியத்தை வாசிக்கிறார்கள். அதனால் தான் இந்த ஊருக்கு முழையூர் என்ற பெயர் வந்தது.

தலவரலாறு

பரசுராமர் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க  சிவனை பிரதிஷ்டை செய்து

வழிபட்ட தலம்.அதனால் தான் இங்கு உள்ள சிவபெருமானுக்கு பரசுநாத சுவாமி என்ற பெயர் வந்தது.

காமதேனுவின் மகளான நந்தினி இறைவனை வழிபட்ட தலம்

சிவலிங்கத்தின் அரிய வடிவங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். இறைவன் எட்டு முகங்களுடன் (நீண்ட கூம்பு நெடுந்திடை நாதர் என்பது தமிழ் பெயர்) கொண்ட நீண்ட தண்டு கொண்ட கூம்பு வடிவில் தோன்றினார் மற்றும் இது பீஜாக்ஷர லிங்கமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது. 

இங்கு சிவபெருமான் வட்ட வடிவில் எட்டு பட்டைகளுடன் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

மூலவர் தவிர 

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரும் 

இருக்கிறார். 

திருதியை இக்கோயிலில் பிரார்த்தனைக்கு முக்கியமான நாள். 

வயிற்றுக் கோளாறுகள், பிபி போன்ற சில நோய்களால் அவதிப்படுபவர்கள்  நலம் பெற அன்று நெய் சாதம் பிரசாதத்துடன் சிறப்புப் பிரார்த்தனை செய்கிறார்கள். 

தரிசு நிலங்கள் போன்ற விளைச்சல் இல்லாத சொத்துக்கள் உள்ளவர்கள், மாதுளை விதைகளை இறைவனுக்கு ஒரு சிறப்பு வகையான மாலையை சமர்பிப்பார்கள். 

சொத்துக்களை இழந்தவர்கள் தாங்களே தொடுத்த மல்லிகைப்பூ மாலை அணிவிப்பர். 

திருதியை நாட்களில், இக்கோயிலில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும் - 

சிவன், பார்வதி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். 

இறைவனை வழிபட திருதியை ஒரு முக்கியமான நாள்.

அமைவிடம்

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் சென்று அங்கிருந்து பட்டீச்சரம் சாலையில், சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் இவ்வூரை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...